Tuesday, February 16, 2016

டிராவிட்டுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது...?


டிராவிட்டுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது...?

ராகுல் டிராவிட். உலகின் ஆகச்சிறந்த டெக்னிக்கல் கிரிக்கெட்டர். ஆனால் அதிகம் பேசப்படாத, அதிகம் மரியாதை செலுத்தப்படாத, மற்ற வீரர்களின் சாதனைகளின் நிழலிலேயே தன் மொத்த சாதனைகளையும் கடந்துவிட்ட கவனிக்கப்படாத கிரிக்கெட் வீரர் அவர் தான். சரி வீரராகத்தான் அதிர்ஸ்டம் இல்லையென்றால் ஓய்வுக்குப் பின்னரும் கூடவே அப்படியே நடப்பது ஒவ்வொரு டிராவிட் ரசிகரின் துரதிஸ்டம். தொடரும் உதாரணம், நேற்றைய தோல்வி. இருக்கட்டும் துரதிஸ்டம் எவ்வளவு தூரம் டிராவிட்டை துரத்துகிறதோ அதே போல் நாங்களும் பின் தொடர்வோம் எப்போதும்.





டிராவிட்டை எனக்கு ஏன் பிடித்தது எப்படிப் பிடித்தது என்பதெல்லாம் முந்தைய பதிவுகளில் தெரிவித்திருக்கிறேன். அவருக்கும் எனக்குமான உறவு சாதாரண கிரிக்கெட் ரசிகனைத் தாண்டியது. அவருடைய ஸ்டைல், விக்கெட் கீப்பிங் மேனரிசம், பெர்ஃபக்ட்னஸ் என நான் வளர வளர அவரின் மீதான என் ஆதர்சமும் வளர்ந்தது என்றே கூறலாம். எனக்கு இன்றும் நினைவு இருக்கிறது. டிராவிட் அடித்த 270. பாகிஸ்தான் சீரிசில். அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் அதே தொடரில் சேவாக்கின் ருத்ர தாண்டவம் அதை மறக்கடிக்கச் செய்துவிட்டது, பெரும்பானமையானவர்களிடம். இந்தியாவின் ஆகச்சிறந்த கேப்டன் தோனி என்பார்கள்,கங்குலி என்பார்கள். மருந்துக்கும் டிராவிட் பெயரை சொல்ல மாட்டார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டிராவிட்டும் ஒரு மிகச்சிறந்த காப்டன் . அது நினைவுக்கு வராததற்கான காரணம் உலகக்கோப்பை தோல்வி.



அப்போதெல்லாம் காலரை தூக்கிவிட்டு டிராவிட் பேன் டா எனச் சொல்லித் திரிந்த காலம். வெற்றி சதவீதத்தில் தோனிக்குப் பின் ஆகச்சிறந்த சதவீதம் டிராவிட் உடையது. கங்குலியை விட 6% அதிகம். (குறைந்தபட்சம் 70 ஆட்டங்களுக்கு மேல் கேப்டனாக ) முதல் ஆட்டம் நான் பார்க்கவில்லை.(வங்க தேசத்துடன் அதிர்ச்சி தோல்வி) அடுத்த பெர்முடா ஆட்டத்தின் கடைசிப் பந்தில் டிராவிட் அடித்த சிக்ஸர் இன்னும் என் கண்களில் நிழலாடுகிறது. மூன்றாவது ஆட்டத்தினை இரவெல்லாம் கண் விழித்து பார்த்தேன், வீட்டில் கெஞ்சி. ஆனால் தோற்று விடும் இந்தியா. அப்போதும் ஒரு ஆறுதலாக மலிங்காவின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை வியர்வை சொட்ட சொட்ட அடித்த அந்த இன்னிங்ஸ்.

 டிராவிட்டுக்கு கேப்டன் பதவி லாயக்கில்லை என்றார்கள். அடுத்த சீரிசிலேயே இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி மகுடம் சூடி கேப்டன்சிப்பை நிரூபித்தார். அப்போது அவரின் வயது 34.கேப்டனாக தொடர்வார் என்று எதிர்பார்த்த போது ராஜினாம செய்து வீரராக தொடர முடிவு செய்தார். சச்சினைத் தவிர யாரும் கேப்டன் பதவியை விட்ட பிறகு வீரராய் தொடர்ந்த வரலாறு இல்லை.அதே டிராவிட்டுக்கும் நடந்தது. கேப்டன் பதவிக்கு தோனியை பரிந்துரை செய்ததே டிராவிட் தான். சச்சினின் பரிந்துரை தான் பெரிதாக பேசப்பட்டது. ஆனால் சச்சின் சேவாக்கையே முதலில் ஆதரித்தார். டிராவிட்டின் முடிவால் தோனியை ஏற்றார்.



