Monday, November 30, 2015

நடிகர்கள் என்ன செய்தார்கள்...?


                    நடிகர்கள் என்ன செய்தார்கள்...?



தமிழ்நாட்டில் தற்போது ஒரு ட்ரெண்ட் உருவாக்கப்பட்டு வருகிறது. அதாவது நடிகர்கள் எனப்படும் திரைக்கலைஞர்கள் வெள்ளத்தால் தத்தளிக்கும் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் ? எவ்வளவு பணம் கொடுத்தார்கள் ? என்ன ஆறுதல் சொன்னார்கள் ? என்று. இது காலங்காலமாக  சொல்லப்பட்டு வருவது தான் என்றாலும் சமீபமாய் அது கொஞ்சம் ஓங்கி ஒலிக்கிறது. இந்த தமிழன்டா க்ரூப்பின் வீச்சு அதிகமானதிலிருந்து குறிப்பாக அந்நிய அல்லது வேற்று மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்களின் மீது நேரடித் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகிறது. இருக்கட்டும் இப்பொழுதாவது அறிவு வந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டாலும் இது நியாயமான வாதமா என யோசித்துப் பார்த்தால் உண்மை புரியும்.

எல்லா செயல்களுக்கும் பிறருடைய உதவியை  எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய இயலாத்தனமோ அதைவிட நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது  முட்டாள் தனம். தமிழக முதலமைச்சராக இருப்பவர் தன்னுடைய தொகுதிக்கு மட்டும் வந்து கார் கண்ணாடியைக் கூட இறக்காமல் வாக்காள பெருமக்களே என்று ஆறுதல் சொல்லிச் சென்ற விநோதம் உலகில் வேறு எங்கும் நடைபெற முடியாது. அதைக் கேள்வி கேட்பதை விடுத்து, வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்கள் பிரதிநிதிகள் மக்களுடைய வரிப்பணத்தை செலவு செய்வதற்கு கூட யோசிக்கும் நிலையை கேள்வி கேட்பதை விடுத்து கேவலம் காசுக்கு பொழுதுபோக்கும் கூத்தாடிகள் ஏன் செய்யவில்லை என்று கேட்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

வழக்கறிஞர்,மருத்துவர்,பொறியாளர் போன்று நடிகரும் ஒரு தொழிலாளர் அவ்வளவே. அதைத் தாண்டி அவர்களுக்கு கிடைப்பது பிரபல்யம்,  புகழ் வெளிச்சம், கூடுதல் சம்பளம். எம்.ஜி.ஆர் ஒரு திரைப்படத்தில் பாடுவார் "நாடென்ன செய்தது உனக்கு என்று கேள்விகள் கேட்பதை விடுத்து நீ என்ன செய்தாய் அதற்கு என்று நினைத்தால் நன்மை உனக்கு" என்று. ஆம் அடுத்தவர் என்ன செய்தார் என்று குறை கூறும் நாம் என்ன உதவி செய்தோம் என யோசிக்க வேண்டும் முதலில். உதவி என்பது வற்புறுத்தாமல் செய்வது. பலனை எதிர்பார்க்காமல் செய்வது. மனமுவந்து செய்வது. அதை கட்டாயப்படுத்தியோ விதிமுறைகள் வகுத்தோ செய்யச் சொல்வது உதவி செய்பவருக்கும் பொறுத்தமானதல்ல, உதவி பெறுபவருக்கும் ஏற்புடையதல்ல.

மக்கள் இல்லாமல் திரைக்கலைஞர்கள் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல மக்கள் இல்லாமல் அரசியல்வாதிகளும் இல்லை. திரைக்கலைஞர் நம்மை பொழுது போக்குபவர் மட்டுமே. ஆனால் அரசியல்வாதிகள் நம்மை ஆளவும் செய்பவர்கள். ஆனால் அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என்று எழும் குரல்களை விட திரைக்கலைஞர்கள் உதவி செய்ய வேண்டும் என எழும் குரல்களின் வீச்சு அசாத்தியமானது. அது நமக்கு பழகியிருக்கலாம்.ஆனால் அது தவறு என்பதை மறுக்க முடியாது.அப்படி இருந்தும் சில பல நடிகர்கள் உதவி செய்கிறார்கள். உதவி செய்தாலும் செய்த உதவியை கேள்வி கேட்பார்கள். இந்த நடிகர் இவ்வளவு தான் செய்ய முடியுமா? எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்று... இது அதைவிட பெரிய அயோக்கியத்தனம். உதவி எனும் பெயரில் செய்யும் சிறு துரும்பும் பாராட்டத்தக்கதே எனும் எண்ணம் வருவதேயில்லை.

