Thursday, February 11, 2016

இறுதிச்சுற்று


இறுதிச்சுற்று

கொஞ்சம் லேட் என்றாலும், மனதில் நினைத்ததை எழுதிவிடலாம் என்பதால் தான்......

அரண்மனை 1 முதல் நாள் இரவுக்காட்சி ஹாஸ்டலே வெக்கேட் ஆனதைப் போல எல்லோரும் சென்று பார்த்த திரைப்படம். ஆனால் என்னவோ தெரியவில்லை, அரண்மனை 2 யாருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை, இன்னும் சொல்லப் போனால் விருப்பமும் இல்லை. இறுதிச்சுற்று பட ரிலீஸன்று க்ளாஸ் நண்பர்கள் மாலைக் காட்சி சென்று வந்து படம் குறித்து ஏகத்துக்கும் புகழ்ந்தார்கள். என்ன டா என விமர்சனம் படிக்காமல் ஸ்டார்ஸை மட்டும் பார்த்தேன், 4 ஸ்டார் இருந்த்து. அட, மிஸ் பண்ணக் கூடாது என அடுத்த நாள் இரவுக்காட்சிக்கு கிளம்பினோம். ( எப்போதும் இரவுக்காட்சியில் பார்ப்பது தனி சுகம், அதும் பார்த்துவிட்டு வாட்ஸ்மேனுக்கும் ட்யூட்டருக்கும் தெரியாமல் ஹாஸ்டல் சுவரை ஏறிக் குதித்து வரும் த்ரில்லும் கூட ) படம் நன்றாக இருக்கிறது என்ற வாய்மொழி விமர்சனம் பரவியிருந்ததால் நல்ல கூட்டம். அதுவும் இளைஞர்கள் கணிசம். சனி இரவுக்காட்சி, நெல்லையின் பெரிய தியேட்டரில் (பிவிடி) 80 % நிரம்புவது சாதாரண விசயம் அல்லவே..?

Monday, December 7, 2015

கமல்ஹாசனுக்கு பதில் சொல்வீர்கள்.... மக்களுக்கு..?


 கமல்ஹாசனுக்கு பதில் சொல்வீர்கள்.... மக்களுக்கு..?




தமிழக மக்களின் மனிதத்தையும் மக்கள் ஒற்றுமையையும் கண்டு இந்தியா மட்டும் அல்ல உலகமே மகிழ்ச்சியடைந்திருக்கிறது. மீட்பு பணிகள்  கடந்து மறுகுடியமர்வு வரைக்கும் உதவிக்கரம் நீண்டு கொண்டிருக்கிறது. எல்லாமுமாக இருந்து செயல்படுவது பிறபகுதி பொதுமக்களும் தன்னார்வலர்களுமாகத் தான் இருக்கிறார்கள். அப்படியானால் அரசு...? இருக்கிறது, ஸ்டிக்கர் ஒட்ட, அடியாட்களை வைத்து மிரட்ட, நொடிக்கொருமுறை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கினங்க என்று வசனம் பாட, அதற்கும் மேல் அறிக்கை அர்ர்ச்சனை நடத்த. வெட்கம் மானம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

கமலஹாசன் அவர்கள் கூறிய கருத்துக்கு 3 பக்க அளவுக்கு கண்டன அறிக்கை விடத்தெறிந்த அரசுக்கு மக்களுக்கு ஆறுதல் சொல்லிக் கூட அறிக்கை வெளியிட முடியவில்லை. அறிக்கை கூட வேண்டாம் டிவியில் கூடவா  தோன்றி ஒரு உரையை நிகழ்த்தக்கூடாது. ஆளுங்கட்சியின் இயலாத் தனமும் அதிகார குவிப்பும் இப்போது வெளிப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். எதற்கெடுத்தாலும் தலைமையின் உத்தரவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் மந்திரிகள், பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதிலளிக்க திராணி இல்லாத மந்திரிகள் என அமைச்சராக இருப்பதற்கான தகுதிகளையே இழந்து நிற்கிறது அதிமுக அரசு.

மீட்புப் பணிகளுக்கு ராணுவம் வந்திராவிட்டால் அதிமுக அரசு ஒன்றுமே செய்திருக்காது என்பது தான் பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த ஆதங்கம். ஆனால் நொடிக்கொருமுறை மாண்புமிகு முதலமைச்சர் ஆணைக்கினங்க எனும் வார்த்தையைக் கேட்டுக் கேட்டு காது எறிகிறது. மியாட் மருத்துவமனை பிரச்சனை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் துறை செயலாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதும், அமைச்சர்களுக்கான கேள்விகளுக்குக் கூட அதிகாரிகளே பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதும் என்ன நடக்கிறது என்பது புரியாதது போலவே தேமே என உட்கார்ந்திருந்த அமைச்சர்களை பார்க்கும் போது எரிச்சலும் கோபமும் வந்தது. இத்தனைக்கும் அரசின் உயர் பொறுப்பு அமைச்சர்கள் அவர்கள்.

ஒரு நல்ல அரசாக இருந்திருந்தால் நிவாரண பொருள் சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தி தேவைப்படும் இடங்களுக்கு அரசே அனுப்பியிருக்கலாம்.பலவித குழப்பங்களுக்கு முடிவு கட்டியிருக்கலாம்.  உயர் நீதி மன்றம் குட்டு வைத்தபின்பே இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டது என்பது கூட மறைக்கப்பட்டு ஒவ்வொரு பேருந்திலும் முதல்வரின் படத்தை ஒட்டி மலிவு விளம்பரம் தேடிய அரசு தான் இந்த அரசு. எதற்கெடுத்தாலும் விளம்பரம் தேடும் இந்த செயல் திமுக ஆட்சியில் கூட இருக்கவில்லை எனபதே நிதர்சனம். ஆனால் நாளை இதே ஒரு பாணியாக மாறிவிடும். ஒரு பேரிடர் ஏற்படும் போது மக்களின் முதல் எதிர்பார்ப்பு முதல்வரோ அமைச்சரோ வந்து ஆறுதல் சொல்வார்கள் என்பதாகத் தான் இருக்கும். அது தான் நடைமுறையும் கூட. ஆனால் முதலமைச்சரோ சென்ற வெள்ளத்திற்கு கார் கண்ணாடியை கூட இறக்காமல்  பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்து வாக்காளப் பெருமக்களே என வாக்கு சேகரித்துவிட்டு சென்றார். இந்த முறை வேறு வழியில்லாமல் ஹெலிகாப்டரில் பார்வையிட்டு ? சென்றார். அவ்வளவு தான், ஆளையே காணோம். டிவியில் கூடதோன்ற நேரமில்லை, அந்த அளவு அரசுப் பணியில் பிசி.

வழக்கத்திற்கு மாறாக மத்திய அரசே நேரடி நிவாரணம் அளிக்கும் அளவுக்கு மெத்தனமான மாநில அரசாக இருக்கிறது.தன்னார்வலர்களுக்கும் அரசுக்குமான ஒருங்கிணைப்பு முழுவதும் இல்லை இன்னும் கூட. எந்த செயல்களிலும் இல்லாத அளவு இந்த முறை பொதுத் தளத்திலும், சமூக வலைதளங்களிலும் படு தோல்வி அடைந்திருக்கிறது ஆளும் அரசு என்றுதான் சொல்ல வேண்டும்.  குறிப்பாக இளையவர்கள் மத்தியில் முற்றிலும் மதிப்பிழந்து செல்லாக் காசாக மாறிவிட்டது அரசின் செயல்பாடுகள். இது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும். ஆனால் வெற்றியை தீர்மானிக்கப் போவது பணம் தான் என முடிவெடுத்து செயல்படுகிறார்கள் போலும். எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது அதே போலத் தான் எல்லோரையும் பணம் கொடுத்து வாங்கிட முடியாது.  PREDISASTER PREPARATION, DURING DISASTER MITIGATION ல் தான் தோல்வி, RE-HABITATION , RECONSTRUCTION  யாவது சீரிய முறையில் செய்து இழந்த பெயரை மீட்கப் பாருங்கள். இல்லை என்றால் தமிழகத்தில் உங்கள் இருப்பே கேள்விக்குள்ளாக்கப் படும்.

