Monday, March 31, 2014

பிரிவுமடல்...


எங்கள் பல்கலைக்கழகத்தின் முதல் பிரிவுபச்சார விழாவில் நான் எழுதி வாசித்த பிரிவு மடல்...............





இந்த நான்கு ஆண்டுகள் வெறும் ஆண்டுகள் மட்டுமல்ல!

இங்குள்ள ஒவ்வொருவரின் வரலாறு எழுதப்பட்டதன் சரித்திரக் குறியீடு !

வாழ்க்கைப்பாடத்தை அனுபவித்து மகிழ்ந்த ஒரு காவியக் கணக்கு!

பூமியை ஆள புவித்தகவல்களை பேராசிரியர்களிடமிருந்து பெற்றதன் அடையாளம்!

நண்பனுடைய புதுச்சட்டையை அவனுக்கே தெரியாமல் அணிந்துவந்த நாட்களின் தொகுப்பு!

வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு சென்ற சினிமாக்களாக,

கல்லூரி கலைவிழாக்களில் கலந்துகொண்ட போட்டிகளாக,

தோழர்க‌ளின் டிபன் பாக்ஸ்க‌ளை காலிசெய்த‌ இடைவேளைக‌ளாக‌,

ந‌ட்பாக‌,காத‌லாக‌,ச‌ண்டைக‌ளாக‌,தேர்வுக‌ளாக‌,திட்டுக‌ளாக‌,ஆசைக‌ளாக‌,அரிய‌ர்க‌ளாக‌,விடுமுறைக‌ளாக‌ ஏதோ ஒரு வித‌த்தில் ஒவ்வொருவ‌ரின் உள்ள‌த்திலும் அழியாத‌ கோல‌ங்க‌ளை வ‌ரைந்து சென்றிருக்கும் இந்த‌ நான்கு ஆண்டுக‌ள் ந‌ம்மைக் க‌ட‌ந்து செல்ல‌வில்லை! க‌ட‌த்தி செல்கிற‌து புது உல‌க‌த்தைக் காட்டுவ‌த‌ற்கு!


நினைவுக் கொசுக்க‌ளால் நித்திரை தொலைக்க‌ப்போகும் நீள‌ இர‌வுக‌ளில் இந்த‌ நினைவுக‌ளையெல்லாம் அசைபோட்டுப் பாருங்க‌ள்!


அடுத்த‌ க‌ண‌மே உங்க‌ள் க‌ண் முன்னால் இந்த‌  அண்ணா ப‌ல‌க‌லைக்க‌ழ‌க‌ம் வ‌ந்து நிழ‌லாடிக் கொண்டிருக்கும் !


ப‌ல்க‌ழைக்க‌ல‌க‌ம் ம‌ட்டும‌ல்ல‌ அங்குள்ள‌ உங்க‌ள் வ‌குப்ப‌றையின் ஒரு மூலையிலே சுவ‌ரில் கிறுக்கிய‌ கிறுக்க‌ல்க‌ள் கூட‌ உங்க‌ள் க‌ண்க‌ளைவிட்டு ம‌றைய‌ப்போவ‌தில்லை!


எந்த‌ ஒரு தாய்க்கும் த‌ன‌து மூத்த‌ குழ‌ந்தையின் மீது கொஞ்ச‌ம் க‌ரிச‌ண‌ம் அதிக‌மாக‌ இருப்ப‌து போல‌ இந்த‌ ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்திற்கும் உங்க‌ள் மேல் க‌ரிச‌ண‌ம் அதிக‌ம் தான்?  க‌ல்லூரிக்கு இருக்கிற‌தோ? இல்லையோ? எங்க‌ளுக்கு அதிக‌ம் தான்  , எத்த‌னை பேரைப் பார்த்தாலும் உங்க‌ளைப் பார்க்கும் போதும‌ட்டும் ஏதோ இன‌ம் புரியாத‌ தாக‌ம் , நேச‌ம்...

