Friday, April 25, 2014

ஏழு பேர் விடுதலை?


ஏழு பேர் விடுதலை?

ராஜீவ் கொலை குற்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான விடுதலைக்கெதிரான மத்திய அரசின் முறையீட்டிற்கு உச்சநீதிமன்றம் நேரடி தீர்ப்பு வழங்காமல் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி உத்தரவிட்டுள்ள நிலையில் ஏழு பேரின் விடுதலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதைப்பற்றிய ஒரு சிறிய அலசல் தான் இந்தப்பதிவு.


முதலில் குற்றம்சாட்டப்பட்ட அந்த ஏழு பேரில் நளினியின் தூக்கு தண்டனை ஏற்கனவே குடியரசுத்தலைவரால் குறைக்கப்பட்டதும் உங்களுக்கு நியாபகம் இருக்கலாம். இன்று அளிக்கப்பட்ட தீர்ப்புக்கான உத்தரவில் அரசியல் சாசன அமர்வு என்பது இனிமேல் தான் அமைக்கப்பட இருக்கிறது. அதுவரை இவர்களுக்கான விடுதலை தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் போன்றவர்களால் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. தீர்ப்பை எதிர்நோக்கியபோது மேலும் இழுத்தடிக்கும்விதமாகத்தான் இதை பார்க்கவேண்டியுள்ள நிலையை ஏற்படுத்தி உள்ளது.

சரி இந்தவிசயத்தில் தமிழக அரசியல் கட்சிகள் என்னவெல்லாம் செய்தன என்று பார்க்கவேண்டி உள்ளது. 

முதலில் திமுக. எதற்கெடுத்தாலும் வீராப்பு வசனம் பேசும் கட்சியான திமுக இந்த விசயத்தைப் பற்றியும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கவில்லை. கலைஞர் ஆட்சியில் இவர்கள் மீதான தூக்கு தண்டணை கருணை மனு குறித்து ஆளுநர் அமைச்சரவை முடிவைக்கேட்ட போது நளினிக்கு மட்டும் தூக்கு தண்டணையைக் குறைக்கலாம் என பரிந்துரைத்தது. இப்போது இவர்கள் விடுதலை ஆனால் வறவேற்போம் என்று கூறுகிறது. இதை ஆட்சியில் இருந்த போதே செய்திருக்கலாமே. சரி இவர்கள் பரிந்துரைத்தால் ஆளுநர் தூக்கை ரத்து செய்துவிடுவாறா? என்று கேட்கலாம். ரத்து செய்வதும் செய்யாததும் இரண்டாம் பட்சம், ஆனால் இவர்கள் பரிந்துறைக்கவே இல்லையே!. இப்போது தாம் தூம் என்று குதிக்கிறார்கள். என்ன லாபம்? மொத்தத்தில் திமுக இந்த விசயத்தில் உறுதியான நிலைப்பாடு இருக்கவில்லை என்பது தான் என் கருத்து.


அடுத்து ஆளும் அதிமுக. இந்த விசயம் இவ்வள‌வு தூரம் சென்றதற்கே அதிமுக தான் காரணம். வெறும் தேர்தல் அரசியலுக்காக இவ்வளவு அவசரப்பட்டதும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சரி இந்த விசயத்திலும் இக்கட்சியின் ஆரம்ப நிலைப்பாடு தெளிவானதாக இல்லை.விடுதலை செய்வதில் இவ்வளவு அவசரம் காட்டியதும் அதிமுக தான், நளினி பரோலில் செல்ல அனுமதி கேட்டபோது மறுத்ததும் அதிமுக தான்.அரசியல் சட்ட ஆலோசனைகளை ஆற அமர யோசித்து முடிவெடுத்திருக்கலாம். எங்கே தேர்தல் நேர கவர்ச்சி போய்விடுமோ என்று அவசர முடிவு எடுத்துவிட்டு இன்று பதறுகிறார்கள். இது போல் பலமுறை நீதிமன்றத்தால் குட்டு வாங்கியும் இருக்கிறது.(சமச்சீர் கல்வி போன்று)


காங்கிரஸ் மட்டுமே அன்றிலிருந்து இன்றுவரை எதிர்ப்பது என்ற ஒரே நிலையிலுள்ளது மனிதாபிமானமே இல்லாமல்.

தமிழ் ஆர்வலர்கள் வேறு. அவர்கள் தொல்லை வேறு தாங்க முடியவில்லை. விடுதலைப் புலிகள் தலைவர் பிராபகரனை தூக்கில் போடவேண்டும் என்று சொன்னவரையும், ஒருமணி நேரம் உண்னாவிரதம் இருந்தவரையும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்துவருகின்றனர்.பிறகெப்படி அவர்கள் குரல்கள் நேர்மையானதாக, உறுதிமிக்கதாக இருக்கும்?