Tuesday, December 1, 2015

வடகிழக்கு பருவ மழை - 1


                        வடகிழக்கு பருவ மழை - 1


எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருடம் வடகிழக்கு பருவமழை பின்னி எடுத்து வருகிறது. மழையின் அளவும் பாதிப்பும் குறையும் என்று எதிர்பார்க்கும் போதெல்லாம் அதிகமாகிக் கொண்டே வருகிறது . ஒரு புவிதகவலியல் மாணவனாக எனக்கு  இந்த மழை பற்றியும் மழையின் பாதிப்புகளுக்கான காரணம் குறித்தும் என்னுடைய பார்வையில் புரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த பதிவை எழுத முடிவு செய்தேன். பைனல் இயர் ப்ராஜெக்ட் வேறு இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை. இதையே எடுத்துவிடலாமா எனும் எண்ணமும் வருகிறது. டேட்டா கிடைப்பது தான் கடினம். பார்க்கலாம்.

2005 என்று நினைக்கிறேன் .  எங்கள் ஊர் கண்மாய் நிறைந்து உபரி நீர் வெளியேறிய வருடம். நம்ம தெற்கு வெள்ளாற்றில் கடையக்குடி பாலத்துக்கு மேலே தண்ணீர் சென்றது. சைக்கிளில் சென்று வேடிக்கை பார்த்தது இன்னும் நியாபகம் இருக்கிறது. நம்ம மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுதும்  நல்ல மழை. பெரும் பாதிப்புகள். ஆனால் இந்த முறை வட தமிழகமும் தென் தமிழகமும் மட்டும் தான் பாதிப்பு. உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் அவ்வளவு பாதிப்பு இல்லை. சொல்லப்போனால் மழைஅளவு இன்னும் சராசரி அளவைக்கூட எட்டவில்லை. ஆனாலும் இவ்வளவு உயிர் சேதம் பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன. அதற்கான காரணத்துக்குள் நான் போக விரும்பவில்லை. அது பல செய்தித் தாள்களிலும் தொலைகாட்சி விவாதங்களிலும் அலசப்பட்டுவிட்டது.

தமிழகத்தின் சராசரி மழை அளவு 958-970 மி.மீ. அதாவது வடகிழக்கு,தென்மேற்கு,கோடைமழை அனைத்தையும் சேர்த்து. இதில்  50 -60 %வடகிழக்கு பருவமழைக்கானது. கோவை,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் இரண்டு பருவத்திலும் மழை பெறக்கூடியவை. தேனி,சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் இரண்டிலும் சுமார் மழையே பெறக்கூடியது.  வடகிழக்கு பருவ மழை காலம் எனபது அக்டோபர் முதல் டிசம்பர் வரை. டிசம்பரை சேர்த்தே பெய்திருக்க வேண்டிய  வ.கி மழை சராசரி  485 மி.மீ.ஆனால் டிசம்பரை சேர்க்காமலேயே இது வரை 440 மி.மீ வரை பெய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சென்னை மாவட்டம் மட்டும் அல்ரெடி நூற்றாண்டு சாதனைய  தாண்டிருச்சு. இப்பவே 1000 மி.மீ தாண்டி நாட் அவுட்டா போய்கிட்டு இருக்கு. இன்னும் மூன்று இடங்களில் லோ ப்ரெஸ்ஸர் (low pressure )  உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது ( IMD data ). அதில் ஏதாவது புயலாக இருந்தால் தமிழ்நாட்டுக்கு கெட்ட காலம் தான்.

2013 ஆம் ஆண்டு கேதார்னாத் பெருவெள்ளம் குறித்து மறந்திருக்க மாட்டோம். அந்த பெருவெள்ளத்திற்கு மிகமுக்கிய காரணம்  அதீத மழைப்பொழிவு (sudden rainfall). அதுவும் மேகம் முழுதும் மழை மேகமாக இருந்திருக்கிறது.(cloud monitoring தொழில்நுட்பம் இன்னும் இந்தியாவில் அதிகளவு வளர்ச்சியடையவில்லை ) அதை நமது வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறியதால் அத்தகைய இழப்பை சந்திக்க நேர்ந்தது. ஆனால் இந்த முறை சென்னை மழைப் பொழிவை துல்லியமாக கணித்தும் கோட்டை விட்டது ஆளும் அதிமுக மற்றும் செயல்படாத முதலமைச்சர். அதற்குள் போக விரும்பவில்லை.

அந்தமானுக்கு தெற்கே உள்ள கடல்பகுதியும் கன்னியாகுமரிக்கு தெற்கே லட்சத்தீவுக்கு கிழக்கே உள்ள கடல் பகுதியும் தான் இந்திய பருவ மழைக்கு 80-90% காரணமாக இருக்கிறது. அதாவது இந்த பகுதிகளில் தான் காற்றழுத்த வேறுபாடு ஏற்பட்டு காற்றழுத்த தாழ்விநிலை,புயல்,சூறாவளி உருவாகி மழை மேகங்களை உருவாக்குகிறது. இந்த கடற்பகுதி நேரடியாக பசிபிக் நீரோட்டங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே தென் பசிப்பிக்கில் ஏற்படும் மாற்றம் நேரடியாக இந்த பகுதியிலும் மாற்றம் நிகழக் காரணமாய் இருக்கிறது. அங்கே ஏற்படும் வெப்ப மாறுபாடு இங்கேயும் சற்று குறைவாக ஏற்படுகிறது. அது கடற்பரப்பு அழுத்தத்திலும் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. தென் பசிபிக்கில் உருவாக்கப்படும் பருவ மாற்றங்களான எல்நினோ,லாநினா இந்திய பருவ மழையுடன் தொடர்பு உடையதா என்று நான் மேற்கொண்ட மினி பிராஜெக்டில்  ( இதையே மெயின் பிராஜெக்டாக எடுக்கவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் , உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன் ) குறிப்பிடத்தகுந்த முடிவுகள் கிடைத்தது. அதற்கும் இப்போதைய மழைப் பொழிவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா ...............?அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாய் பார்ப்போம்........!

Monday, November 30, 2015

நடிகர்கள் என்ன செய்தார்கள்...?


                    நடிகர்கள் என்ன செய்தார்கள்...?



தமிழ்நாட்டில் தற்போது ஒரு ட்ரெண்ட் உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது நடிகர்கள் எனப்படும் திரைக்கலைஞர்கள் வெள்ளத்தால் தத்தளிக்கும் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் ? எவ்வளவு பணம் கொடுத்தார்கள் ? என்ன ஆறுதல் சொன்னார்கள் ? என்று. இது காலங்காலமாக  சொல்லப்பட்டு வருவது தான் என்றாலும் சமீபமாய் அது கொஞ்சம் ஓங்கி ஒலிக்கிறது. இந்த தமிழன்டா க்ரூப்பின் வீச்சு அதிகமானதிலிருந்து குறிப்பாக அந்நிய அல்லது வேற்று மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்களின் மீது நேரடித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகிறது. இருக்கட்டும் இப்பொழுதாவது அறிவு வந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டாலும் இது நியாயமான வாதமா என யோசித்துப் பார்த்தால் உண்மை புரியும்.

