Tuesday, July 12, 2016

காஸ்மீர் பிரச்சனை எப்போது தான் முடியும்..?

காஸ்மீர் பிரச்சனை எப்போது தான் முடியும்..?

யோசித்துப்பார்த்தால் நாம் பிறந்த தேசமும் சரி இனமும் சரி (தமிழகம்) சுதந்திரத்துக்குப் பின் ஒரு போதும் அத்துமீறி அல்லது நீதிக்கு புறம்பாக எந்த பெரிய‌ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை. சுதந்திர வங்க தேசம் ஒரு அத்தியாவசிய தேவையாய் இருந்ததால் அது விதிவிலக்கு. கன்னடர் தமிழரை விரட்டி விரட்டி அடித்த போது,இலங்கை இனப்பிரச்சனையில் நம் ராணுவ நடவடிக்கைகள் என சொல்லிக் கொண்டே போகலாம். ஆனானப்பட்ட உலக வல்லரசாம் இங்கிலாந்தின் நேர்மையும் கூட சில்காட் அறிக்கையால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஆக அத்துமீறுதல் என்ற நிலை இந்தியாவுக்கு என்றைக்கும் சாத்தியம் இல்லை,ஏன் விரும்பத்தகாத‌ நிலையும் கூட.




காஷ்மீர் பிரச்சனையின் நீண்ட வரலாறு நமக்கு நன்கு தெரியும்.அண்ணன் தம்பியாய் அத்துக்கொண்டு போன பாகிஸ்தான் தனியே போன பங்காலி காஷ்மீரத்தையும் தன்னோடு இணைத்துக் கொள்ள விரும்பியது. தப்பே இல்லை தான். காஷ்மீர் விரும்பாத நிலையில் போர் தொடுத்தது பாகிஸ்தான். அப்போதும் நாம் அந்த விசயத்தில் தலையிடவில்லை. நமக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலத்துடன் திருப்தியாய் அடுத்தடுத்த விசயங்களில் தான் கவனம் செலுத்தினோம்.பக்கத்து தேசம் அடித்துக் கொள்வதை கவனிக்க மட்டுமே செய்தோம். ஏனென்றால் இங்கே நமக்கு அதைவிட பெரிய தலைவலிகள் இருந்தது.(சுதேச ஒன்றியங்கள்) ஆனால் அப்போது காஷ்மீர் மன்னர் நம் உதவியை ஒரு பெரியண்ணன் மனப்பாண்மையோடு செய்து தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போதும் நம் பிரதமர் நேரு இதில் தலையிட விரும்பவில்லை. பின்பு காஷ்மீர் தன் நிலைப்பாட்டை மாற்றி இந்திய யூனியனுடன் இணைய சம்மதித்த பின்பே அதாவது இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் மாறிய பின்பே வலுவாக தலையிட வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானது. வேறு வழி இல்லை ராணுவ நடவடிக்கை தான்.


ஆனால் அதற்குள்ளாக 30% காஷ்மீர் இடங்கள் பாகிஸ்தான் கைவசம் சென்றுவிட்டன. இந்தியா அப்போது கூட கண்ணியத்துடன் பாக் படையை முறியடித்ததே தவிர இழந்த இடங்களை மீட்க தொடர்ந்து போரிடவில்லை.ஒரு வேளை தொடர்ந்திருந்தால் இன்றைய காஷ்மீர் பிரச்சனை இருந்திருக்காது. உண்மையை சொல்லப்போனால் இந்தியா நினைத்திருந்தால் காஷ்மீரை மட்டுமல்ல ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் கைப்பற்றி இருக்கலாம். ஆனால் அது முறை சார்ந்த போராக இருந்திருக்காது. அந்த இடங்கள் இன்றளவும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்ற நிலையிலேயே இருக்கிறது. அதற்காகத்தான் இன்றளவும் பதற்றம் அந்த மலை தேசத்தில்.


இடையில் 4 முறை இந்தியாவுடன் போரிட்டும் (காஷ்மீருக்காகத்தான்) அந்த 30% தாண்டி ஒரு அடி கூட முன்னேற முடியவில்லை. எல்லா போரிலும் (வங்கதேசப்போர் தவிர‌) இந்தியா தற்காப்பு யுத்திகளை மட்டுமே கையாண்டது.எந்த கொம்பனும் எல்லை தாண்டி போரிடுதல் தவறு என இந்தியாவை தடுக்க முடியாது. இருந்தும் அதை கடைபிடிப்பது நம் தேச கண்ணியம் என அமைதியாகவே இருந்து வருகிறது. நினைத்துப்பாருங்கள் இரண்டு அணு ஆயுத நாடுகள் கார்கிலில் மோதிக் கொண்டதை. பாகிஸ்தான் தோல்வியின் இறுதி தறுவாயிலும் அணு ஆயுத்தத்தை பயன்படுத்தவில்லை. ஒவ்வொரு போரிலும் நாம் வென்றோம் என்பதைத் தாண்டி பாகிஸ்தான் படைவீரர்களின் பலிக்கு நிகராக நாமும் இழந்துள்ளோம். இன்னும் சொல்லப்போனால் கார்கிலில் அவர்களை விட நம் வீர்ர்களே அதிக பலி. காரணம் கண்ணியமான போர் முறை. பாகிஸ்தான் ஒவ்வொரு முறையும் அத்துமீறும். கண்ணியமெல்லாம் கிடையாது. அதை முறியடிப்பதில் மட்டுமே இந்தியா கவனம் செலுத்தும்.



