Saturday, January 28, 2017

தமிழில் நீட் தேர்வு..!

நீட் தேர்வு தமிழில் நடத்தப்படுகிறது என சப்பைக்கட்டு கட்டுபவர்களுக்காக..


தமிழகத்தின் மொத்த அரசு மருத்துவ இடங்கள் 2500. நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் சிபிஎஸ்இ. தமிழக சிபிஎஸ்இ மொத்த இறுதி மாணவர்கள் ஏறத்தாழ 10000 பேர். தமிழக பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் 8 லட்சம் பேர். இருக்கின்ற 2500ல் 75 % இந்த சிபிஎஸ்இ மாணவர்களால் எளிதாக நிரப்பப்பட்டுவிடும், காரணம் பாடத்திட்டம். மீதி உள்ளதிலும் பெரும்பாலும் நகர்ப்புற தனியார் தமிழக பாடத்திட்ட மாணவர்களால் நிரப்பப்பட்டுவிடும். பின் அரசுப் பள்ளி கிராமப்புற மாணவர்களின் நிலை...? அதிலும் கிராமப்புறங்களில் இன்னும் நீட் தேர்வு என்றால் என்ன என்றே தெரிந்திருக்கவில்லை. இப்போது மருத்துவ‌ கட் ஆப் 197ல் இருந்தாலும் அதில் ஒரு 30 35 % பேராவது கிராமப்புற மாணவர்களாக இருக்கிறார்கள் என்பது ஒரு ஆறுதலாக இருந்தது..! ஆனால் இனி..?


இனி கோச்சிங் சென்டர்களில் காசைக்கொட்டி நீட் தேர்வுக்கும் படித்து,பொதுத் தேர்வுக்கும் படித்து மாணவர்கள் என்ன மிசினா இல்லை ரோபோக்களா...? இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தினை வகுக்க வக்கற்ற அரசுகள்,பேசுவதென்னவோ கல்வியில் சமத்துவம்...! விந்தையாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. 


ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் களிலும் இதே தானே என கேட்பவர்களுக்கு, அது விருப்ப நுழைவுத்தேர்வு. 12ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தால் அண்ணா பலகலையில் கூட இடம் இருக்கிறது. ஆனால் நீட் என்பது மருத்துவப்படிப்புக்கு ஒரு கட்டாய தேர்வு . 12ம் வகுப்பில் 1200 மார்க் எடுத்திருந்தாலும் நீட்டில் பாசானால் மட்டும் தான் மருத்துவ இடம். (அடுத்த வருடம் பொறியியலுக்கும் வந்துவிடும் அது வேறு விசயம்) முதலில் பாடத்திட்டத்தை வழிசெய்யுங்கள், பின் பொதுத் தேர்வை ரத்து செய்யுங்கள்..அப்புறம் அந்தந்த படிப்புகளுக்கென எத்தனை நுழைவுத் தேர்வு வேண்டுமானாலும் வையுங்கள்....! இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் கோச்சிங் சென்டர்களில் சேரும் அளவுக்கு பணம் படைத்தவர்கள் அல்லர் என்பதை உணருங்கள்...!

Thursday, January 12, 2017

எழுவாய் தமிழா..!

இந்தியா சுதந்திரம் அடைந்த போது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு எத்தனை நாள் தாங்கும் என மேற்குலக நாடுகள் எடைபோட்டன. அதை தவிடுபொடியாக்கி பவள விழா நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் இந்தியனாக. ஆனால் அதற்கான பிரதிபலனாக அதைக்கொடு இதைக்கொடு என்றெல்லாம் இதுவரை போராடியதில்லை.. எங்கள் உரிமைகளிலும்,பண்பாட்டு கலாச்சாரத்திலும் தலையிடாமல் இருந்தாலே போதும். டெல்லிக்கு கோவில் கட்டுவார்கள் தமிழர்கள்.. அதையும் கூட விட்டுவைக்காமல் அடி மேல் அடி அடித்துக் கொண்டிருந்தால் விளைவுகளை தாங்கும் சக்தி உங்களுக்கு இருக்காது என்பது தான் நிதர்சனம்.