எல்லா செயல்களுக்கும் பிறருடைய உதவியை  எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய இயலாத்தனமோ அதைவிட நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது  முட்டாள் தனம். தமிழக முதலமைச்சராக இருப்பவர் தன்னுடைய தொகுதிக்கு மட்டும் வந்து கார் கண்ணாடியைக் கூட இறக்காமல் வாக்காள பெருமக்களே என்று ஆறுதல் சொல்லிச் சென்ற விநோதம் உலகில் வேறு எங்கும் நடைபெற முடியாது. அதைக் கேள்வி கேட்பதை விடுத்து, வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்கள் பிரதிநிதிகள் மக்களுடைய வரிப்பணத்தை செலவு செய்வதற்கு கூட யோசிக்கும் நிலையை கேள்வி கேட்பதை விடுத்து கேவலம் காசுக்கு பொழுதுபோக்கும் கூத்தாடிகள் ஏன் செய்யவில்லை என்று கேட்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

வழக்கறிஞர்,மருத்துவர்,பொறியாளர் போன்று நடிகரும் ஒரு தொழிலாளர் அவ்வளவே. அதைத் தாண்டி அவர்களுக்கு கிடைப்பது பிரபல்யம்,  புகழ் வெளிச்சம், கூடுதல் சம்பளம். எம்.ஜி.ஆர் ஒரு திரைப்படத்தில் பாடுவார் "நாடென்ன செய்தது உனக்கு என்று கேள்விகள் கேட்பதை விடுத்து நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு" என்று. ஆம் அடுத்தவர் என்ன செய்தார் என்று குறை கூறும் நாம் என்ன உதவி செய்தோம் என யோசிக்க வேண்டும் முதலில். உதவி என்பது வற்புறுத்தாமல் செய்வது. பலனை எதிர்பார்க்காமல் செய்வது. மனமுவந்து செய்வது. அதை கட்டாயப்படுத்தியோ விதிமுறைகள் வகுத்தோ செய்யச் சொல்வது உதவி செய்பவருக்கும் பொறுத்தமானதல்ல, உதவி பெறுபவருக்கும் ஏற்புடையதல்ல.

மக்கள் இல்லாமல் திரைக்கலைஞர்கள் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல மக்கள் இல்லாமல் அரசியல்வாதிகளும் இல்லை. திரைக்கலைஞர் நம்மை பொழுது போக்குபவர் மட்டுமே. ஆனால் அரசியல்வாதிகள் நம்மை ஆளவும் செய்பவர்கள். ஆனால் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என்று எழும் குரல்களை விட திரைக்கலைஞர்கள் உதவி செய்ய வேண்டும் என எழும் குரல்களின் வீச்சு அசாத்தியமானது. அது நமக்கு பழகியிருக்கலாம்.ஆனால் அது தவறு என்பதை மறுக்க முடியாது.அப்படி இருந்தும் சில பல நடிகர்கள் உதவி செய்கிறார்கள். உதவி செய்தாலும் செய்த உதவியை கேள்வி கேட்பார்கள். இந்த நடிகர் இவ்வளவு தான் செய்ய முடியுமா? எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று... இது அதைவிட பெரிய அயோக்கியத்தனம். உதவி எனும் பெயரில் செய்யும் சிறு துரும்பும் பாராட்டத்தக்கதே எனும் எண்ணம் வருவதேயில்லை.

அடுத்து ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு பாடலிலும் ஏன் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு இதை செய்வேன் அதை செய்வேன் என்று உதார்விடும் நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்குப் பிடித்த ரஜினி கூட இந்த வகை தான். அதற்காக அவர் செய்வார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம் இல்லாமல் வேறென்ன ?  ரஜினி மீது சமயம் கிடைக்கும் போதெல்லாம் காரி உமிழும் செயல் செய்யப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த தமிழன்டா க்ரூப்ஸ் இதற்கு முதல் காரணம். அவர்களுக்கெல்லாம் வரலாறு தெரியவில்லை. இல்லை தெரிந்து கொண்டே நடிக்கிறார்கள். தமிழக சினிமா வரலாற்றில் பொது விசயத்திற்கு குரல் கொடுப்பத்திலும் நிவாரணம் செய்வதிலும்  ரஜினியைப் போன்ற ஒரு முன்னுதாரண நடிகரை காட்ட முடியாது.அதையெல்லாம் பதிவு செய்து தான் புரியவைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் தொடர்ந்து ரஜினி மீது குற்றம் சொல்ல காரணம் அவர் எதிர்வினை ஆற்றப்போவதும் இல்லை பதிலளிக்கப் போவதும் இல்லை. அடுத்து ரஜினியை விமர்சித்தால் எந்த ஊடகத்திலும் எளிதாக வெளிச்சம் பெறமுடியும்.

இறுதியாக ஒன்று மட்டும் தான். உதவிசெய்வதைப் பற்றி விமர்சிப்பதோ, உதவி செய்ய வேண்டும் என்று கட்டாயப்ப்டுத்துவதோ  அந்த உதவிக்கும் அதைப் பெறுபவருக்கும் ஏற்பானதல்ல என்பதைப் புரிந்து கொள்ளல் நலம். 


Wednesday, November 25, 2015

ஃபேஸ்புக் கவிதைகள்-1


முகப்புத்தகத்தில் நான் எழுதியவைகள்....! ( கிறுக்கியவைகள் ) 


உண்மைதானே....?



1. நாம் நினைப்பவர்கள் எப்பொழுதாவது நம்மை 

நினைப்பவர்களாகஇருப்பார்களா என 

யோசிக்காமல் இருக்கமுடிவதில்லை.......!


Tuesday, February 17, 2015

ரஜினி ! ‍ அரசியலா ? அடுத்த படமா ?



                     
ரஜினி !  ‍ அரசியலா ? அடுத்த படமா ?



இரண்டு நாள் முன்னர் லிங்கா பிரச்சனையின் பிரஸ்மீட் வீடியோவை சமூக வலைத் தளங்களில் காண நேர்ந்தது.என்னடா உண்ணாவிரதம் இருந்தவர்களை இடையில் ஆளைக் காணோமே என்று பார்த்தேன். இதோ இருக்கிறோம் என அடுத்த ரவுண்ட் கிளம்பிவிட்டார்கள்.ஆமாம் இப்போ பிச்சை எடுக்கும் போராட்டமாம்.(இவ்வளவு நாளாமட்டும் என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்களாம்) தொடக்கத்திலிருந்தே இந்த பிரச்சனையின் சாராம்சம் எனக்குப் புரியாமலில்லை.இருந்தாலும் என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போமே என இத்தனை நாள் இது பற்றி நான் வாயே திறக்கவில்லை.

முதலில் படம் வெளியான மூன்றாவது நாளே படம் சரியில்லை ,ரஜினி பிறந்த நாள் என்ன தேசிய விடுமுறையா,ரஜினிக்கெல்லாம் மாஸ் குறைந்துவிட்டது,அவர் ரசிகர்களுக்கு வயதாகிவிட்டது என்று ஒருவர் கிளம்பினார். பெயர் சிங்காரவேலனாம்.அவருக்குமுக்கியத்துவம் அளித்து அவரை வளர்த்துவிட்டது இந்த நடுநிலை ? ஊடகங்கள்.அதற்கடுத்து பல காட்சிகள் அரங்கேறின. கன்னடர் என்றார்கள்,தமிழருக்கு துரோகம் என்றார்கள்,அவர் என்ன பெரிய ..... என்று கூட கேட்டார்கள்.அதெல்லாம் நமக்கு தெரிந்த கதை தான்.உண்ணாவிரத  போராட்டத்துக்கு சீமான்,வேல்முருகன் போன்றவர்கள் வரும்போதே அவர்களுடைய சாயம் வெளுத்துப் போனது. நேற்றைக்கு ஒரு பிரஸ் மீட் . இப்போது தான் வெளிப்படையாகவே புரிகிறது. அவர்களுடைய டார்கெட் ரஜினிகாந்த் என்பது.