அடுத்து ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு பாடலிலும் ஏன் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு இதை செய்வேன் அதை செய்வேன் என்று உதார்விடும் நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனக்குப் பிடித்த ரஜினி கூட இந்த வகை தான். அதற்காக அவர் செய்வார் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம் இல்லாமல் வேறென்ன ?  ரஜினி மீது சமயம் கிடைக்கும் போதெல்லாம் காரி உமிழும் செயல் செய்யப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த தமிழன்டா க்ரூப்ஸ் இதற்கு முதல் காரணம். அவர்களுக்கெல்லாம் வரலாறு தெரியவில்லை. இல்லை தெரிந்து கொண்டே நடிக்கிறார்கள். தமிழக சினிமா வரலாற்றில் பொது விசயத்திற்கு குரல் கொடுப்பத்திலும் நிவாரணம் செய்வதிலும்  ரஜினியைப் போன்ற ஒரு முன்னுதாரண நடிகரை காட்ட முடியாது.அதையெல்லாம் பதிவு செய்து தான் புரியவைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் தொடர்ந்து ரஜினி மீது குற்றம் சொல்ல காரணம் அவர் எதிர்வினை ஆற்றப்போவதும் இல்லை பதிலளிக்கப் போவதும் இல்லை. அடுத்து ரஜினியை விமர்சித்தால் எந்த ஊடகத்திலும் எளிதாக வெளிச்சம் பெறமுடியும்.

இறுதியாக ஒன்று மட்டும் தான். உதவிசெய்வதைப் பற்றி விமர்சிப்பதோ, உதவி செய்ய வேண்டும் என்று கட்டாயப்ப்டுத்துவதோ  அந்த உதவிக்கும் அதைப் பெறுபவருக்கும் ஏற்பானதல்ல என்பதைப் புரிந்து கொள்ளல் நலம். 


6 comments:

  1. நடிகர்கள் உதவ வேண்டும் என்று கூப்பாடு போடுவது ஏனென்று தெரியவில்லை... அவனுக நம்மளை மாதிரித்தான்... அவனுங்களுக்கு அது ஒரு வேலை... நம்ம கார்ப்பரேட் கம்பெனி வேலை போல...
    லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள். தொழிலதிபர்களிடம் எல்லாம் நாம் கேட்கவில்லை.... ஆனால் நடிகர்களிடம் மட்டும் எதிர்ப்பார்கிறோம்... என்ன எழவு இதுன்னு தெரியலை....

    நான் கூட ஒரு பதிவு போட்டிருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. நன்றாக சொன்னீர்கள் சார்.. ஆனால் அது சிலருக்கு புரியவேமாட்டேன் என்கிறது.. என்ன செய்ய? நீங்களும் பதிவு போட்டாச்சா.. சூப்பர்.. இதோ வருகிறேன்..

      Delete
  2. வணக்கம்

    நிலமையை மிக அற்புதமாக எழுதியுள்ளீர்கள்..
    எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கட்டும்..
    கறுப்பு பணம் வைத்திருக்கும் திருடர்கள்தான் உதவவேண்டும்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நன்றி ஐயா... தொடர்ந்து வருகை தர வேண்டும்..

    ReplyDelete
  4. நம்ம ஊர்லதான் எல்லாத்துக்கும் நடிகர்களையும் இழுத்துவிடுவாங்களே..அவங்களா செய்தா அது வேற. ஆனால் சும்மா சும்மா அரசியலில் இருந்து அடித்தட்டு வரை எல்லாத்துலயும் சினிமா சார்ந்தவைதான். என்ன நாடோ ...

    ReplyDelete