தனையனாக, தமக்கையாக,தோழனாக, தோழியாக,சகோதரனாக, சகோதரியாக எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த வழிகாட்டியாக எங்களை வழிந‌டத்தியவர்கள்!

இன்று வழிகாட்டியவர்களுக்கு வழியனுப்புவிழா! விம்முகிறது நெஞ்சம் இருந்தும் விழைகிறது கரங்கள் விடைகொடுப்பதற்கு!

நாங்கள் என்றுமே முதல்வர்கள் தான் என்பதனை மீண்டும் ஒருமுறை இந்த உலகத்திற்கு காட்ட, அன்று பற்றிய கரங்களை இன்று விடுகின்றோம் மீண்டும் ஒருநாள் இணைந்து கரகோசம் எழுப்ப!




உங்களை வழியனுப்புவது நாங்கள் மட்டுமல்ல இந்த நெல்லை மாநகர வீதிகளும் தான்!


எதிர்காலத்தில் நேரமிருந்தால் இங்குள்ள வீதிகளில் நடந்து தேடிப்பாருங்கள் நீங்கள் தொலைத்த நினைவுகளை அது தாங்கி நிற்கும்!

உங்களுடைய வெற்றி வாழ்க்கையில் சாதிப்பதில் மட்டுமல்ல, உங்களுக்கு அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்த இந்த பல்கலைக்கலகத்திற்கு நீங்கள் ஏற்படுத்தப்போகும் வரலாற்றிலும் தான்!

குறித்துக் கொள்ளுங்கள் இந்த நாள் உங்கள் வாழ்நாளின் எந்த நாளிலும் மறக்க  முடியாத  நாளாகப்போவது மட்டும் நிஜம்!

ஒன்று மட்டும் சொல்கிறேன் இது முடிவல்ல முடிவுக்ளின் பின்னால் ஏற்படப்போகும் புது அத்தியாயத்தின் ஆரம்பம்!!

இன்று பிரிகின்றோம், நம்பிக்கை கொண்டு பாருங்கள் என்றாவது ஒரு நாள் மீண்டும் சந்திப்போம் !!!!!!!!!!!!!!!!


வாழ்த்துகளுடன் உங்கள் சீலன், மற்றும் உங்கள் இளைய மாணவர்கள் ,அமைப்பியல் துறை, அண்ணா பல்கலைக்கழகம் திருநெல்வேலி......


உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்..

Monday, March 24, 2014

இந்திய ஐக்கிய நாடுகள்

இந்திய ஐக்கிய நாடுகள்  




ஐக்கிய அமேரிக்கா,ஐக்கிய அரபு,ஐக்கிய ஐரோப்பா  கேள்விப்பட்டிருக்கிறோம் அது என்ன ஐக்கிய இந்தியா?.

ஆம் இந்தியாவின் பெயரை மாற்ற வேண்டுமாம் கூறுவது தமிழின தலைவர் வைகோ அவர்கள். வைகோ மேல் வைத்திருந்த கொஞ்ச மரியாதையும் போய்விட்டது. முதலில் அவர் போய் ப.ஜ.க உடன் சேர்ந்தபோது வருத்தமாக இருந்தது.இப்போது கோபம் வருகிறது.




வைகோ அவர்கள் சமிபத்தில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தும் வரவேற்கப்படவேண்டிய அம்சங்கள் , அனால் இந்த ஒன்றைத்தவிர.



இந்தியா பெயரை கேட்டவுடன் நம் மனதில் எழும் மகிழ்சி என்பது சாதாரண மகிழ்சியா என சிந்தித்துப் பார்த்தால் கண்டிப்பாக இல்லை .உலகிலேயே நாட்டுப்பற்று மிகுந்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பது சந்தேகமே இல்லாமல்  நாம் தான் , ஆனால் நம் நாட்டுப்பற்றை குறைக்கும் விதமாகவே பார்க்கத் தோன்றுகிறது இந்த அறிவிப்பை .