அந்த சிங்கு சொல்கிறார், தமிழகத்தில் லிங்கா படத்தைப் பார்த்தவர்கள் மொத்தமே 40 லட்சம் பேர் தானாம். இதிலிருந்தே அவர்களின் அண்டப் புளுகு வெளியே வந்துவிட்டது.

முதல் நாள் இரவுக்காட்சி என் நண்பர்களுடன் ராம் தியேட்டருக்கு சற்று நேரமாகியே சென்றோம். ( மூன்று தியேட்டர்: ராம்முத்துராம்,பேரின்பவிலாஸ்,பாம்பே ரிலீஸ் என்பதால்  ) ராம் தியேட்டரில் டிக்கெட் இல்லை. ஒருடிக்கெட் 250 ரூபாய் என்பதும் கவனிக்கத்தக்கது. அடுத்து அவசர அவசரமாக பேரின்பவிலாஸ் சென்றோம். அங்கே இருந்த டூவீலர்களை பார்த்து நான் மயங்கி விழாத குறைதான். அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி( டிக்கெட் விலை 200) உள்ளே போனால் அங்கே தியேட்டரே புல். முன் வரிசை மட்டுமே இருந்தது. மூன்று தியேட்டர்களிலும் நள்ளிரவு 12 மணியிலிருந்து நாளொன்றுக்கு 6 காட்சிகள் முதல் மூன்று நாடகள். மூன்று தியேட்டர்களின் குறைந்தபட்ச‌ இருக்கை 1500 என்று வைத்துக் கொண்டாலும் 1500*6 = 9000 பேர் ஒரு நாள். 27000 பேர் மூன்று நாள். ஒரு டிக்கெட் 200 என்றாலும் 54 லட்சம் திருனெல்வேலி நகரில் மட்டும். இதே போல தமிழகம் முழுதும் 600க்கும் மேற்பட்ட திரைகளில் லிங்கா ரிலீஸ். நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். கோவை ஏரியாவில் மட்டும் 40 லட்சம் பேர் பார்த்திருப்பார்கள். ஆனால் அவர்கள் கணக்கு தமிழகம் முழுதும் 40 லட்சம் பேராம். இந்த சிறிய கணக்கீட்டிலேயே எவ்வளவு பெரிய பித்தலாட்டம் நடைபெற்றிருக்கிறது என யூகிக்கலாம்.

சரி அடுத்த பிரச்சனைக்கு வருவோம். உண்ணா விரதம் இருந்த பின்பு அமைதியாகிவிட்டார்கள். இடையில் ரஜினி திருப்பூர் சுப்பிரமணியத்தை பொறுப்பாளராக நியமித்து நஸ்ட ஈடு தரப்போவதாக சொன்னார்கள். ஆனால் இவர்கள் கொடுத்த 40 லட்சம் கணக்குப் பார்த்து இவர்களின் வண்டவாளங்களை புரிந்து கொண்டு அமைதியாகிவிட்டனர் போல.சரி படம் ஓடவில்லை. நஸ்டம். அப்போ யாரிடம் நஸ்ட ஈடு கேட்க வேண்டும். இவர்கள் யாரிடம் வாங்கினார்களோ அவர்களிடம் தானே. அதாவது வேந்தர் மூவீஸிடம், வேந்தர் மூவீஸ் ஈராஸிடம், ஈராஸ் தயாரிப்பாளரிடம். ஆனால் இதில் ரஜினி எங்கேயிருந்து வந்தார் ?? அரசியல்வியாதிகள் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?


இந்த கூட்டுப் பிச்சைக்காரர்களின்  பிச்சை எடுக்கும் போராட்ட அறிவிப்பின் பத்திரிக்கை செய்தியைப் படிக்கும் யாருக்கும் கோபம் வரும். அப்படியானால் ரஜினி ரசிகன் ?? கோபத்தின் உச்ச  கட்டத்தை அடைவான்.

"ரஜினி படத்தை வாங்கினால் பிச்சை தான் எடுக்க வேண்டுமாம்" அத்தோடு நிற்கவில்லை "ரஜினியை நம்பும் பொதுமக்கள் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டுமாம்"  இங்கு தான் இடிக்கிறது. இங்கே எதற்காக மக்கள் வருகிறார்கள்? மக்கள் ஏன் ரஜினியை நம்ம்புகிறார்கள் ??


முகப்புத்தகத்தில் ரஜினி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அக்கவுண்டையே டெலிட் செய்துவிட்டு ஓடிய சிங்காரவேலனுக்கு, ரஜினியின் மனம் புண்படும் படி பேசியிருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்வதாய் பிரஸ்மீட்டில் பம்மிய இந்த சிங்கார வேலனுக்கு இந்த ஒரு மாத இடைவெளியில் எங்கே இருந்து இவ்வளவு தைரியம் வந்தது.அதுவும் ரஜினியின் இமேஜின் அடிச்செங்கலை ஆட்டம் காணச் செய்யுமளவுக்கு அறிக்கை தயார் செய்ய எங்கிருந்து பலம் வந்தது.

அது தான் அரசியல். இடையில் ரஜினி‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_சங்கர் படம் குறித்தான செய்திகள் வந்த போது அமைதியான இந்த பிச்சைக்கார கூட்டம் இப்போது மீண்டும் கிளம்பியிருப்பது அதுவும் வலுவுடன் கிளம்பியிருப்பது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.

மொத்தத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அசன்மென்ட் ரஜினியினுடைய செல்வாக்கை அசைப்பது அல்லது முற்றிலும் பெயர்ப்பது. எதற்காக? ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். ரஜினியின் அரசியல் பிரவேச நினைப்பை மழுங்கடிக்க மக்கள் மத்தியில் மறக்கடிக்க. இனவாதம் பேசி ரஜினியை தாழ்த்த முயன்று தோற்ற கூட்டம் இன்று ஈனவாதம் பேசி வெல்ல நினைக்கிறது.இவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய அரசியல் ஆட்டமே அடங்கியிருக்கிறது.

பிச்சையெடுக்கும் போராட்டத்தை ரஜினியின் வீட்டு வாசலிலிருந்து தொடங்கப் போகிறார்களாம். இதற்கு முதல் பிச்சை போட்டு தொடங்க இருப்பவர் பெரிய அரசியல் புள்ளியாம். அது ராமதாஸ் என்று சந்தேகம் கிளப்புகிறது தி இந்து தமிழ் நாளிதழ். நீ யாரை வேண்டுமானாலும் கூப்பிட்டு பிச்சையெடு. அது கேள்வியல்ல ரஜினியை இழுக்கக் காரணம் என்ன ? அப்படியே இழுத்தாலும் அவர் மீதான விமர்சனப் பார்வைகளும் போராட்ட வாசகங்களும் எதற்காக?


தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ள ரஜினிக்கு இது தான் இறுதியான வாய்ப்பு. ஒரு வாதத்துக்காகவேணும் அவர் அரசியலுக்கு வருகிறார் என்று வைத்துக் கொள்வோம் அவரை எதிர்க்கப் போவது ஏறத்தாழ எல்லாக் கட்சிகளுமே தான். பா.ஜ.க தவிர !! வார்த்தை வசை பொழியப் போவது ராமதாஸும்,சீமானும் , வேல்முருகனும் தான். இம்மூவருமே இந்த பிரச்சனையில் வெளிப்படையாக ஆதரவளித்துள்ளனர். பின்னால் இருப்பது யாரோ ?? அது ஊரறிந்த ரகசியம்.

