Thursday, January 12, 2017

எழுவாய் தமிழா..!

இந்தியா சுதந்திரம் அடைந்த போது பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு எத்தனை நாள் தாங்கும் என மேற்குலக நாடுகள் எடைபோட்டன. அதை தவிடுபொடியாக்கி பவள விழா நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் இந்தியனாக. ஆனால் அதற்கான பிரதிபலனாக அதைக்கொடு இதைக்கொடு என்றெல்லாம் இதுவரை போராடியதில்லை.. எங்கள் உரிமைகளிலும்,பண்பாட்டு கலாச்சாரத்திலும் தலையிடாமல் இருந்தாலே போதும். டெல்லிக்கு கோவில் கட்டுவார்கள் தமிழர்கள்.. அதையும் கூட விட்டுவைக்காமல் அடி மேல் அடி அடித்துக் கொண்டிருந்தால் விளைவுகளை தாங்கும் சக்தி உங்களுக்கு இருக்காது என்பது தான் நிதர்சனம்.

மொழிவழி தேசிய இனங்களில் பாரம்பரியத்தையும் மொழியுணர்வையும் கொஞ்சமேனும் காத்து நிற்பவர்கள் தமிழர்கள் மட்டும் தான். அது பொறுக்கவில்லையா எனத் தெரியவில்லை..? ஜல்லிக்கட்டு விசயத்தை விடுங்கள்.. எத்தனை விசயங்களில் தமிழர்களுக்கு எதிராக நிற்கிறீர்கள் என கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. மீனவர் பிரச்சனை ஆகட்டும்,காவேரி பிரச்சனை ஆகட்டும்,முல்லைப் பெரியாறு பிரச்சனை ஆகட்டும்,விவசாயிகள் பிரச்சனை ஆகட்டும் எந்த விசயங்களிலாவது எங்களின் குரலை கணிந்தாவது கேட்டிருக்கிறீர்களா.. ? காங்கிரஸ் ஆகட்டும் பி.ஜெ.பி ஆகட்டும்.. காங்கிரசாவது கொஞ்சம் கத்துவதை கவனிக்கவாவது செய்வார்கள்.. ஆனால் பி.ஜெ.பியோ அதுவும் செய்வதில்லை. தேர்தலில் வென்று ஆட்சி அமைத்து இரணடரை வருடம் ஆகிறது. இது வரை ஒரு முறையாவது மோடி அவர்கள் தனிப்பட்ட முறையில் எங்காவது தமிழகம் பற்றி பேசியிருக்கிறாரா? அல்லது அரசியல் காரணங்கள் தவிர்த்து இந்த நலத்திட்டம் தொடங்குகிறேன்,அந்த நலத்திட்டம் தொடங்குகிறேன் என்றாவது தமிழகம் வந்திருக்கிறாரா..?கூட்டாட்சி என்று சொல்கிறீர்கள்.. ஆனால் நுழைவுத்தேர்வில் தலையீடு,மின்சார திட்டத்தில் தலையீடு,ஜி.எஸ்.டியில் தலையீடு,பொது விநியோக திட்டத்தில் தலையீடு,ஜல்லிக்கட்டில் தலையீடு  என எல்லாவற்றிலும் தலையிடுகிறீர்கள்.. இன்னும் கொஞ்ச நாளில் தமிழகத்தில் எதை தொடங்கவேண்டும் என்று கூட சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சரி இவ்வளவு அத்துமீறல்கள் நடக்கிறதே தமிழக அரசு என்ன செய்கிறது என யோசிக்கலாம். தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருந்தால் தானே கேட்பதற்கு...? கேட்பதற்கு நாதியற்றவர்களாய், மாணவர்களும்,விவசாயிகளும் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வீதிக்கு வந்து போராடுகிறார்கள், 50 எம்பிக்களும் 136 எம்.எல்.யேக்களும் சின்னம்மாவுக்கு அரசியல் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.. சில பேர் ஜெயலலிதா இல்லை அதனால் இப்படி நடக்கிறது என்கிறார்கள்.. அவர் இருக்கும் போது இதுவும் நடக்காது.. என்னைக் கேட்டால் 2014க்குப் பின்னர் தமிழக அரசு என்ற ஒன்றே இல்லை என்று தான் சொல்வேன். ஆட்சியாளர்களின் பெயரால் அதிகாரிகள் தான் ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.


முதல்வர் ஒரு கடிதம்,கழக பொது செயலாளர் மக்கள் தலைவி சின்னம்மா ஒரு கடிதம் என தமிழக அரசே ஒருமித்துக் குரல் கொடுக்கவில்லையே..! அதிலும் காங்கிரஸ் திமுக ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டது என அறிக்கை அக்கப்போர்கள் வேறு.. ஆனால் அவர்கள் காலத்தில் தடை இருந்தாலும் ஜல்லிக்கட்டு நடக்கவாவது செய்தது.. கடந்த மூன்று ஆண்டுகளாக நடக்கவே இல்லையே ஐயா..!சரி இப்போது என்ன செய்ய வேண்டும்.? எனக்குத் தெரிந்து இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான‌ வாய்ப்புகள் மங்கிவிட்டன. நமது போராட்டங்களெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான்.. ஆனால் ஊதுவதை நிறுத்தக்கூடாது ஒருபோதும்..!ஒன்று கேட்கும் வரை ஊதுவோம் இல்லை காதே போகும் வரை ஊதுவோம்... இந்த ஒற்றுமை அனைத்திலும் இருக்க வேண்டும்..


எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் என நம் முதல்வர் அறிக்கை வெளியிட்ட போது சரி இந்த வருடம் அனுமதி கிடைக்காவிட்டாலும் இந்திய அரசை எதிர்த்து போலீஸ் பாதுகாப்போடு ஜல்லிக்கட்டை நடத்தி கெத்து காட்டிவிடுவார் நம்ம ஓபிஎஸ் என்று நினைத்திருந்தேன்.. அதற்கும் வேட்டு வைக்கும் விதமாக சுனாசானா ஆட்சிக் கலைப்பு எனும் அஸ்திரத்தை ஏவிவிட்டான். சும்மாவே இந்த மனுசன் பயந்தவரு.. அதிமுக அல்லக்கைகளோ இல்லை நம்ம மினிம்மாவோ காத்திருப்பது இந்த நாலரை வருட ஆட்சிக்குத்தான்.. அதுவும் போகும் என்று தெரிந்தால் காலில் விழுவதற்கும் வெக்கப்படமாட்டார்கள்.. வீணே தடையை மீறுகிறேன் என தமிழக போலீசிடமே அடி வாங்காமல் ஓரமாக போய் பம்மிவிடுவது தான் போராளீஸ்களுக்கு நல்லது... ஆனால் இனி இது போல செய்ய யோசிக்கும் அளவுக்கு நம் போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்... நம் ஒற்றுமையை உரக்கக் காட்டிட வேண்டும்... #எழுவாய்_தமிழா

No comments:

Post a Comment