இன்று இவர்கள் அந்த ஏழுபேரையும் நிரபராதிகள் என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்றோ குற்றம் நிரூபிக்கப்பாடதவரகள் என்றோ கூடச் சொல்லலாம்.அதை விடுத்து நிரபராதிகள் என்று சொல்வதெல்லம் திசை திருப்பும் முயற்சி. பிறகு ஏன் அவர்கள் அப்போதே விடுவிக்கப்படவில்லை? தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உச்சநீதி மன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டவர்களை நிரபராதிகள் என்று இன்று கூறும் இவர்கள் அன்றே வலிமையான வாதத்தை வைத்து விடுவித்திருக்கலாமே? ஆனால் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த ஏழு பேரும் ஏதோ ஒருவிதத்தில் ராஜிவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், காரணமானவர்கள் இல்லை என்பது சின்னக்குழந்தைக்குக் கூட தெரியும் என்பது உச்ச நீதிமன்றத்திற்கு தெரியாதா? தெரியாமலா தூக்குதண்டனை விதித்து தீர்பளித்தது. ஆனால் ஒன்று அவர்கள் நிரபராதிகள் என்று யாரும் சொல்லமுடியாது. அதே நேரத்தில் அவர்கள் குற்றவாளிகள் என்றும் சொல்லக்கூடாது. அது அவர்கள் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.


என்னுடைய பார்வையில் இன்றைய தீர்ப்பு ஏமாற்றத்தை தந்தாலும், முறையான தீர்ப்பு வரும் வரை மக்களைக்குழப்பாமல் இருக்கவேண்டும் இந்த அரசியல் கட்சிகள்.


என்னைப்பொறுத்தவரை இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான ஒரு அரசியல் அதிகாரப் போட்டியாகத்தான் பார்க்கிறேன். இருவரது போட்டியில் ஏழுபேர் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பம் தான் பாதிக்கப்படுகிறது. நான் மாண்புமிகு பாரதப்பிரதமரின் கொலையை நியாப்படுத்தவும் இல்லை.அவரையும் அவரோடு இறந்த குடும்பங்களையும் ஒரு நிமிடம் எண்ணிப்பார்த்தால் இது உங்களுக்கே விள‌ங்கும்.ஆனால் கொலைக்கு உண்மையான  காரணமானவர்கள் தண்டிக்க‌ப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை. அதற்காக இந்த ஏழுபேரை இனிமேலும் தண்டிப்பது நியாயம் ஆகாது.


முதலில் ,அவர்கள் இனி தூக்கு தண்டனை அடையப்போவதில்லை. அவர்களுக்கான விடுதலை தான் தள்ளிப்போடப்பட்டுள்ளது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.உச்ச நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அரசின் கொள்கை முடிவு விடுவிக்கலாம் என்பது தான்.இந்த முரண்பாடுகளெல்லாம் களையபடும். ஆயுள் தண்டனை என்பது எத்தனை வருடம் என்பதும் அரசியல் சாசன அமர்வினால் இனி கூறப்பட்டுவிடும், அதுவும் ஒருவித்ததில் நல்லது தானே.



இப்போது நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்பளித்த போது உச்ச நீதி மன்றம் இந்த வார்த்தையை பயன்படுத்தியது. இந்தியர்களின் கூட்டு மனசாட்சிப்படி எனும் வார்த்தைகள் தான் அவை. அப்படியானால் தமிழர்களுக்கு கூட்டு மனசாட்சி இல்லையா ? இந்த விசயத்தில் மொத்தமாக குழப்புவது உச்சநீதிமன்றம் தான் என்பது என் எண்ணம்.


ஆனால் குறைந்தபட்ச மனிதாபிமான அடிப்படையில் தீர்ப்பு வரும் வரை அவர்களை பரோலிலாவது விடுவிக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும் என்பது தான் என் கோரிக்கை. அதுவரை இந்த விசயத்தை அரசியலாக்காமல் இருக்கவேண்டும் இந்த அரசியல்வாதிகள். இன்னொன்று இன்றைய நிலைகளை எல்லாம் பார்க்கும் போது அரசியல் சாசணத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனும் வாதம் வலுப்படுவது போல் தான் உள்ளது. காலம் கடந்த நீதி அநீதிக்குச் சமம் தானே தவிர அநீதி ஆகாது என நம்புவோம்!!!1



உங்கள் சீலன்!!

Tuesday, April 22, 2014

முதல் வாக்காளர்களின் வாக்கும் என்னுடைய கணிப்பும்!!


முதல் வாக்காளர்களின் வாக்கு!!!

இன்றுடன் பிரச்சாரம் ஓய்வு. பொதுமக்களுக்கு நிம்மதி. வேட்பாளர்களுக்கு இனிதான் கவலை. கொடுத்த காசு வேளை செய்யுமா? ஜெயித்துவிடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? என யோசித்தே மண்டை வலி வரப்போகிறது வேட்பாளர்களுக்கு. இன்னொறு பிரச்சனையும் இருக்கிறது இந்த முதன் முறை வாக்காளர்களின் ஓட்டுகளைக் கவர்வது. ஆம் அதுவும் வெற்றியைத்தீர்மானிக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் கணிசமான ஓட்டுகள் கிடைக்கலாம். இந்த முறை முதன் முறை வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு கணிசமாக கிடைக்கும் எனப் பார்ப்பது தான், பார்க்க முயல்வதுதான் இந்தப்பதிவு,

இளைஞர்கள் மத்தியில் முதல்முறை வாக்களிக்கப் போகும் உணர்வே அதிகமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் மற்றவர்கள் போல குறிப்பிட்ட இந்தக்கட்சிக்குத்தான் வாக்கு என்றெல்லாம் முடிவெடுத்து செல்வதில்லை வாக்காளர்கள். தீர்க்கமான முடிவு அறிவுசார்ந்த வேட்பாளர் தேர்வு என இளம் வாக்காளர்களின் வாக்கு அமையும் என்று கூட சொல்லலாம்.இன்றைய தேதியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இதைப் பற்றி மற்றவர்களுடன் விவாதித்துக்கூட முடிவெடுக்கின்றனர். உதாரணமாக என் நண்பர்களையே சொல்லலாம்.