ஒரு வேளை ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் ஜெயிக்கிறார் தோற்கிறார் என்பது ஒரு புறம் இருக்கட்டும். அவருக்கான ஓப்பனிங் எவ்வாறு இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள். ஆம் அவர் படத்திற்கு கிடைக்கும் அளவு அந்த பிரம்மாண்ட ஓப்பனிங்கை ஓட்டாக்குவது அவருடைய சாமர்த்தியம் சார்ந்தது. அர்சியல் சார்ந்தது. ஆனால் அந்த ஓப்பனிங் கூட இருக்கக் கூடாது என்பது மட்டும் அல்ல அவர் அரசியல் பக்கமே திரும்பக் கூடாது என்பதற்கான நேரடி எச்சரிக்கை தான் இந்த பிரச்சனையின் உள்நோக்கம்.

லிங்கா தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார், " ரஜினியை கூட இருந்து பார்த்துப் பழகியவன் என்கிற முறையில் சொல்கிறேன் , அவர் அரசியலுக்கு வருவது நூறு சதவீதம் உறுதி " என்று. இது ஏதோ படம் வெளியாகும் சம்யத்தில் பப்ளிசிட்டி தேட சொன்னதல்ல. படம் வெளியாகி பிரச்சனை கிளம்பி பெட்டிக்கு திரும்பியவுடன் சொன்ன செய்தி.

இனிமேலும் தான் அரசியலுக்கு வருவேன் என்ற பூச்சாண்டியைக் காட்ட தயாரில்லை என்பதைத்தான் லிங்கா இசை வெளியீட்டு விழாவில் ஓரளவு வெளிப்படையாகவே குறிப்பிட்டார் ரஜினி. நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் என்ற காலம் போய் நான் அரசியலுக்கு வர பயப்படவில்லை. தயங்குகிறேன் என்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டார். ஆக அரசியல் ஆசை ரஜினிக்கு இல்லாமலும் இல்லை.



இன்னொன்று ரஜினியின் மேலான பெரிய தவறு, தன்னுடைய பலத்தையும் செல்வாக்கையும் இந்த உலகத்திற்கு காட்டவே இல்லை. குறைந்தபட்சம் காட்டுவதற்கு முயற்சி கூட செய்யவில்லை.1996, 2002 காவிரி உண்ணாவிரத போராட்டம் இந்த நிகழ்சிகளுக்குப் பின்பு ரஜினியின் செல்வாக்கு ஒரு முறையும் சோதித்தறியப்படவில்லை.யார் யாரோ தங்களுக்கு செல்வாக்கே இல்லை என்றாலும் தேடிப் போய் பிரதமர் வேட்பாளரை சந்திப்பது,காசு கொடுத்து கூட்டம் சேர்ப்பது என தங்கள் இமேஜை தக்கவைத்துக் கொள்ள முயல்கிறார்க‌ள். ஆனால் ரஜினி அதை செய்யவில்லை. தன்னுடைய செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்று நம்புகிறார். இல்லை , கூட இருப்பவர்களால் நம்ப வைக்கப் படுகிறார்.இது தான் அவரின் அரசியல் நினைப்புக்கு முட்டுக்கட்டை போடும் மிகப்பெரிய சவால். அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் ஒரு ரசிகர் மன்ற மாநாடு நடத்தக்கூட முயற்சி செய்யவில்லை.  சந்திரமுகி திரைப்பட விழாவிலிருந்து ரசிகர்கள் சார்பாக வைக்கப்படும் கோரிக்கை ரசிகர் மன்ற மாநாடு. அதை ஒவ்வொரு பட விழாவிலும் அவரே சொல்வார். பின்னர் அமைதியாகிவிடுவார். இது அவருடைய பெரிய பல்வீனம் என்றே சொல்லலாம்.

சரி இப்போது ரஜினி செய்ய வேண்டியது என்ன.? ஒரு வேளை அவர் தன்னுடைய அடுத்த படம் குறித்து அறிவித்தால் இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் போய்விடும். அடுத்த படம் சங்கருடனோ இல்லை யாருடனோ என அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வந்தாலே போதும், இந்த போராட்டக் காரர்களுக்கு அது தான் வேண்டும், அவர் அரசியலுக்கு வரக்கூடாது ஆவ்வளவு தான்.

அது எப்படி ? எனச் சந்தேகம் எழுந்தால் நீங்கள் இன்னும் சிறு குழந்தையாகவே இருக்கிறீர்கள் என அர்த்தம். அதாவது அடுத்த படம் அறிவித்தால் அதை முடிக்க குறைந்தபட்சம் 1 வருடம் . சங்கர் படம் என்றால் 2 வருடம் கூட ஆகலாம். அப்போ எங்கிட்டு அரசியலுக்கு வருவது. 2016ல் தேர்தல். நீங்கள் நினைக்கலால் 2021 இருக்கிறது என்று. அப்போ , "வளர்மதி வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன அந்த ரேஞ்ச் ஆயிறும்". அதாவது அப்போ அவர் வயது 70 ஐ தாண்டிவிடும். இப்போது புரிகிறதா ? எதற்காக இந்த அளவு ரஜினியின் மீது அவர்களுக்கு இவ்வளவு கோபம் என்று.


சரி அடுத்த படம் அறிவித்து பிரச்சனையிலிருந்து தற்காலிகமாக தப்பிவிடலாம் என்று நினைத்தால் அங்கே தான் ரஜினிக்கு மிகப்பெரிய சிக்கல் காத்திருக்கிறது. ஆம், ஒரு வேளை ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு வந்தால் இத்தனை ஆண்டுகாலம் அவர் கட்டிக்காத்து வந்த மக்கள் செல்வாக்கு, ஒரே ஒரு கேள்வியில் தூள் தூளாக அடித்து நொறுக்கப்படும்.


இத்தனை ஆண்டுகாலம் உங்கள் சுயநலத்திற்காகத்தானே அரசியல் பூச்சாண்டி காட்டினீர்கள் என்ற , இந்த கேள்வி தான் அது. இன்னொரு படம் நடித்து அது ஓடினாலும் ஓடாவிட்டாலும் திரையுலகின் இன்னொரு சிவாஜியாக வலம் வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவார். ரசிகர்களுக்கு அவர் மீதிருந்த அத்தனை அபிப்ராயங்களும் தளர்ந்து அவரும் ஒரு சராசரி நடிகர் என்ற நிலைக்கு தாழ்ந்துவிடும் அபாயம் கூட நிகழலாம். எனவே தன் செலவாக்கை தக்க வைக்க வேண்டுமானால் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு காரணம் ஊடகங்களோ இல்லை அவரின் ரசிகர்களோ இல்லை. முழுக்க முழுக்க அவரே காரணம். நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்திருந்தால் இந்நேரம் இவ்வளவு நெருக்கடிக்கு ஆளாகியிருக்க மாட்டார்,கமலஹாசன் போல படம் நடித்துக் கொண்டிருப்பார். அவருடைய ரசிகர்களும் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பர். அதை விடுத்து அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி அவருக்காக செலவு செய்து நொடித்த ரசிகர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.அது ரஜினிக்கும் தெரியும். அவர் ரசிகர்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் அது அரசியலுக்கு வருவது தான் ஒரே வழி.

சமீபத்திய இவரின் மௌனமும் இதையே தான் காட்டுகின்றதென நான் நினைக்கிறேன்.இதில் எனக்கு இருவர் மீது வருத்தம்.

