Thursday, June 19, 2014

தமிழ் மெல்ல இனி சாகும்......


தமிழ் மெல்ல இனி சாகும்......


சரியாகத்தான் க‌ணித்துள்ளான் பாட்டுப் புலவன் பாரதி. ஆம் தமிழ் மெல்ல அல்ல வேகமாகவே செத்துக்கொண்டு வருகிறது. வடமொழிக்கலப்பிலிருந்த நம் தாய்மொழியை காப்பாற்றிக்கொடுத்துச் சென்ற தமிழறிஞர்கள் திரும்பிவந்து எங்கே எங்களுடைய தனித்தமிழ் என்று கேட்டால் நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்? தாய் மொழி எழுதப்படிக்கத் தெரியாத ஆங்கிலேயரையும், ஜெர்மானியரையும், போர்ச்சுக்கீசியரையும், சீனர்களையும் உங்களால் காட்ட முடியுமா? ஆனால் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத பச்சைத் தமிழர்களை என்னால் காட்டமுடியும் !! எவ்வளவு வேதனையான உண்மை இது தெரியுமா.... 


ஒருவன் எப்பேற்பட்ட அறிஞனாகவும், கலைஞனாகவும், பன்மொழிப்புலவனாகவும் இருந்தாலும் ஏதாவது ஒரு விசயத்தைப்பற்றி சிந்திக்கும் போது தாய் மொழியில் மட்டும் தான் சிந்திக்க இயலும். இது உளவியல்பூர்வமான உண்மை. அப்படி சிந்திப்பதால் தான் சீனரும், ஜப்பானியரும் ,ரஸ்யர்களும் அமெரிக்காவிற்கு போட்டியாக உள்ளன.




உங்களுக்கெல்லாம் ஒன்று தெரியுமா ? அமெரிக்காவில் ஐ போன் வெளியான மறு நாளே அதே தொழில்னுட்பத்துடன் அந்த விலையைவிட 10 மடங்கு குறைவான விலையில் சைனாவில் வெளிவந்துவிடும். இதற்குக் காரணம் அவர்களின் சிந்திக்கும் ஆற்றல். ஆனால் இங்கே நமது இந்தியாவில் ம்கூம், முடியவே முடியாது. அப்படியானால் இந்தியர்களின் சிந்திக்கும் ஆற்றல் குறைவானதா? இல்லவே இல்லை, மொழி !! மொழி ஒன்றுதான் காரணம்.



கடந்த இருபது வருடத்தில் தமிழகத்திலிருந்து கண்டறியப்பட்டு வெளியான உற்பத்திப் பொருட்கள் ஒன்றையாவது உங்களால் காட்டமுடியுமா கிரைண்டரைத்தவிர?? முடியாது! ஏனெனில் நாம் தான் ஆங்கிலத்தை மொத்த குத்தகைக்கு வாங்கிவிட்டோமே, பிறகெப்படி முடியும்...... இந்தியாவில் வேறு எந்த மானிலத்திலாவது தாய் மொழியையே படிக்காமல்  ஆராய்ச்சிப் பட்டம் பெறமுடியுமா? ஆனால் தமிழ்நாட்டில் முடியும் !!!

வருடத்திற்கு 3 லட்சம் ஐடி இஞ்சினியர் வெளியே வரும் தமிழ்நாட்டில் கோவை 
சென்னையைத்தவிர ஐடி நகரங்களைக்காட்ட முடியுமா? ஆங்கிலம் ஒரு மொழியாகப் பார்க்கப்பட்ட காலம் போய், அது ஒரு கௌரவமாகப் பார்க்கப்படும் காலம் வந்துவிட்டது. நான்கு பேர் மத்தியில் தமிழில் பேசினால் அவமானமாகப் பார்க்கப்படும் காலம் வந்துவிட்டது.  ஏன் ஆங்கிலத்தை எந்த இடத்திலும் காணமுடியாத சீனாவும் ,ஜப்பானும்,ரஸ்யாவும், பிராண்ஸும் ,போர்ச்சுக்கல்லும்,ஜெர்மனியும் இன்று உலக வல்லரசுகளாகத் திகழவில்லையா? வளர்சி என்பது மொழியில் கிடையாது, மக்களிடம் தான் உள்ளது.