ஆனால் எதை வைத்து வாக்களிக்க உள்ளனர் என்று பார்த்தால் முக்கியமாக‌ ஊடகத்தை பார்த்து தான் தேர்வு செய்கின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நமது இளைஞர்களின் ஓட்டு யாருக்கு என்று பார்க்கவேண்டும். அவை கூட கூடப் படிக்கும் மாணவர்களிடம் விவாதிக்கப்பட்ட ஒரு தேர்வாகத்தான் பெரும்பாலும் இருக்கிறது. நான் பார்த்த பழகிய என் தோழர்கள் , என் பல்கலைக்கழக நண்பர்கள், என் விடுதி நண்பர்கள், என் ஊர் நண்பர்கள் யாவருமே புதிய வாக்களர்கள் தான் (நானுட்பட). அவர்களிடம் பல நேரங்களில் பேசியதிலிருந்து, அவர்களாகவே கூறியதிலிருந்து நான் கூற வருவதுதான் உண்மையாக இருக்கும் என்று கூறமுடியாது. சில இடங்களில் மாறலாம். ஆனால் பெரும்பான்மையாக இது தான் இருக்கிறது.


இன்றைய சூழலில் இளைஞர்களின் தேர்வாக இருப்பது கண்ணை மூடிக் கொள்ளுங்கள், மோடி மோடி மோடி தான். ஆம், என்ன காரணம் என்று பார்த்தால் ஊடகம். ஊடகங்களிம் மூலம் மோடிக்குக் கிடைத்த வெளிச்சம். இதில் தான் ஊடகங்கள் ஒருபக்கமாக இருக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது.
எப்போது மோடி பாஜகவின் பிரச்சாரக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அப்போதிலிருந்து நமோ கோசம் தான் எந்தப் பக்கத்தை புரட்டினாலும். இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மீதான வெறுப்பு. இதை வெறுப்பு என்று கூட சொல்ல முடியாது, போதும் என்ற மனநிலை. அவர்களே ஆட்சி செய்யக்கூடாது. மாற்றித்தான் பார்க்கலாமே என்ற எண்ணம் தான்.மூன்றாவது முகப்புத்தகம் . அதில் செய்யப்படும் பிரச்சாரம், மோடி புகழுரைகள் போன்றவை. இன்னொன்று இன்றைய இளைஞர்கள் மக்களவை, சட்டசபை தேர்தலுக்கான வித்தியாசத்தையும் புரிந்துவைத்துள்ளனர்.


நான் பல முறை மோடி போடும் வேசத்தை என் நண்பர்களிடம் விளக்கும் போது, அவர்கள் கூறும் ஒரே பதில், பிறகெப்படி அவர் முன்று முறை முதல்வராக வெற்றி பெற்றார் என்பது தான். அவரின் வரலாற்று அறிவு, பொருளாதார சிந்தனை  உள்ளிட்டவற்றை மன்மோகனோடு ஒப்பிட்டால் கண்டிப்பாக மோடி சிறந்தவர் இல்லை தான். ஆனாலும் அவரின் குஜராத் வளர்ச்சி வித்தை, அவரை காப்பாற்றிவிடுகிறது.


இரண்டாவதாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் மன்மோகன் பெயர் மிகவும் டேமேஜ் ஆகிக் கிடக்கிறது. இதுவும் ஊடகங்களைப் பார்த்து புரிந்துகொண்டதுதான் எனலாம். சோனியாவின் கைப்பாவை என தினமொறு செய்தியாகப் போட்டுப் போட்டு மன்மோகனை டேமேஜ் செய்துவிட்டன்ர்.  ராகுல் காந்திக்கு ஓரளவு இளைஞர்களிடம் ஆதரவு இருக்கிறது. ஆனாலும் மோடியோயுடு ஒப்பிட்டக்கூட முடியாத அளவில் தான்.


தமிழகக் கட்சிகளைப் பொறுத்தவரை இளைஞர்களின் ஆதரவு திமுக ஆதிமுக வுக்கு சம‌மாக இருக்கிறது. கேப்டனுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது, ஆனால் அது எவ்வாறு என நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சற்று அரசியலை கூர்ந்து நோக்கும் மாணவர்களிடம் மோடியின் பருப்பு வேகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரத்தில்  சிறுபான்மை இளைஞர்களிடமும் மோடி பெயர் வாங்க முடியவில்லை.