ஒன்று ஊடகங்கள். அவர்கள் கொடுக்கும் செய்தியை அப்படியே வெளியிடுகின்றன. நேற்றும் கூட "ரஜினியை நம்பினால் பிச்சை தான் எடுக்க வேண்டும்"  என்ற வாசகம் உடபட அப்படியே பிரிண்டிட்டிருக்கிறார்கள். ஆனால் செய்தியாளர் சந்திப்பில் அவர்களிம் எந்த கேள்விக்கும் பதிலளிக்க முடியாமல் திணறிய செய்தி வரவே இல்லை.  அவர்களின் உண்மை முகத்தை காட்ட யாருக்கும் தைரியமில்லையா ? இல்லை வர வேண்டியது வந்துவிட்டதா ?? இது தான் நடுநிலை ஊடகங்களின் செயல்பாடு. சாதாரண கேள்விகளுக்குக் கூட பதில் சொல்லத் திராணி இல்லாத சிங்காரவேலன் & கோ வை அசைக்கக்கூடிய சக்தி இந்த தமிழ்நாட்டு ஊடகங்கள் எதற்குமே இல்லையா???

வேல்முருகன் கூறுகிறார் இதை இப்படியே விடாமல் தமிழ் சக்திகளை ஒன்றினைத்து மாநிலந்தழுவிய போராட்டத்தை முன்னெடுக்குமாம். வெட்கமாக இல்லை எனக் கேட்க வேண்டிய ஊடகங்கள் அதையும் கொட்டை எழுத்திஉல் அச்சிட்டு அனுப்புகின்றன.





இன்னொரு கோபம் ரஜினி ரசிகர்கள் மீது. ஆம் தங்கள் அபிமான நடிகரைக் கொச்சைப்படுத்தும் இவர்களை எதிர்த்து எந்த ஒரு ரஜினி மன்றமும் போராட்டம் நடத்தவில்லை. குறைந்தபட்சம் கண்டண அறிக்கைகள் கூட வரவில்லை. 1996ல் தன் தலைவரின் உத்தரவைக் கேட்டு ஆட்சியையே மாற்றியவர்கள், 2002 ல் தன் தலைவனுடைய உண்ணாவிரத போராட்டத்தில் தங்கள் சக்தியை நிரூபித்தவர்கள், 2011ல் தங்கள் தலைவனுக்காக கோவில் கோவிலாக அலைந்தவர்கள்  திராணி இவ்வளவுதானா?? எதிர்ப்புக் குரல் வலுவாக வராததால் தான் அந்தக் கூட்டம்  இப்படி ஆட்டம் போடுகிறது. இல்லை மேலிட உத்தரவின் பேரில் அமைதி காக்கின்றனரா ?? எனக்குப் புரியவில்லை. தங்களின் பலம் என்ன என்பதைக் காட்டாததால் தான்,  செல்வாக்கே இல்லையென நினைத்து அடுத்தடுத்த நிலைக்கு முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது இந்தக் கூட்டம்.


ரஜினியிடம் ஒரே ஒரு வேண்டுகோள் ,

தலைவா பொறுத்ததெல்லாம் போதும், பொங்கியெழு..... உன்னைப் பற்றி தப்புக்கணக்கு போடும் போலிகளுக்கு உன் ஆறாவது முகத்தைக் காட்டு.

தலைமையே இல்லாத தமிழகத்துக்கு தலைமை ஏற்க வா !! இனி நீ அமைதி காக்கும் ஒவ்வொரு நாளும் உனக்கெதிரான சதிவலை பெரிதாகி பெரிதாகி உன்னையும் எங்களையும் வரலாற்றிலிருந்தே மறைத்துவிடும். அந்த அளவு வீரியத்துடன் பின்னப்படும் அச்சதிவலையை அறுக்க உன் ஒரு வார்த்தை போதும். அந்த ஒருவார்த்தை தமிழக அரசியலையே திருப்பிப் போடும். ஆம் அது  மாநாட்டுத் தேதி.......


அது அரசியல் கட்சி துவக்க விழா மாநாடோ , இல்லை சாதாரண ரசிகர் மன்ற மாநாடோ, மேடையில் நீ  நின்று எங்கள் மத்தியில் நீ உதிர்க்கும் அந்த புன்னகையைக்  காண ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு கோடிக் கண்களில் ஒரு ஜோடிக் கண்கள் என்னுடையதாக இருக்கும். அந்த அறிவிப்பு நம் கட்சியின் பெயராக இருந்தாலும் சரி நம் அடுத்த படத்தின் பெயராக இருந்தாலும் சரி வெற்றி பெற வைக்க என்னுடைய இரு கரங்களும் காத்திருக்கின்றன.


பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினியா???


பிழைக்கவும் ரஜினி பழிக்கவும் ரஜினியா???

என்ன சொல்லிவிட்டார் ? 20 வருடமாக சொல்வதைத் தான் சொல்லிவிட்டார்.. அதற்கு இந்த அளவு கேவலமாக விமர்சனங்களை வைக்க என்ன அவசியம் இருக்கிறது. நான் யாரைப் பற்றி சொல்கிறேன் என்று இந்நேரம் புரிந்திருக்கும். ஆம் ரஜினி. என்ன பாவம் செய்தாறோ அவர் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தையும் அரசியலாகிவிடுகிறது. கடந்த ஞாயிறன்று நடந்த லிங்கா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியவை தான் பலத்த அரசியலுக்கு விவாதத்துக்கு உரியதாகியிருக்கிறது. அவர் ஒன்றும் தானாக முன்வந்து அரசியல் பேசவில்லை. சேரன்,அமீர், வைரமுத்து,விஜய குமார் போன்ற திரைஉலகப் பிரபலங்கள் பேசியதற்கு பதில் அளித்தார் அவ்வளவுதான். ஒரு வேளை அவர் பதிலளிக்காமல் போயிருந்தால் அதையும் செய்தியாக்கி அவரை விமர்சிக்காமல் இருந்திருப்பார்களா என்றால் இல்லை என்பது தான் விடை. ஆம் அவர்களுக்குத் தேவை ரஜினியை விமர்சித்து தங்கள் பிரப்ல்யத்தையும் டீஆர்பி ரேட்டிங்கையும் அரசியலில் தங்கள் இருப்பையும் மீடியாக்களின் கவனத்தையும் பெறவேண்டும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் . இது தான் அவர்களுக்கான தேவை.


சரி விழாவில் என்ன நடந்தது என்பதை பார்த்துவிட்டு அவர்களுக்கான் என் பதில்களை தர விரும்புகிறேன். விழாவில் பேசிய அனைவரும் ரஜினியின் நலம் விரும்பிகள் என்பதைத் தாண்டி ரஜினியின் தீவிர ரசிகர்கள். ஒரு சராசரி ரஜினி ரசிகன் மேடையில் பேசியிருந்தால் என்ன பேசியிருப்பானோ அதைத் தான் சேரனும்,அமீரும்,விஜயகுமாரும் பேசினார்கள். அமீர் , தலைவர் என்று ஒருவரை நான் ஏற்றுக்கொண்டது உங்களை மட்டு தான், நீங்கள் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வேண்டும் என்று கூறியதும் எழுந்த ஆரவாரமும் கைதட்டல் விசில் சத்தமு அடங்க சரியாக இரண்டரை நிமிடம் தேவைப்பட்டது. ஆம் அது என்னுடைய ஆசைமட்டுமல்ல, இங்கிருக்கும் 2000 பேரின் ஆசை மட்டுமல்ல தமிழர்கள் அத்தனை பேருடைய ஆசைகளும் தான். நீங்கள் பார்க்காத விமர்சனங்கள் இல்லை, இனியும் உங்களை விமர்சிக்காமல் இருக்கப்ப்போவதும் இல்லை. அதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் ஒரு அறிவிப்பு மட்டும் வெளிவிடுங்கள் நாங்கள் அனைவரும் அப்படியே உங்கள் பின்னால் வந்துவிடுகிறோம். என்று டைரக்டர் அமீராக அல்ல ஒரு ரசிகனாக பேசினார். சேரன் காந்தி காமராஜருக்கு பிறகு நாங்கள் உங்கள் மீது தான் நம்பிக்கை வைத்திருக்கிறோம், என அவரும் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தினார்.