சரி இனிமேல் ஆங்கிலம் இல்லாமல் இந்தியாவில் முடியாது, அதற்காக தாய் மொழியை அப்படியே விட்டுவிடலாமா? பேருந்தில் பயணச்சீட்டு தாருங்கள் என்று கேட்பது எவ்வளவு அந்நியமாகத் தெரிகிறதோ, அதேபோல் நாளை இங்கே வா, உன் பெயர் என்ன? என்பன போன்ற சாதாரண வாக்கியங்கள் கூட அந்நியமாகத் தெரியாது என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது.?? இன்று தமிழ் நீடித்திருக்க ஓரளவு காரணம் அச்சில் இருப்பதால் தான். அதிலும் சில பத்திரிக்கைகளில் ஒற்றுப்பிழை, வார்த்தைப்பிழை, ஆங்கிலக் கலப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.



ஐக்கிய மொழி ஆய்வு நிறுவனம் இன்னும் 100 வருடங்களில் அழிந்துவிடும் மொழிகள் குறித்த ஆய்வில் தமிழ் மொழியும் முதலில் இடம்பெற்றதும், பின்னர் சில பல அரசியல் காரணங்களால் நீக்கப் பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படியே போனால் தமிழ் மொழியும் நம் பண்பாடு கலாச்சாரம் போல புத்தகங்களிலும், ஓலைகளிலும் இன்னும் சொல்லப் போனால் அருங்காட்சியகங்களிலும் மட்டும் காணக்கூடிய அவல நிலை ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது.


அந்த நிலையைத் தடுக்க வேண்டும் என்றால், அது நம் கையில் தான் உள்ளது என்று பொய் சொல்லமாட்டேன்.னம் கையிலும் ஓரளவு உள்ளது. இருப்பினும் அது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது. எங்கே முதலமைச்சரே, பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் முக்கிய கூட்டங்களிலும் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார் ! என்று நீங்கள் நினைப்பதையும் உணர முடிகிறது. இருந்தாலும் அரசாங்கம் மனது வைக்காவிட்டால் தமிழ் மெல்ல இனி சாகும் எனும் காலம் போய், தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது என்ற காலம் வந்துவிடும். 



உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாமே!!!!!

உங்கள் சீலன்...

Monday, June 16, 2014

நீயா நானாவும் என் கேள்விகளும் !!


 நீயா நானாவும் என் கேள்விகளும் !!




முன்குறிப்பு ;  நீண்ட நாட்களாக பதிவுலகிற்கு வரமுடியாமல் போய்விட்டது. காரணம் தேர்வுகளும் விடுமுறைகளும் தான். இனிமேல் எப்போதும் போல் வாரத்திற்கு மூன்று பதிவுகளாவது எழுதிவிட முயற்ச்சிக்கிறேன். 


நேற்றைய நீயா நானா விஜய் டிவி நிகழ்ச்சியில் மீண்டுமொருமுறை அழகான தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. கூட்டுக் குடும்பத்தை விரும்பும் தாய்மார்களையும் , தனிக்குடும்பம் தான் என்னுடைய தேர்வு என்ற இளம் பெண்களுக்குமான விவாதமாக அமைந்திருந்தது. வந்திருந்தவர்கள் அனைவருமே பெண்கள் தான். வழக்கம் போல கோபியின் தொகுப்பு நச் என்றிருந்தது.


தனிக்குடித்தனம் தான் என் தேர்வு என்ற பக்கம் இருந்த பெண்கள், கூட்டுக் குடும்பத்தை மிகவும் எதிர்த்தனர். கூட்டம், கும்பல், வடித்துக்க் கொட்டுதல் என்ற அளவிற்கு சென்று விட்டது. ஆனால் தாய்மார்கள் தரப்பில் ஒரே காரணம் தான். எங்கே பையனை நம்மிடமிருந்து பிரித்து அவர்களுடைய தாய் வீட்டோடு ஒட்டிவிடுவார்களோ என்பது மட்டும் தான். அதற்கு இளம்பெண்கள் அளித்த பதில் எனக்கு மிகவும் ஆச்சரியமானதாக இருந்தத

பெண்கள் அவர்களுடைய தாய் வீட்டை பிரிந்து வருவதை ஏற்றுக்கொள்ளும் இத்தமிழ்ச் சமூகம் , ஆண்கள் அவ்வாறு செய்வதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பது தான் அது. நியாயம் தானே?  , இது ஒரு ஆணாதிக்க தமிழ்ச்சமூகத்தினைத்தானே காட்டுவதாக உள்ளது, என்று கூட எண்ணத்தோன்றுகிறது. ஆம் ஆணாதிக்கமே தான்.