கலைஞர் பற்றிப் பார்த்தால் அவருடைய பெயரும் அவ்வளவாக இல்லை. குடும்ப அரசியல் , ஊழல் என அவர் பெயரும் டேமேஜ் தான். முதல்வரின் மீதும் நல்ல பார்வை இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கு, எழுதிவைத்துப் பேசுவது போன்றவைகளை தெரிந்தே வைத்துள்ளனர்.அதே நேரத்தில் லாப் டாப் திட்டத்தினால் ஓரளவு இளைஞர் ஆதரவு இல்லாமலும் இல்லை. வைகோவிற்கு நல்ல பெயர் உள்ளது. ஆனால் அது ஓட்டுகளாக மாறும் அளவிற்கு இல்லை. கம்யூனிஸ்டுகள் பற்றிய பார்வை அரசியலை கூர்ந்து நோக்கும் மாணவர்களிடம் மட்டுமே உள்ளது. அதே போல ஜாதிக்கட்சிளுக்கான ஆதரவு துளியும் இல்லை இன்றைய இளைஞர்களிடம். பாராட்டப்படவேண்டிய விசய‌ம் தானே?அதே நேரம் படிப்பறிவில்லாத முத‌ல் வாக்காளர்களிடம் ஜாதி கொடிகட்டிப் பறக்கிறது என்பதும் உண்மை. நோட்டாவிற்கும் கூட ஆதரவு இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக பயன்படுத்த‌ மாட்டார்கள். 


மொத்தத்தில் இன்றைய இளைஞர்களின் ஆதரவு கீழ்கண்டவாறு இருக்கிறது.


முதல் இடம்; நரேந்திர மோடி

இரண்டாவது; கேப்டன் விஜயகாந்த் (விதிமுறைகளுக்கு உட்பட்டது)

மூன்றாவது இடம் ; முதல்வர் ஜெயலலிதா

நான்காவது இடம்; கலைஞர் 

ஐந்தாவது இடம்; நோட்டா

ஆறாவது இடம்; மன்மோகன் சிங்க் ( எதிர்மறை ஆதரவு)

ஏழாவது இடம்; வைகோ ( வாக்காக மாறுமா எனத்தெரியவில்லை, நல்ல பெயர் இருக்கிறது)


தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் என்னுடைய கணிப்பாக சில தொகுதிகளின் வெற்றி நிலவரம். ( என்னுடைய கணிப்பு மட்டுமே)

சிவகங்கை( என்னுடைய‌ தொகுதி) ;  அதிமுக ஜெயித்துவிடும் என்றே தெரிகிறது. இரண்டாவது இடம் திமுகவிற்கு கிடைக்கலாம். கார்த்தி சிதம்பரம் தோல்வி அடைந்தாலும் கவனிக்கத்தகுந்த வாக்குகளைப் பெறலாம். ஹெச்.ராஜாவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது.


கன்னியாகுமரி;  பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றியடைவார் எனத்தெரிகிறது.காங்கிரஸ் வசந்த குமார் கவனிக்கத் தகுந்த வாக்குகளைப் பெறலாம்.

விருதுநகர்; வைகோ வென்றுவிடுவார் எனத் தோன்றுகிறது. ஓட்டு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும் எனப்படுகிறது.


நீலகிரி; திமுக ராஜா ஜெயிப்பார்.

மத்தியசென்னை; தயாநிதி மாறனுக்கு வாய்ப்புகள் அதிகம்.

தென்காசி; புதிய தமிழகம் கட்சிக்கே அதிக வாய்ப்பு.

சிதம்பரம்; விசிக்கு வாய்ப்பிருக்கிறது.

தஞ்சாவூர்; திமுக மிகக் குறைந்த வித்தியாசத்தில் ஜெயிக்கலாம்.

புதுச்சேரி; என். ஆர் காங்கிரஸ் ஜெயிக்க அதிக வாய்ப்பு, காங்கிரஸுக்கும் வாய்ப்பு அதிகம்.

அவ்வளவு தான் என்னுடைய கணிப்பு. மொத்தமாக அதிமுக  18-20 தொகுதிகள்.திமுக 16-18 பாஜக -1 மதிமுக -1 பாமக 0-1 தேமுதிக 0 தொகுதிகள் ஜெயிக்கலாம்.(பாவம் கேப்டனின் அரசியல் வாழ்க்கை இத்தேர்தலுக்குப் பிறகு என்ன ஆகப் போகிறது எனத்தெரியவில்லை)

இது பற்றிய என்னுடைய பதிவு;  http://pudhukaiseelan.blogspot.in/2014/04/blog-post_17.html


வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கிய நீங்கள், உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ஒருகணம் ஒதுக்கலாமே?

உங்கள் சீலன்!

கருத்துகள் எதிர்பார்க்கப்படுகின்றன!!!!







Thursday, April 17, 2014

கேப்டன் விஜயகாந்த்


கேப்டன் விஜயகாந்த் 







இன்றைய தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட கேப்டனுக்கு முக்கியமாக இருக்கிறது. இது முரசுக்கு  ஒரு மானப்பிரச்சனை என்று கூட சொல்லலாம். ஆனால் அதை விஜயகாந்த் புரிந்துகொண்டிருக்கிறாரா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை என்பதே விடையாக இருக்கும். 2005ல் கட்சி ஆரம்பித்தபோது இவர் மாற்று அரசியல் செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே விடையாகக் கிடைத்துள்ளது. ஆனாலும் இவருக்கென்று வாக்கு வங்கி உருவாகியிருக்கும் நிலையில் அதை வளர்த்துக்கொள்வதில் அக்கறை செலுத்தாமல் குறைத்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்.