இதையே சாக்காக வைத்து தான் கொஞ்சம் முயன்றால் இந்தியாவை வென்றுவிடலாம் என ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் நினைக்கிறது.  இது தான்  இந்திய காஷ்மீரக பாகிஸ்தானின் சுருக்கமான வரலாறு.மொத்தத்தில் காஷ்மீரக பிரச்சனியில் சில தீர்வுகள் மட்டுமே சாத்தியம். ஒன்று ராணுவ நடவடிக்கையில் இழந்த காஷ்மீர் பகுதிகளை மீட்பது. இரண்டு பாகிஸ்தானோடு பேசுவது. மூன்று ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களுடனும் பேசுவது.இல்லை போய்த் தொலை சனியனே என காஷ்மீரகத்தை கைவிடுவது.

ராணுவ நடவடிக்கை ஒருபோதும் சாத்தியம் இல்லை.உலக நாடுகள் அச்சுறுத்தல்,ஐநா தலையீடு ஆகியவை இருந்தாலும் இந்தியா நினைத்தால் மட்டுமே அது சாத்தியம். ஒரு வேளை ஏதேனும் தகுந்த சந்தர்ப்பம் கிட்டி போர் சாத்தியமானால் உலகின் எந்த கொம்பனும் இந்தியாவை தடுக்க முடியாது. இன்னொன்று பாகிஸ்தானும் ஒரு அணு ஆயுத தேசம் என்பதை மறந்துவிடக்கூடாது. அணு ஆயுதம் உபயோகிக்காமல் ஒரு போர் நடந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்க விளைவுகளைத் தரலாம். ஆனால் அது நடைபெற வாய்ப்பில்லை. அணு ஆயுதத்தை கழித்துவிட்டால் பாகிஸ்தான் ராணுவம் ஒன்றுமே இல்லை என்பதால் விபரீத முடிவாகிவிடவும் வாய்ப்பிருக்கிறது. (உலகப்போரே மூழளாம்)


அடுத்த வாய்ப்பு பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை. அது எப்படி நடைபெறும் அதில் பாகிஸ்தான் நிலைப்பாடுகள் சமரசம் செய்யத்தக்கவை தானா என யோசித்தாலே உண்மை விளங்கிவிடும்.

அடுத்த கொஞ்சம் சாத்தியமாகும் வாய்ப்பு காஷ்மீர் மக்களோடு பேசுவது.இங்கிலாந்து ஸ்காட்லாந்து மக்களோடு பேசுவதைப்போல. அது தான் வாக்களித்து தங்களுக்கான அரசாங்கத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்களே என நீங்கள் கேட்கலாம். நாம் ஏற்கிறோம்,ஆனால் பாகிஸ்தான் ஏற்கவில்லையே. எனவே  ஒரு முறை பொது வாக்கெடுப்பு நடத்த யோசிக்கலாம். ஏனென்றால் காஷ்மீரால் இந்தியா மிகுந்த உடல்பலத்தையும் பொருளாதார பலத்தையும் இழந்து வருகிறது. ஆனால் அந்த பொது வாக்கெடுப்பு இந்திய இறையாண்மைக்கு எந்த விதத்திலும் பாதிப்பைக் கொடுத்துவிடக் கூடாது.


ஒருவேளை வாக்கெடுப்பில் எதிர் நிலைப்பாடு வந்துவிட்டால்...? சான்ஸே இல்லை ! காஷ்மீர் மக்கள் புத்திசாலிகள்.. அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள்.தன்க்கு எதிராக ரிசல்ட் வந்தால் பாகிஸ்தான் ஏற்காது என்பதையும் நினைவில் கொள்க. இல்லையென்றால் கடைசி வாய்ப்பான கைகழுவுதல் தான். ஐநா சபை பார்த்துக் கொள்ளட்டும் என விலகிக்கொள்தல்.அப்படி செய்தால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு சரியும்.எனவே இதுவும் சாத்தியமில்லை//! ஆக காஷ்மீர் பிரச்சனை எப்போதும் முடிவடையாது  என்று புரிந்து கொண்டிருப்பீர்கள்.. தலைப்பை மீண்டும் படிக்கவும்....! :) :)

1 comment:

  1. காஷ்மீர் பிரச்சினை என்பது சிந்துபாத் கதை போல்தான்... இப்போதெல்லாம் முடிவுக்கு வராது... பாகிஸ்தான் பக்கம் போனால் கூட அங்கிருந்து அடுத்த இடத்தில் பிரச்சினையை பண்ணிக் கொண்டுதான் இருப்பார்கள்...

    ReplyDelete