இறுதியில் பேசிய ரஜினி வழக்கமான் பேச்சுகளுக்குப் பிறகு, அவர்களுக்கான  பதிலை அளிக்க வேண்டியிருந்தது. அவர், அமீர், சேரன், விஜயகுமார் போன்றவர்கள் அரசியல் பேசியதால் நான் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லவில்லை என்றால் திமிர் பிடித்தவன் தலைக்கணம் பிடித்தவன் என்று சொல்வார்கள். அரசியல் என்றால் என்ன, அதனுடைய ஆழம் என்ன , அங்கு எப்படிப் போகவேண்டும் என்பதெல்லாம் எனக்கு நன்றாக தெரியும். அப்படிப் போனால் அங்கு நாம் நினைத்ததை எல்லாம் செய்ய முடியுமா என்ற தயக்கம் எனக்கிருக்கிறது. அரசியலை நினைத்து பயப்படவில்லை. தயங்குகிறேன் அவ்வளவுதான். ஒரு சூழ்னிலை தான் என்னை இங்கு கொண்டுவந்திருக்கிறது, அதே சூழ்னிலை தான் என்னை அங்கும் கொண்டுபோக வேண்டும்...என்னடா இவன் இதையே சொல்றான் அடப் போய்யா என்று சொல்வார்கள், ஆனால் அது தான் உண்மை என்று பேசினார்.


இது தான் ஊடகங்களுக்கும் நடுநிலை என்ற போர்வையில் திரியும் சில மனிதர்களுக்கும் பெரிய தீனியாக அமைந்துவிட்டது. தந்தி டிவி விவாதத்தில் பங்கேற்ற மனுஸ்யப்புத்திரன்  ரஜினிக்கு என்ன தகுதி இருக்கிறது எனப் பொங்கி எழுகிறார். தமிழர்களுடைய எந்தப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துள்ளார் என்று சொன்னதும் நிகழ்சி நடத்திய பாண்டேவுக்கே கோபம் வந்துவிட்டது. அவர் குரல் கொடுக்காத பெரிய பிரச்சனை எது என திருப்பி கேட்டார், அதற்கு மனுஸ் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஒருநாள் உண்ணாவிரதத்தை தவிர என்ன செய்தார் அவர் என்று கேட்டதும் பாண்டே கோபத்தின் உச்சிக்கே சென்று இங்குள்ள அரசியல் கட்சிகள் எல்லாம் உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்து கொண்டார்களோ எனப் பதிலடி கொடுத்தாரே பார்க்கலாம், அவர் முகத்தில் ஈ ஆடவில்லை. சரியான பதிலடி தான். இந்தக் கேள்வியை எல்லாம்  கேட்பதற்கு முன்னர் அவர் ஒரு சாதாரண நடிகர் என்பதை ஒருநிமிடம் யோசித்துவிட்டு கேட்க வேண்டும். அப்படியிருந்தும் அவர் பெரியளவிலான பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்.


ஒரு ஆட்சியில் இருந்த அதிருப்தியையும், மக்கள் விரோதப் போக்கையும் ஆளுங்கட்சி அமைச்சரை மேடையில் வைத்துக் கொண்டே கண்டித்த நடிகரை இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் யாரையாவது உங்களால் காட்ட முடியுமா? தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்ற வசனத்தை தமிழக மக்கள் மறந்துவிடுவார்களா.? த.மா.கா தொடங்கிய பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மூப்பனாரிடம் உங்கள் கட்சியின் தலைவர் யார் என்று கேட்ட போது சூப்பர் ஸ்டார் ரஜினி என்று போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியதை எந்த ஊடகவியலாளராவது மறுக்க முடியுமா ? ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய பிறகு இரு மாநில உறவில் விரிசல் வரக்கூடாது என்பதற்காக திரை மறைவில் அவர் எடுத்த ரிஸ்கை யாராவது மறுத்துவிட முடியுமா?  காவிரிப் பிரச்சனையில் அர்த்தமற்ற கரண்ட் மறியல நடத்தச் சென்ற பாரதிராஜாவை வெளிப்படையாக விமர்சித்து சென்னையிலே தன்னந்தனியாக உண்ணாவிரதம் இருந்து ஒட்டுமொத்த திரையுலகையும் தன் பக்கம் திருப்பியதுடன் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவு தன் பலத்தை நிரூபித்து நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி தருவதாக உறுதியளித்ததை மறக்க முடியுமா? ராஜபக்சேவையும் அவர் ராணுவத்தையும் பார்த்து ஆம்பிளைங்களா நீங்க என பொது மேடையில் பகிரங்கமாக விமர்சித்த வேறு ஒரு நடிகரைக் கூட வேண்டாம் அரசியல்வாதியை காட்டமுடியுமா ? தன்னுடைய படத்திற்கு தொந்தரவு என்றதும் ஊரைக்கூட்டி ஒப்பாரி வைக்காமல், முதல்வர் காலில் விழ கொடநாடு வரை சென்று திரும்பிவராமல் தன்னந்தனியாக சமாளித்த வேறு ஒரு நடிகரை காட்ட முடியுமா? இவ்வளவு ஏன் சீக்கிரம் வந்துடுவேன் ராஜாக்களா என அவர் உடைந்த குரல் கேட்டு தமிழகம் முழுவதும் பக்தியில் மூழகியதை மறக்கத்தான் முடியுமா? இன்றும் பக்தியில் மூழ்கி இருக்கிறது அது எவ்வாறு என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.


இன்னொன்று சொல்கிறார்கள். அதைக் கேட்டால் சிரிப்புத் தான் வருகிறது.`படம் வெளி வரும்போது மட்டும் இவ்வாறு அரசியல் பேசி தன்னுடைய வியாபரத்தை பெருக்கிக் கொள்ளும் சீப் பப்ளிசிட்டியாம், பப்ளிசிட்டி செய்து படத்தை ஓட்டும் நிலையிலா ரஜினி இருக்கிறார். அவரே ஒரு பெரிய விளம்பர ப்ராண்டாகிவிட்ட பிறகு அவருக்கு விளமரம் தேவைப்படும் என்று சொல்வதைவிட கீழ்த்தரமான விளம்பரம் இருக்க முடியாது. சரி விளம்பரத்திற்காக அரசியல் பேசுகிறார் என்றால், தமிழகத்தில் மட்டுமா படம் ஓடுகிறது. ஆந்திர்ரவிலும், கர்நாடகாவிலும், கேரளாவிலும், வட இந்தியாவிலும் , ஆஸ்திரேலியாவிலும்,அமெரிக்காவிலும் ஏன் ஜப்பானில் கூட படம் ஓடுவதற்கு இந்த அரசியல் பேச்சு தான் காரணம் என்று சொன்னால் சொல்பவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று அர்த்தம். அப்படியே பார்த்தாலும் சந்திரமுகி படம் வரும்போது எந்த அரசியல் பேசினார் ?, குசேலன் வந்தபோது என்ன அரசியல் பேசினார்? சிவாஜி வந்த போது என்ன அரசியல் பேசினார்? எந்திரன் வந்த போது என்ன அரசியல் கருத்த்களை தெரிவித்தார்? கோச்சடையான் வந்த போது என்ன பாலிட்டிக்ஸ் பேசினார்? இனியும் படம் ஓடுவதற்காகத் தான் அரசியல் பேசுகிறார் என்று சொல்பவர்களைப் பார்க்கும் போது பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.