2006 ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்த விஜயகாந்த் அதில் கணிசமாக ஒட்டு வாங்கவும் தவறவில்லை.  2009ல் மக்களவையில் தணித்துப்போட்டியிட்டு அரசியல் கட்சிகளை ஆட்டம் காணச்செய்த விஜயகாந்த் இன்று 2 மக்களவை தொகுதிக்காக தனது வாக்கு வங்கியை அடமானம் வைத்திருக்கிறார். மக்களோடும் தெய்வத்துடனும் கூட்டணி என்று சொல்லி தேர்தலை சந்தித்த கேப்டன் 2011 ஆம் ஆண்டு அம்மாவுடன் கூட்டணி வைத்து சட்டப்பேரவைத்தேர்தலைச் சந்தித்து வெற்றியும் கண்டார்.


2011 ல் ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்றியதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் தான் என்பது நாடறிந்த ரகசியம். ஆனால் விஜயகாந்த் எதிர் கட்சி தலைவர் பதவியை அடைந்ததற்கு அம்மாதான் காரணம் என்பதும் உண்மை. ஆம் ஸ்பெக்ட்ரம் ஊழலைத்தவிர்த்து திமுகவை குறைசொல்ல ஏதும் இல்லை, இலங்கை தமிழர் பிரச்சனை கூட அவ்வளவாக எடுபட்டிருக்காது, ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் 25000 வாக்கு வைத்திருக்கும் விஜயகாந்த் கட்சி தனித்து நின்றிருந்தால்.


அன்றைய சட்டப்பேரவைத்தொகுதி முடிவுகளை உற்று நோக்கினால் இந்த உண்மை விளங்கும். ஆம் அதிமுக கூட்டணி ஜெயித்த இடங்களில் ஏறத்தாழ‌

90 - 100 தொகுதிகள் 20000 வக்கு வித்தியாசத்திற்கு குறைவான வித்தியாசத்தில் ஜெயிக்கப்பட்டவை. ஒருவேளை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கேப்டனின் தேமுதிக தனித்து நின்றிருந்தால் இன்றைய நிலைமைட‌யே வேறு ஆம், அந்த 90 - 100 தொகுதிகளில் கண்டிப்பாக திமுக 50 - 60 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். எஞ்சிய தொகுதிகளை அதிமுக கைப்பற்றியிருக்கும். அப்படிப்பட்ட நிலையில் திமுக கூட்டணி 100  -

120 இடங்களிலும் சமமான இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றிபெற்று தொங்கு சட்டப்பேரவை அமைந்திருக்கும். ஆனால் தேமுதிக வின் வாக்குகளால் அதிமுகவும் அதிமுகவின் வாக்குகளால் தேமுதிகவும் பயனடைந்தன என்ற உண்மையை மறந்துவிட்டோம் இன்று.






அதற்கு பிறகு சட்டப்பேரவையில் அம்மா vs கேப்டன் களேபரங்கள் ஊர் அறியும் . அப்போதிலிருந்து தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தார் முதல்வர். தேமுதிக என்ற கட்சியை ஒழித்துக்கட்டுவதை தனது முக்கிய கடமையென நினைத்து அதை சரியாக செய்துவருகிறார். இதில் தான் விஜயகாந்தும் ஜெயலலிதாவும் வேறுபடுகின்றனர். அவரின் ராஜ தந்திரத்திற்கு முன்னால் விஜயகாந்த் காணாமல் போய்விடுவாறோ என்று எண்ணத்தோன்றுகிறது. சரி இப்போது விழித்துக்கொள்வார் அப்போது விழித்துக்கொள்வார் என்று பார்த்தால் ம்கூம் நடக்கவே இல்லை.



சரி அவருக்கு எதிராக அரசியல் செய்யவேண்டிய நிலைக்கு விஜயகாந்த் வந்துவிட்டார். அப்படியானால் அதற்கு சரியான இடம் திமுக தான் என்பதை மறந்துவிட்டார். கலைஞர் நேரடியாக அழைப்புவிடுத்தும் அங்கு செல்லாமல் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டார். இது அவரின் மிகப்பெரிய தவறு என்பது என் எண்ணம்.அதற்கு விஜயகாந்தின் ராஜ தந்திரம் காரணமாம். இப்போது நடக்கும் மக்களவைத்தேர்தலைவிட அவருக்கு 2016ல் நடைபெறப்போகும் சட்ட்ப்பேரவைதான் முக்கியமாம். இப்போது கலைஞரோடு கூட்டணி வைத்துவிட்டு இன்னும் இரண்டு வருடத்தில் அவரையே எதிர்க்க வேண்டுமே என்ற ராஜ தந்திரம் தான் அது. ஆஹா எவ்வளவு அருமையான எண்ணம். நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கு அவர் தகுந்த கூட்டணியில் அல்லவா சேர்ந்திருக்க வேண்டும். பா.ஜ.க உடன் சேர்ந்தார். யாரை எதிர்த்து அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறாரோ அவருடன் எதிர்காலத்தில் சேரப்போகும் கட்சியுடன் , ஒருவேளை நரேந்திர மோடி பிரதமராக வந்தால் அந்த அமைச்சரவையில் இவரும் இடம்பெறுவார், இவருடைய எதிரியும் இடம்பெறுவார். அல்லது இவர் கழட்டிவிடப்படுவார்.




எது எப்படியாயினும் நஸ்டம் விஜயகாந்துக்குத்தான். இடையில் காங்கிரஸ், தனித்துப்போட்டி என இமேஜை வேறு கெடுத்துக்கொண்டார். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் விஜயகாந்திற்கு அரசியல் தெரியவில்லை. தான் இருக்கும் இடத்தில் உண்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் எங்கு பொருந்தினாலும் அரசியலுக்குப் பொருந்தாது. அதை செய்து வருகிறார் captain. தமிழ்நாடு முழுவதும் அலைந்து கொண்டு தான் சார்ந்த கட்சிக்கு, கூட்டணிக்கு உழைத்து வருகிறார். எங்கே போனார்கள் தமிழினத்தலைவர்கள் வைகோ ! ராமதாஸ்! பொன்னார்! இல.கணேசன்! போன்றவர்கள்.


சரி இவரின் உழைப்புக்கு ஊதியம் கிடைக்குமா என்று பார்த்தால் அதுவும் சந்தேகம் தான். சிறுபான்மையின மக்களைப் பகைத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், தனது வாக்குவங்கியையும் அடமானம் வைத்துவிட்டார். ஒருவேளை இவர் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டு அதிமுகவை பகைத்துக்கொள்ளுமேயானால் அது தான் பா.ஜ.க இவருக்கு கொடுக்கும் உண்மையான  ஊதியம். அது நடைபெற குறைந்தபட்ச வாய்ப்புதான் உள்ளது. சரி போகட்டும் 2016 இருக்கிறது என்று தேற்றிகொள்ள்ளலாம் . அது கூட‌  2016 வரை இந்த கூட்டணி நிலைத்தால் தான், சட்டப்பேரவையில் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக வலுவடைய முடியும். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. வைகோ விஜயகாந்தை முதல்மைச்சராக, குறைந்தபட்சம்  முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வாரா ? இல்லை ராமதாஸ் தான் ஏற்றுக்கொள்வாரா? கண்டிப்பாக மாட்டார்கள்!!!!


தமிழ்நாட்டில் நடப்பது வாக்குவங்கி அரசியல் தான் என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறார் என்று தெரியவில்லை.




என்னைப் பொறுத்தவரை விஜயகாந்த், திமுகவுடன் சேர்ந்து தேர்தலைச்சந்தித்து அவரின் அரசியல் எதிரிக்கு தக்க பாடம் புகட்டியிருக்கவேண்டும். அல்லது தனித்தோ காங்கிரஸ் அல்லது இடது சாரிகளோடோ சேர்ந்து தேர்தலைச்சந்தித்து தனது பலத்தை மீண்டும் ஒருமுறை காட்டியிருக்கவேண்டும். ஆனால் இதை செய்யாமல் தானும் ஒரு அரசியல்வாதிதான் எனக்காட்ட ஒரு கொள்கை முரணான கூட்டணீயில் சேர்ந்து அவரின் அரசியல் எதிரிக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார். காலம் தான் பதில் சொல்லவேண்டும் அவர் அரசியலைக் கற்றுக்கொண்டு மீண்டு வருகிறாரா இல்லையா என்பதை!!








நான் எப்போதுமே மாற்று அரசியல் ஏற்படவேண்டும் என்பதைத்தான் விரும்புவேன். திமுகவும் சரி அதிமுகவும் சரி இரண்டுமே ஒரே குப்பையில் ஊறிய மட்டைகள் தான். ஆனால் தேமுதிகவை அவ்வாறு நினைக்கவில்லை. இன்று அதுவும் ஒரு மட்டைதான். என்ன வித்தியாசம் என்றால் இன்னும் ஊறிவிடவில்லை அவ்வளவு
 தான்.



உங்கள் சீலன்!!





வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கிய நீங்கள், உங்கள் 

கருத்துகளை தெரிவிக்கவும் ஒரு கணம் 

ஒதுக்கலாமே? தயவு செய்து!!!!

Wednesday, April 16, 2014

நரேந்திர மோடி vs ரஜினி vs விஜய்


நரேந்திர மோடி vs  ரஜினி  vs விஜய்



இன்று மாலை பரபரப்பான ஒரு செய்தி. விஜயை சந்திக்கப்போகிறார் நரேந்திர மோடி. ஓட்டுக்களுக்காக மோடி இன்னும் யாரையெல்லாம் சந்திக்கப்போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு நாட்டின் பிரதமராக வரப்போகிறார் என்று பரவலாக அறியப்படும் நரேந்திர மோடி தமிழ் நாட்டில் ஓட்டு வாங்க இன்னும் எத்தனை நாடகங்களை அரங்கேற்றப்போகிறார் எனத் தெரியவில்லை.


 நரேந்திரமோடி அலை தமிழ் நாட்டில் பரவலாக வீசுகிறது. எனவே எங்களுக்குத்தான் வெற்றி என முழங்கிய தமிழக‌ பா.ஜ.க தலைவர்கள் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் ரஜினி எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று வெளிப்படையாகவே பேசி வந்தனர், வருகின்றனர் இனியும் அப்படித்தான் சொல்லப்போகின்றனர். அது வேறு விசயம், அப்படியானால் மோடி அலை எங்கே போனது???. பிரதம வேட்பாளர் என அறிவித்துவிட்டு தேர்தலைச் சந்திப்பதே என்னைப் பொருத்தவறை தவறான முன்னுதாரண‌ம். 



அப்புறம் தமிழ் நாட்டில் கூட்டணி முயற்சி. என்னதான் மோடி அலை வீசினாலும் ,வீசுவது போல சொல்லப்பட்டாலும் தமிழ்நாட்டில் கூட்டணி சேர்வதற்கு ஆளில்லாமல் தான் முதலில் இருந்தது . கூட்டணி பேரம் முடிந்து, அதை இறுதிசெய்து பிரச்சாரத்திற்கு வருவதற்குள்ளாகவே தமிழ் நாட்டின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் பிரச்சாரத்தை ஆரம்பித்து, கொஞ்ச நஞ்ச மோடி அலையையும் காணாமல் செய்துவிட்டனர். எனவே இதை சரிசெய்ய என்னசெய்யலாம் என யோசித்த தமிழக பா.ஜ.க ரஜினி - மோடி நட்பை பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது. மேடை தோறும் ரஜினியின் ஆதரவு எங்களுக்குத்தான் என சொல்ல ஆரம்பித்த‌னர். வாக்காளர்கள் ஏமாளிகளா? எவ்வளவு நாள் ஏமாற்றுவது? எப்படியாவது ரஜினியை மோடி சந்தித்து விட ஏற்பாடு செய்யவேண்டும். இதை சரியாகச் செய்த தமிழக பா.ஜ.க ரஜினியின் வாய்ஸைப் பெறுவதில் தவறிவிட்டது.






ரஜினியை காண வரும் முன் பெங்களூரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, அடுத்து உங்கள் மண்ணின் மைந்த‌ர் ரஜினியை சந்திக்கச் செல்கிறேன் என பலத்த கரவொலிக்கிடையே மகிழ்சியோடு பேசியிருக்கிறார். ஆனால் அவரின் மகிழ்சி நிலைக்கவில்லை. அவர் நினைத்திருப்பார் ரஜினியிடம் கேட்டவுடனேயே அவர் ப்ரஸ் மீட் வத்து தனது ஆதரவை அறிவிப்பர் என்று. அப்படித்தான் தமிழக ப.ஜ.க வும் அவரிடம் சொல்லியிருக்கும். ஆனால் நடந்தது வேறு என்பது உங்களுக்கே தெரியும். இப்போது ரஜினியைச் சந்தித்ததால் பா.ஜ.க வுக்கு என்ன லாபம் என்பதுதான் என் கேள்வி.


ரஜினியுடைய மக்கள் செல்வாக்கு இன்றும் இருப்பது உண்மைதான். அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவர் சொல்பவர்க்கெல்லாம் ஓட்டுப் போடும்  அளவிற்கு மக்கள் முட்டாள்களில்லை. அமைப்பு ரீதியாக ரஜினியே நேரடியாக களத்தில் இறங்கி மக்களை சந்தித்து கேட்டாலே ஒழிய மக்கள் அவரைமட்டுமல்ல யாரையுமே ஆதரிப்பது சந்தேகம். பின்னர் ஏன் 1996 ல் ஆதரித்தபோது நடந்தது என நீங்கள் கேட்கலாம். அதற்கு காரணம் இருக்கிறது.






ஜெயலலிதா எதிர்ப்பலையோடு ரஜினியின் வாய்ஸ் சேர்ந்ததால் ஏற்பட்ட விளைவுதான் அன்றைய தேர்தல் முடிவுகள். அதன் பிறகு 1998 லேயே அவர் புரிந்து கொண்டார், மக்களை சந்திக்காமல் ஊடகத்தின் வழியே பேசினால் எடுபடாது என்பதை. அன்றோடு அவர் வாய்ஸ் கொடுப்பதையும் நிறுத்தி விட்டார் . 2004 ல்  பா.ஜ.க விற்கு ஓட்டளித்ததாகத்தானே கூறினார் தவிர வாய்ஸ் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று ரஜினி அல்ல அவருடைய ஆருயிர் நண்பர் கலைஞர் போய் அவரைச் சந்தித்தாலும் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட புகழுரைகளைவிட அதிகமாகக் கண்டிப்பாகக் கிடைக்கும்.




அனால் வெளிப்படையான ஆதரவு  கண்டிப்பாகக் கிடைக்காது. இதில் அதிகம் வருத்தப்பட்டது மோடியாகத்தான் இருக்கும். தேடிப்போய் பார்த்தும் நமக்கு வாய்ஸ் தரவில்லையே என்பதுகூட காரணமாக இருக்கலாம். ஆனால் இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது. ஒருவேளை அதுவும் நடக்காமல் மற்றவர்கள் சந்திக்க வரும்போது ரஜினி செய்யும் வாசல் வரை வந்து வழியனுப்புதல் மட்டும் நடந்திருந்தால்  மோடி நொந்தே போயிருப்பார். ஆனாலும் சோர்ந்துவிடவில்லை தமிழக பா.ஜ.க மோடி பங்கேற்ற கூட்டத்தில் ரஜினியின் பாராட்டுகளை வாசித்தது. அதோடு மட்டும் நிற்காமல் கிடைக்கிற கேப்பில் இன்னும்  கிடா வெட்டிக்கொண்டே இருக்கின்றனர்.






இன்று விஜய். ரஜினியாவது பரவாயில்லை. அவருக்கு ஒரு எதிர்ப்பு என்றால் துணிந்து போராடுவார். போய் காலில் விழ மாட்டார். ஆனால் விஜய், காலிலேயே போய் விழுந்துவிடுவார். தமிழ்நாட்டின் சர்வாதிகாரியாக ஒருகாலத்தில் இருந்த  ஜெயலலிதாவையே எதிர்த்து அரசியல் நடத்தி அதில் வெற்றியும் கண்டவர் ரஜினி. ரஜினியைப் பற்றி முதல்வருக்குத்தெரியும். எனவே இனிமேல் ஒரு போதும் ரஜினியை முதல்வரோ, முதல்வரை ரஜினியோ  ஒருபோதுமே பகைத்துக்கொள்ளமாட்டார்கள். முதல்வர் மேடையிலேயே கலைஞரைப்புகழந்த ரஜினிக்கு ஜெ தொந்தரவு தர நினைக்கவில்லை. ஆனால் டைம் டூ லீட் என்ற ஒரு  வாசகத்திற்காக விஜய் பட்ட பாடு உலகமே அறியும் . கொடனாடு வரை சென்று திரும்பிவந்த கதையும் நாடு அறியும்.இத்தனைக்கும் சட்டசபைத்தேர்தலில் அணில் போல உதவியவர்?  இளைய தளபதி விஜய். 




எனவே மோடியின் வலையில் விஜய் விழமாட்டார் என அடித்துக்கூறுவேன். விஜய்க்கும் ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் ரஜினி போல மக்கள் செல்வாக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஒரு ரஜினி ரசிகன் என்ற முறையில் நாட்டின் எதிர்கால பிரதமர் வீடு தேடிவந்து ஆதரவு கேட்டார் என்பது எப்படி எனக்குப் பெருமையோ அதேபோல மோடியை விரும்பும் ஒரு ப.ஜ.க தொண்டனுக்கு அது பெருமையாக இருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது என்பது தமிழக பா.ஜ.க யோசிக்க மறந்த விசயம்.  மோடி போயஸ் தோட்டத்தில் ரஜினியை சந்திக்க இருக்கிறார், தவ்ஹீத் ஜமாத்தின் ஆதரவு வாபஸ், தி.மு.க வின் எழுச்சி போன்ற செய்திகள் தான் முதல்வரை  பா.ஜ.க விற்கு எதிராகப் பேசவைத்திருக்கிறது.  ஆனால் தேர்தலுக்குப் பின் நடக்கப் போவதை நாடே அறியும். பாவம் இதில் பலிகடா ஆக்கப்பட்டவர் நமது கேப்டன். இதுகுறித்து ஒரு தனிப்பதிவு எழுதுகிறேன்.





ஒரு மீள் சிந்தனை........................


கேள்வியாளர்; அதிமுக விலிருந்து கொலை மிரட்டல்கள் வருகிறதாமே உங்களுக்கு?


ரஜினி; இல்லை அதிமுகவில் இருப்பவர்கள் என்னுடைய தோழர்கள், எனவே அங்கிருந்து கொலை மிரட்டல்கள் வருவது என்பது வதந்தி. இப்போது இருப்பது அதிமுக இல்லை ஜெதிமுக.



இப்படி பதிலளித்தவர் தலைவர் ரஜினி. எனவே யாருக்காகவும் பயந்து  பா.ஜ.க விற்கு ஆதரவு தெரிவிக்காமல் இல்லை.  ஆனால் மக்களை நன்றாக புரிந்து வைத்திருப்பதன் அடையாளம் தான்  இது.


ஆனால் இதைவைத்து ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்று கூறிவிட முடியாது. இன்றைக்கு கட்சி ஆரம்பித்து அமைப்பு ரீதியாக மெருகேற்றிக்கொண்டு மக்களைச் சந்திக்கும் வரை , சந்தித்து தோல்வியடையும் வரை அதை  யாரும் அதை சொல்ல முடியாது.

ஆனால் ஒன்று கலைஞர் காலத்தில் கண்டிப்பாக தலைவர் அரசியலுக்கு வரமாட்டார். அவருக்குப் பிறகு ஏற்படும் வெற்றிடத்தை சரியாக கணிக்கத்தவறும் வரை அவருக்கான அரசியல் வாய்ப்பு மங்கிப்போகாது.

 1991ல் அழிய இருந்த அதிமுகவை ராஜிவ் படுகொலை காப்பாற்றியது. அது தான் முதல்வரின்  அரசியல் வாழ்வில் திருப்புமுனை  வெற்றி. அதுபோல ரஜினிக்கும் ஏதாவது வாய்ப்பு அமையும். அமையாவிட்டாலும், அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் வருத்தப்படமாட்டேன். என்னைப்பொறுத்தவரை ரஜினி விஜய் இருவரும் வாய்ஸ் கொடுத்தாலும் கூட தமிழகத்தில் பாஜகவிற்கு 5 க்கு மேல் முடியாது. அதிமுக 20 -  25. திமுக 7 - 15. இது தான் என் கணிப்பு. 






மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!!



உங்கள் சீலன் !!




வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கிய நீங்கள் உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ஒரு கணம் ஒதுக்கலாமே? தயவு செய்து!!!!