இந்தியா எத்தனை தேசமாக வேண்டுமானாலும் பிரிந்து இருந்திருக்கட்டும், ஆனால் கடந்த 100 ஆண்டுகளாக நாம் இந்தியர்களாகத்தானே இருக்கிறோம்?

இப்போது என்ன அவசியம் இருக்கிறது.

மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து ஆனால் அதற்கும் பெயரை மாற்றுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இதில் உள்ளர்த்தம் இல்லாமலா இருக்கும். அதுவும் அவர் இருக்கும் கூட்டணியில் இது சாத்தியம் இல்லைதான் ஆனாலும் இது பிரிவினைக்கு வழிவகுக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம். அமெரிக்காவை கூறலாம் ஆனால் அங்கே ஒரே மொழி ஆனால் இங்கே?


இந்தியாவின் பலமே அதன் ஒருமைப்பாடு தான், ஆயிரம் தடவை அடித்துக்கொண்டாலும் நமக்கு எனும் போது எல்லோரும் ஒன்று கூடுவது எவ்வளவு பெரிய பலம். இந்திய ஐக்கிய நாடுகள் என்பதில் உள்ள நாடுகள் எனும் பண்மைச்சொல் ஒன்றே போதுமே நம் ஒருமைப்பாட்டுணர்வைக் குலைக்க.



முதலில் நான் ஒரு இந்தியன் பின்னரே தமிழன் எனும் உணர்வு எல்லோர் மன‌திலும் இருந்து  அப்படியே தலைகீழாக இடம் மாறும் . அது போல நமக்கும் பிற மாநிலத்தவர்க்குமான தொடர்பு குறையவும் வாய்ப்பு இருக்கிறது.



என்னைப் பொறுத்தவரை நான் முதலில் ஒரு இந்தியன் அதன் பிறகு தமிழன் பின்னர்தான் எல்லாமே! நீங்கள் கேட்கலாம் , நீ 100 ஆண்டுகளாகத்தானே இந்தியன் 6000 ஆண்டுகளாக தமிழன் தானே என்று? அப்படியானால் தமிழ்நாடும் சேர, சோழ, பாண்டிய நாடுகளாகத்தானே இருந்தது. எனவே நான் ஒரு சேரத் தமிழன், சோழத் தமிழன், பாண்டியத் தமிழன் என்று கூறுவீர்களோ? கூறினாலும் கூறுவர் சில பிரிவினைவாதிகள். நீங்கள் மட்டுமே கூறுங்கள், பிறரை கூறச்செய்துவிடாதீர்கள்!!!!!! ‍


இந்தியா என் தாய் நாடு இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர். என் தாய்த் திரு நாட்டை உளமாற நான் நேசிக்கிறேன்!‍ 

ஒரு முறை உங்களுக்குள்ளாகவே சொல்லிப் பாருங்கள் பிரிவினை எண்ணங்கள் அனைத்தும் ஓடி மறைந்துவிடும்!!!!!!!!




உங்கள் சீலன்...


Wednesday, March 12, 2014

என்னுடைய ஓட்டு ?




நான் பிறந்தது, வளர்வது எல்லாமே புதுக்கோட்டை மண்ணில் தான். ஒவ்வொருவருக்கும் தான் பிறந்த ஊர், நாடு,தாய் மொழி மேல் பற்று இருப்பது போலத்தான் எனக்கும். 



புதுக்கோட்டை நகருக்கும்,சமஸ்தானத்திற்கும் தனி வரலாறே உண்டு என்பது நூற்றாண்டு கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்நேரம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

                                         TN Districts Pudukkottai.gif




சுதந்திரம் அடைந்த பின் இந்தியத் திரு நாட்டுடன் இணைந்த முதல் சமஸ்தானம் புதுக்கோட்டை தான். 1912 ம் ஆண்டிலேயே நகராட்சியாகிய நமது நகரம் தொடர்ந்து அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டு வருவது உண்மைதானா என ஆராயும் போது, ஆம் ஓரளவு உண்மைதான் என்று தோன்றுகிறது.