தகுந்த ஒரு அறிவிப்பை வெளியிடாத போதே இப்படிக் கொதிப்பதற்கு காரணம் என்ன? பயம், ஆம் ! ஒரு வேலை வந்து விடுவாரோ என்ற பயம் மட்டும் தான் காரணம். அவர் வரக்கூடாது, வரக்கூடது என்று கூவும் நடுநிலைவாதிகள்? அவர் வரவில்லை என்றால் மட்டும் யாருக்கு ஓட்டுப் போட்டு அடுத்த முதலமைச்சர் ஆக்கிவிடப் போகிறார்கள். மிஞ்சி மிஞ்சி போனால் இதே தமிழினத் தலிவர்? கருணாநிதி இல்லை ஊழலலை ஒழிக்கப் போகும் ஜெயலலிதா, இவர்களைத் தானே? ஒவ்வொரு முறையும் அவரைப் பார்க்கும் போதெல்லாம் ஊடகங்கள் வைக்கும் முதல் கேள்வி நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்பது தான், இனிமேல் அவரைப் பார்க்கும் போது அடுத்த படம் என்ன என்று கேட்டுப் பாருங்கள் , அப்போதும் அவர் நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் என்று சொன்னால் கழுவிக் கழுவி ஊற்றுங்கள். அதை விடுத்து பதிலைத் தெரிந்து கொண்டு கேள்வியைக் கேட்டுவிட்டு அந்த நாள் முழுவதும் பரபரப்பை தனது ஊடகத்தில் காட்டிக் கொண்டு வேசம் போட வேறு நாட்டில் பல விசயங்கள் நடந்து கொண்டிருக்கிறது..... மக்களுக்கு தெரியாத பல விசயங்கள் இருக்கின்றன அதைப் புரிய வையுங்கள். நேற்றும் கூட அவர் பேசியது எதார்த்தம் தான் என 50 சத மக்கள் வாக்களித்ததையும், போன மாதம் அவருடைய அரசியல் தேவை தமிழ்நாட்டுக்கு கட்டாயம் தேவை தான் என 60 சத மக்கள் வாக்களித்ததையும் திரும்ப திரும்ப பொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். மனுஸ்யபுத்திரன் , உதய குமார், ஞானி போன்ற எழுத்தாளர்களும் சமூகப் போராளிகளும் தங்களுடைய பணிகளில் கவனத்தை செலுத்துங்கள். ரஜினி தான் தேவை என்றால் ரஜினியை விமர்சிக்கும் இயக்கம் ஆரம்பித்து தமிழ்நாடு முழுதும் தீவிர பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் பிரபலமாகிக் கொள்ளுங்கள்.


தலைவர் ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும் அவர் இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இயங்கப் போவது இல்லை என்பதும் அவர் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) இல்லாமல் 2016 சட்டமன்றத் தேர்தல் இல்லை என்பதும் 100 சதம் உறுதியாகிவிட்டது. அவருடைய எண்ணம், ஒரு ரஜினி ரசிகனான எனக்கு புரியாமலில்லை. அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் தலைவருக்கு இருக்கிறது, வந்தால் ஜெயிக்க முடியுமா என்ற தயக்கமும் இருக்கிறது. வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருக்கிறது அது தான் அவருடைய தயக்கத்திற்கான ஒரே காரணம்.ஒருவேளை அவர் வர வேண்டும் என்று முடிவெடுத்தால் அடுத்த வருட டிசம்பர் வரை தான் காலக் கெடு,அதற்கு பின்னர் அவரே நினைத்தாலும் அரசியலுக்கு வர முடியாது, அப்படி வந்தாலும் அதை நான் சொல்ல விரும்பவில்லை. வயது முதிர்ந்த ஒரு இயக்கத்தின் தலைவர், தலைவரே இல்லாத ஒரு இயக்கம், இதைப் பயன்படுத்தி காலூன்ற நினைக்கும் ஒரு தேசிய இயக்கம், புதிதாக களம் கண்டிருக்கும் ஒரு இயக்கம், தகுந்த சூழலில் இறங்காமல் சூடுபடூக் கொண்ட ஒரு இயக்கம், இது தான்  தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழ்நிலை. இதைவிட தகுந்த சூழல் இனி தலைவரே நினைத்தாலும் அமையாது. ரஜினி ரசியலுக்கு வருவதைவிட எளிமையான விசயம் வந்த பிறகு இரு பிரதான கட்சிகளுக்கு எதிரான அணியை அமைப்பது.


ஏன் தயக்கம் ஓப்பனாகவே சொல்லிவிடுகிறேன். ரஜினி வந்தால் திமுக அதிமுக கட்சிகளுக்கு எதிரான அணியை பலமாக அமைக்க முடியும். பா.ஜ.க கட்சி முதல்வர் கன‌வு காணவில்லை கட்சியை காலூன்ற வைக்க வேண்டும் அவ்வளவுதான். அதே போல ஜி.கே வாசன் ரஜினியை முதல்வராக ஏற்றுக் கொள்ள ஒருபோதும் தயங்கமாட்டார். வைகோவை சமாதானப்படுத்தி விடலாம். விஜயகாந்தும் ராமதாசும் தான். பா.ம.க வராது. விஜயகாந்த் கேள்விக்குறி தான்.ரஜினி , ஜிகே வாசன்,பா.ஜ.க,வைகோ இந்தக் கூட்டணி அமைந்தால் ஆட்சியைக் கைப்பற்ற அத்தனை சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன. திமுக அதிமுகவின் விமர்சனங்களையும் முறியடித்துவிடலாம். கூட்டணி இல்லாமல் தனியாக நின்று ரஜினி ஜெயிப்பாரா ? என்றால் இல்லை என்பது தான் விடை. ஆனால் பலத்த சக்தியாக உருவெடுப்பார். ஆக மொத்தத்தில் தனிக்கட்சியுடன் தலைவர் வந்து தகுந்த கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க இதைவிட பெரிய சந்தர்ப்பம் இனி அமையாது. எந்த விதமான பிரதிபலனுக்காகவும் எதிர்பார்க்காமல் இத்தனை ஆண்டுகாலம் பொறுத்திருந்த நாம் தலைவரின் அடுத்த பிறந்த நாள் வரை பொறுத்திருக்க மாட்டோமா என்ன?

ஒருவேளை தலைவர் அரசியலுக்கு வரவில்லை என்றால் இன்னும் மகிழ்சி அடைவேன். யாருடைய இழி பழிக்கும் ஆளாகாமல் கடைசி வரை சூப்பர் ஸ்டாராகவே இருப்பது எவ்வளவு பெருமை. ஆனால் எது நடந்தாலும்  நான் ரஜினி ரசிகன் என்பதை மட்டும் மாற்றிவிட முடியாது.என்னைப் போலவே தான் எல்லா தலைவரின் ரசிகர்களும் என்று உறுதியாக நம்புகிறேன்........


தயக்கம் போதும் தலைவா, தகுந்த நேரம் இது தான், தயங்காமல் முடிவெடு, நாங்கள் இருக்கிறோம்... உன்னை அவ்வளவு எளிதில் தோற்க விடமாட்டோம்.......


உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன...