Tuesday, February 16, 2016

புதிய தலைமுறை நடத்தியது கருத்துக் கணிப்பா...? திணிப்பா...?


புதிய தலைமுறை நடத்தியது கருத்துக் கணிப்பா...? திணிப்பா...?


தேர்தல் நெருங்கும் போதெல்லாம் கருத்துக் கணிப்பை நடத்திவிடுவது என்பது எல்லா ஊடகத்தினருக்கும் எழுதப்படாத விதி ஆகிவிட்டது. சரி எடுக்கப்படும் கணிப்புகளாவது குறைந்தபட்ச நேர்மையைக் கொண்டிருக்கின்றனவா என யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சும்.லயோலா ஆரம்பித்து வைத்த இந்த கணிப்பு கண்ணாமூச்சி ஆட்டம், தேர்தல் தேதிவரை தொடரத்தான் போகிறது. எல்லாமுமே அதிமுகவை விட திமுக நூலிழை வித்தியாசத்தில் பிந்தங்கி தமிழக மக்கள் மாற்றம் என்றால் என்ன என்று யோசிக்கக் கூட இடம் தராதவைகளாகவே இருக்கப் போகிறது. 

மனரீதியாக இத்தகைய அணுகுமுறை அதைப் பார்க்கும் நேயர்களிடம், அதிமுக - திமுக தான் பெரிய கட்சிகள், அதைவிடுத்தால் நல்ல வாய்ப்புகள் இல்லை , நாம் நினைத்திருந்த மாற்றுக் கட்சிக்குக் கூட குறைந்த ஆதரவு தான் வந்திருக்கிறது...? பின்னர் ஏன் நம் வாக்கை தோல்வியடையும் ஒரு கட்சிக்கு செலுத்த வேண்டும் எனும் எண்ணத்தை தீவிரமாக திணிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. நேற்றைய நாடி ஜோசியமும் சாரி,, நாடிக்கணிப்பும் அதே தான்.

கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால், வாசன் காங்கிரசிலிருந்து பிரிந்து தனிக்கட்சியை ஆரம்பித்த போது காங்கிரசின் ஓட்டு அவ்வளவு தான் என கருத்து கணிப்பை வெளியிட்டத்து சாட்சாத் தந்தி டிவியும்,புதிய தலைமுறையும் தான். ஆனால் நேற்றைய கணிப்பில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியே இடம்பெறவில்லை.முந்தாநாள், கடலூரில் சீமான் மாநாட்டை நேரலை செய்ததும் புதிய தலைமுறை தான்.ஆனால் நாம் தமிழர் கட்சி இடம்பெறவேயில்லை. இருக்கட்டும் இதர கட்சியில் இடம்பெற்றிருக்கக் கூடும் என்றாலும் விடுதலை சிறுத்தைகளும் இடம் பெறவில்லை.கம்யூனிஸ்டுகளும் இடம்பெறவில்லை. யாரை திருப்தி படுத்துவதற்கு நீங்களெல்லாம் கணிப்புகளை வெளியிடுகின்றீர்கள். காலத்துக்கும் திமுக-அதிமுக தாண்டி பொதுமக்களின் கவனம் சென்று விடக்கூடாது எனும் கயமை இதிலிருந்து அழகாக வெளிப்பட்டிருக்கிறது.

மக்கள் நலக் கூட்டணியின் மாநாட்டை எந்த ஊடகமும் காட்டாத போதே திமுக அதிமுக தவிர்த்து யார் வந்தாலும் ஊடகங்களின் விளம்பரம் கிடைக்காது என்பது தெளிவாக புரிந்துவிட்டது.அங்கு கூடிய கூட்டத்தைப் பார்த்ததும் இப்போது கொஞ்சம் காட்டுவது போல் காட்டுகிறார்கள். இதே பிரச்சாரம் துவங்கிய பின்பு பிட் செய்தியாகவாவது மற்ற கட்சி தலைவர்களின் பிரச்சாரத்தை காட்டுவார்களா தெரியவில்லை. ஹெலிகாப்டர் பறப்பதிலிருந்து, மந்திரிகள் யோகா செய்வது வரை காட்டுவதற்குள்ளாக உங்கள் ப்ரைம் டைம் முடிந்தே போய் விடுமே அய்யா...?

இந்தப்பக்கம் தந்திடிவியை வைத்தால், அது ஆளுங்கட்சியின் சானலோ என்று தோன்றும் அளவு நடுநிலையாக? செயல்படுகிறது.பழ.கருப்பையா நேர்மை இல்லாதவராகவே இருக்கட்டும், அவர் கூறிய ஊழல் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பாமல், ஏன் இத்தனை கட்சி மாறினீர்கள், மந்திரி பதவி கிடைக்கவில்லையா, அடுத்து எந்த கட்சி என அவரைக் கடுப்பேற்றுவதிலேயே குறியாக இருந்தார் பாண்டே. அதே போல ஒரு டெக்னிக்கலான தலைப்புக்கு திமுகவிலிருந்து மொக்கையாக பேசுபவரை வரவழைத்து அவரை ஒரே அடியாக அடித்து திமுகவையே வீழ்த்திவிட்டதைப் போல கெத்து காட்டுவதும் அதே பாண்டே தான். ஆனால் இந்த சமரசம், ஆவடி குமார், சிஆர் சரஸ்வதி கருத்தெல்ல்லாம் படு மொக்கைக்கருத்தாக இருக்கும். அவர்களுக்கு அதிக நேர வாய்ப்பு கொடுத்து அழகு பார்ப்பார் பாண்டே. துரைமுருகனிடமும், தமிழன் பிரசன்னாவிடமும் பம்முவதும், அப்பாவு,சரவணன் உள்ளிட்டோரை எகிரி அடிப்பதும் பாண்டேவின் கை வந்த கலை.

ஆயுத எழுத்தை விட நேர்படப் பெசு கொஞ்சம் நன்றாகவே இருக்கும். அதே போல கேள்விக்கென்ன பதிலை விட அக்னிப் பரிடசையும்.ஆனாலும் பாண்டேவுக்காக‌ நான் விரும்பி பார்ப்பது தந்தியைத் தான்.  ஆனால் ஹரி வந்துவிட்டால் அடுத்த நொடி புதிய தலைமுறைக்கு மாற்றிவிடுவேன், ஏனென்று தெரியவில்லை.அங்கே குணா,கார்த்திகை செல்வன், போன்றோர் மிக அருமையாக கொண்டு செல்வார்.பாண்டேவின் மீதான விருப்பம் குறைய ஆரம்பித்தது அவரை சுபவீ ஐயா பேட்டி கேட்ட போது தான். 
அய்யாவின் ஒரு குற்றச்சாட்டையும் ஏற்றுக் கொள்ளாமல் மழுப்பியபோதே என்னடா என்றாகிவிட்டது.... இப்போது பழ.கருப்பையா பேட்டியில் சுத்தமாக குறைந்துவிட்டது. பேட்டியெல்லாம் முடிந்த பின்பு நன்றி ஒரு சம்பிரதாயமா என எழுந்து போனவரை என்னமோ பேட்டியில் பாதியிலேயே எழுந்து போனதைப் போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டார். இருக்கட்டும், இன்னும் சில நாட்களில் தந்தி டிவியும் கருத்துக் கணிப்பை வெளியிட இருக்கிறது, என நினைக்கிறேன், பார்ப்போம் அது நூலிழை வித்தியாசம் காட்டுகிறதா.. இல்லை நாரிழை வித்தியாசம் காட்டுகிறதா என்று.....


4 comments:

  1. அதன் நிர்வாகி ஒரு கட்சி வைத்திருக்கிறார் அல்லவா? அவர் எந்தக் கூட்டணியில் சேரப்போகிறார் என்பதைச் சொல்கிறார்... வேறென்ன?

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் ஐயா.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..

      Delete
  2. எல்லா ஊடகங்களுமே ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவாகத்தான் மறைமுகமாகவேனும் பேசுகின்றன.இங்கு நடுநிலைமையை எதிர்பார்க்க முடியாது.

    ReplyDelete