1948 ல் தனி சமஸ்தானமாக இணைந்த புதுகை, 1974ம் ஆண்டில் தான் தனி மாவட்ட அந்தஸ்தே அடந்தது. அதே போல 1988 ம் ஆண்டில் தான் தேர்வுனிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 

                        படிமம்:Pudukkottai taluks.gif



ஆங்கிலேயர் காலத்தில் தனி சமஸ்தான அந்தஸ்துடன் திகழ்ந்த பெருமையுடையது புதுக்கோட்டை. கடந்த 1912 -ம் ஆண்டு அப்போதைய சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை நகராட்சி உருவானது. சமஸ்தானத்தில் இருந்த ஒரே நகராட்சியும் இதுதான். அப்போது நகரசபைக்கு 18 உறுப்பினர்கள் இருந்தனர்.

தொடக்ககாலத்தில் மூன்றாம் நிலை நகராட்சியாக இருந்த நிலையில், 1949 -ல் இரண்டாம் நிலைக்கும், 1963 -ல் முதல் நிலை நகராட்சியாகவும், 23.3.1988 -ல் தேர்வு நிலை நகராட்சியாகவும் படிப்படியாக தரம் உயர்ந்தது. இதையடுத்து கடந்த உள்ளாட்சித் தேர்தலுக்குமுன் புதுக்கோட்டை ஊராட்சி நகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் தற்போது  நகர்மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில்,  நகராட்சியின் ஆண்டு வருவாய் ரூ 10 கோடியும், ஒரு லட்சத்துக் மேலான மக்கள் தொகையும் இருந்தால் அந்த நகராட்சியை சிறப்பு நிலைக்கு உயர்த்தலாம் என்பது அரசின் கொள்கை முடிவு என்ற நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்குமுன்பே  புதுக்கோட்டை நகராட்சியின் ஆண்டு வருவாய் ரூ 10 கோடியாகவும்,  வரவு, செலவுத்திட்டம் ரூ. 16 கோடியாகவும், மக்கள்தொகை ஏறத்தாழ 2  லட்சத்துக்கு மேலாகவும்  அதிகரித்த நிலையில், இன்னும் சிறப்புநிலைக்கு அந்தஸ்துக்கு தரம் உயர்த்தப்படாதது ஏன் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்து நிற்கிறது.

சிறப்பு நிலை தகுதி நிலைக்கு உயர்ந்தால்  மொத்த நிதி ஒதுக்கீட்டில் 20 சதவீதம் அதிகரிக்கும், குடிநீர், சாலைகள் , தெருவிளக்குகள் ஆகிய பிரிவுகளுக்கு தற்போதுள்ள ஓவர்சீயர் பதவி தகுதி உதவி பொறியாளர் நிலையில் தனி பதவியிடங்கள் கிடைக்கும்,  நகராட்சி ஆணையர் தகுதி கோட்டாட்சியர் பதவி தகுதியில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் தகுதிக்கு உயரும், இதனால் அனுபவமிக்க மூத்த அதிகாரிகள் மட்டுமே இப்பதவிக்கு வர முடியும், அலுவலர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை உயரும். மேலும் ரூ 30 கோடி வரையிலான திட்டங்களை நகராட்சி நிர்வாகமே சுயமாக மேற்கொள்வது,  மத்திய அரசின் நிதி, கூடுதல் மானியங்கள் போன்ற  நன்மைகள் கிடைக்கும்.  இந்நிலையில், கடந்த 1988 -ல் தேர்வு நிலை நகராட்சியானபின் சுமார் 25 ஆண்டுகளாக சிறப்பு நிலைக்கு உயர்த்தப்படாமல் இருக்கும் ஒரே நகராட்சி புதுக்கோட்டை மட்டும்தான் என்றால் வியப்பில்லை. நன்றி - தினமணி 



நமது அருகிலுள்ள காரைக்குடி இன்று சிறப்பு நிலை நகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதன் மக்கள்தொகை 88000(2001 கணக்கின் படி), நமது நகரத்தின் மக்கள் தொகை 1.3 லட்சம் அதே 2001‍ கணக்கின்படி. இவை மட்டுமல்ல, இன்னும் பலவிததில் காணா நகராகவே இருக்கிறது நம் நகரம் .
                               


                                          



இந்தியாவிலேயே முதன் முதல் பெண் மருத்துவர் பிறந்த மண்ணில் ஒரு 
மருத்துவப் பல்கலைக்கழகம் கூட கிடையாது. மருத்துவப் பல்கலை கூட வேண்டாம் ஒரு அரசுப் பல்கலையாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒரு அரசு பொறியியல் கல்லூரிகூட‌ நகரக் கட்டுமானத்திற்கே எடுத்துக்காட்டாக விளங்கும் புதுக்கோட்டையில் இல்லை என்பது வேதனையான விசயம் தான்.


எல்லாவற்றுக்கும் மேலாக 1951 முதல் நமக்கு என இருந்து வந்த மக்களவைத் தொகுதிக்கான உரிமையும் கடந்த 2009ல் பறிக்கப்பட்டது தான் வேதனையிலும் வேதனை.

அப்போது நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம் நமது மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆம் படிவம் நிரப்பி பல வேலை முடித்து வாக்களிக்கக்கூடிய 49 ஓ ஓட்டு 14000  அருகில் விழுந்து ஒரு தேசியக்கட்சியின்( இன்னும் ஏன் பயப்பட வேண்டும் காங்கிரஸ் )  வெற்றியையே தட்டிப்பறித்த வரலாறு நிகழ்ந்தது. இல்லை நிகழ்த்தப்பட்டது !

அதைக்ககண்டும் அஞ்சாத மத்திய அரசு மக்களவை தொகுதிகளையே அந்தந்த மாவட்டத்  தலைநகராக்க வேண்டும் என்று கூறியது. (வீரப்ப மொய்லி ) நல்ல வேலை அது நிராகரிக்கப்பட்டது, இல்லையெனில் நமது மாவட்ட அந்தஸ்தும் பறிபோய் இருக்கும்.



                                                 



இப்படி சுதந்திர வரலாற்றில் நாம் எத்தனை காலம்தான் புறக்கணிக்கப்படுவோம்? இதற்கு ஒரு முடிவு வேண்டாமா? இந்த பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் கவனத்தையும், அரசுகளின் கவனத்தையும், அரசியல் கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்தால் தான் நாம் நமது உரிமைகளை பெறமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து!

படிவம் நிரப்பி, பல வேலை முடித்து 49 ஒ ஓட்டுப் போடும் முறையை மாற்றி எளிதாக நோட்டா வாக்களிக்கும் உரிமையை உச்ச நீதிமன்றம் நமக்கு வழங்கியுள்ளது.


நமக்கான உரிமையைப் பெற நாம் பயன்படுத்த‌ப்போகும் உரிமை நோட்டா. நான் இந்த தேர்தலில் தான் முதன்முறையாக வாக்களிக்க உள்ளேன். யாருக்கு ஓட்டுப் பொடுவேன் என்பது உங்களுக்கே தெரியும். நமது மாவட்டத்திலுள்ள 15 லட்சம் வாக்காளர்களும் போடப்போகும் ஓட்டு!!!!!!!!!!!! ஆம்!!!!!!


அப்போது தான் 2015ல் அமைக்க இருக்கும் தொகுதி மறுசீரமைப்பின் குழுவிற்கு நமது எதிர்ப்பை தெரிவிக்க முடியும் என்பது என் கருத்து. மாற்றுக்கருத்துகள் வறவேற்கப்படுகின்றன.  மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம்!


                                     ‍----உங்கள் புதுகை சீலன்!!!!