கடைசியில் கோபிநாத், ஒரு உணர்வுப்பூர்வமான கேள்வியாக," உங்கள் மகன் உங்களைப் பிரிந்து சென்றால் உங்கள் மனநிலை என்ன ?"என தாய்மார்களிடத்தில் வைத்த போது அவர்கள் உண்மையாகவே அழுதுவிட்டனர்.அதைப்பார்த்த நமக்கும் அதே மனநிலைதான். ஒரு பெண் கணவன் இல்லாமல் கூட காலத்தைக் கடத்திவிடலாம் ஆனால் மகன் இல்லாமல் முடியாது என்ற அளவிற்கு வருத்தப்பட்டுவிட்டனர். அதைப் பார்த்திருந்தால் நீங்களும் நானும் கூட வருத்தப்பட்டிருப்போம். ஏன் எதிரணி பெண்கள் கூட வருந்திவிட்டனர். 


அனால் இது நமது சமூகப்பண்பாட்டின் சிக்கலான உணர்வு முடிச்சு என்பதை சற்றே ஆழ்ந்து நோக்கினால் புரிந்து கொள்ளலாம். ஆம், காலம் காலமாக ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாட்டிலிருந்து வெளிவர முடியாத ஒரு சூழலை நமது சமூக அமைப்பு ஏற்படுத்திவிட்டது என்று தான் கூறவேண்டும். இதை வைத்துப் பாருங்கள், அப்படியானால் பெண்பிள்ளைகள் பெற்றவர்களின் எதிர்காலம் ? தங்களது முயற்சியினால் எல்லாவற்றையும் தனது மகளுக்காகச் செய்துவிட்டு, எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்கக்கூடாது என்பதாகத்தானே நமது சமூகச்சூழ்நிலை இருந்து வருகிறது. இது உண்மையில் சரியா என்பதை யோசித்தால் நமக்குக் கிடைக்கும் விடை ?????????


உண்மையிலேயே ஒரு பெண்ணின் சுதந்திரம் திருமணத்திற்குப் பிறகு பறிக்கப்படுவதும், ஆணின் சுதந்திரம் அதிகரிப்பதும் தானே காலம் காலமாக நடந்துவருகிறது. என்ன இருந்தாலும் பெண்பிள்ளைகளிடத்திலிருந்து உதவி கேட்பது என்பது எந்த ஒரு பெற்றோருக்கும் இழினிலையாகத்தானே பார்க்கப்பட்டு வருகிறது இன்றுவரை. ஒரு பெண் கணவனைவிட மகனை நம்புவதைப்போல ஏன் மகளை நம்பமுடியவில்லை. இருவருமே தனது பிள்ளைகள் தானே? விடை ஒன்றுதான் ஆணாதிக்கம் !!

ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டில் வாழ்வது சரி என்றால், ஒரு ஆண் திருமணத்திற்குப் பிறகு மனைவி வீட்டில் சென்று வாழ்வது மட்டும் ஏன் தவறாக இருக்கிறது.

தீர்வு ஒன்றுதான், ஒரு ஆண் தனது திருமணத்திற்குப் பின்  தாய் தந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்வது எவ்வளவு சரியோ, அதேபோல ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு அவளுடைய தாய் தந்தையை பார்த்துக்கொள்வதையும் ஏற்றுக்கொள்ளும் மன நிலை எல்லோரிடத்திலும் வர வேண்டும். வருவதற்கு கொஞ்சம் காலம் ஆகலாம். ஆனால் வருவதை தடுக்கக் கூடாது என்பது தான் என் எண்ணம். 


அந்த மாற்றத்தின் முதல் படியாகத்தான் நான் தனிக்குடித்தனத்தைப் பார்க்கிறேன். என்றாலும் கூட அதை ஏற்றுக்கொள்ள என் மனது மறுப்பதும் நிஜம். நானும் ஒரு ஆண் என்பதாலோ என்னவோ தெரியவில்லை. எனக்கு வரப்போகும் மனைவி அவளது பெற்றோரைவிட்டு வருவதைப் போல என்னால் எனது பெற்றோரைவிட்டு போக முடியுமா என்றால் , கண்டிப்பாக  முடியாது என்பது தான் விடை. ஆனால் என்னுடைய மகன் எங்களைவிட்டுப்  போகும் போது அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை அடைந்துவிடுவேன் என்று கண்டிப்பாக‌ நம்புகிறேன்.


உண்மையிலேயே நேற்றைய நீயா நானா பல கேள்விகளை என்னுள் ஏற்படுத்திச் சென்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பதில்களைத் தேட முயற்சிக்கிறேன்............

பதிவு குறித்து மறக்காமல் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

 நன்றி!

உங்கள் சீலன் !