கும்பிளே,கங்குலி ஆகிய தன் கேப்டன்களுக்கு மிகச்சிறப்பாக பிரிவுபச்சாரம் செய்த தோனி, டிராவிட்டை மறந்தேவிட்டார். பாவம் காலம் தோனியின் ஓய்வையும் அவ்வாறே ஆக்கிவிட்டது.ஒரு வேலை இந்திய அணி உலககிண்ணத்தில் சூப்பர் 8 தகுதி அடைந்திருந்தால் டிராவிட்டின் வரலாறும் இந்திய கிரிக்கெட்டின் வரலாறும் வேறாகியிருக்கும். டெஸ்ட் மேட்சுகளில் மட்டும் தேடித்தேடி ரசித்துக் கொண்டிருந்த போது, ஆச்சர்ய அதிர்ச்சியாய பெங்களுர் ராயல் சால்ஞ்சர் அணியின் கேப்டனாக ஆடவிருக்கிறார் என்ற செய்தி என்னை வேறு உலகிற்கு அழைத்து சென்றன. அப்போதும் அவருக்கு அதிர்ஸ்டம் துணையிருக்கவில்லை.உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் அணியை, உலகின் மிகச்சிறந்த டி20 கிரிக்கெட் தொடரில் ஆடவிட்ட்தைப் போல் ஆடியது பெங்களூரு. காலீஸ்,ஜாபர்,சந்திரபால்,மிஸ்பா என படு மொக்கையான டீம். ஆனால் அப்போதும், டிராவிட் குறையேதும் வைக்கவில்லை. தன்னால் எவ்வகையான கிரிக்கெட்டும் ஆட முடியும் என நிரூபித்தார். சச்சின்,கங்குலி,லஸ்மன் என சீனியர் வீரர்களை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் 375 ரன்கள் அந்த தொடரில் குவித்திருந்தார். ராயல்ஸுடனான ஒரே ஆட்டத்தில் 6 சிக்ஸர்கள் விளாசி என்னை திக்குமுக்காடச் செய்த தருணமெல்லாம் மிகவும் பசுமையானவை.





அடுத்த சீசனில் கொஞ்சம் அணி பலமாகிய போது அடுத்த அடியாக டிராவிட்டை கேப்டனில் இருந்து நீக்கியது நிர்வாகம். இருந்தும் தன் மட்டையால் பதில் சொல்லி ஆரஞ்சு நிறத் தொப்பியை கைப்பற்றிய நேரத்தில், அவருக்கு குழந்தை பிறந்ததால் இந்தியா வந்து 7,8 ஆட்டங்கள் ஆடாமல் போனது ரசிகர்களின் துரதிஸ்டமாகிப் போனது. ஆச்சர்யமாய் பைனல் சென்றும் நூலிழையில் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தது பெஙளூரு. இந்திய அணியின் தள்ளாட்டத்தை சரிசெய்ய மீண்டும் டிராவிட்டை தேசிய ஒரு நாள் அணிக்கு சேர்த்தது பிசிசிஐ. ஆசியக் கோப்பை, மினி உலகக் கோப்பை என டிராவிட் நன்றாக ஆடினாலும் அணி சொதப்பி டிராவிட்டை டீமிலிருந்து நீக்கச் செய்துவிட்டது. 2011 உலகக் கோப்பையை இந்தியா வென்ற போது எவ்வளவு மகிழ்சியாய் இருந்ததோ அதைவிட டிராவிட் இல்லையே என்ற வருத்தம் அதிகமாக இருந்தது எனக்கு. அடுத்த அதிர்சியாக பெங்களூர் அணியிலிருந்து ராஜஸ்தான் அணிக்கு கழற்றிவிடப்பட்டார். அங்கும் நன்றாக விளையாடி ஐபிஎல் கருத்துக் கணிப்பில் டி20 யில் பொருத்தமான மூத்த வீரர் டிராவிட் என பேர் வாங்கினார்.



2012 ஆம் ஆண்டு அணிக்கு கேப்ட்னாகி சிறப்பானதொரு அடிப்படையை அமைத்து பேர் ப்ளே விருதை தட்டிச் சென்றார். 2013ல் ஒன்றுமே இல்லாத ஒரு அணியை செமி வரை அழைத்துச் சென்று தான் ஒரு சிறந்த கேப்டன் என நிரூபித்தார். அந்த வருட சாம்பியன்ஸ் லீக்கில் தோல்வியே அடையாமல் பைனல் செல்ல, டிராவிட் கைகளில் முதல் முறையாக கோப்பை தவழ இருக்கிறது என்ற ஆனந்தத்தை சுக்குநூறாக உடைக்கும் வண்ணம் ராயல்ஸ் தோற்றுப் போனது. இத்தனைக்கும் அது தான் டிராவிட்டின் கடைசி கிரிக்கெட் ஆட்டம் . ரூமில் நான் அழுவதைப் பார்த்து நண்பர்கள் சமாதானப்படுத்தியதை இன்று நினைத்துப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.முதல் ஆட்டத்தில் இருந்து நேற்றைய ஆட்டம் வரை அதிர்ஸ்டம் அவருக்கு பெரிதாக உதவியதே இல்லை. இப்போது பழகிவிட்டது.



அவரின் கடைசி டெஸ்ட் ஆட்டம் தோல்வி,சர்வதேச டி20 தோல்வி ( அந்த ஆட்டத்தில் அவரின் ஹார்டிக் சிக்ஸருக்கு என்னா குதி குதித்திருப்பேன் தெரியுமா ..? கடைசி ஒருநாள் கிரிக்கெட் தோல்வி, கடைசி ஐபிஎல் தோல்வி, கடைசி சாம்பியன் மேட்ச் தோல்வி. இது எல்லாம் தெரிவிப்பது ஒன்றே ஒன்றுதான், அது எப்போதும் கூட வரும் டிராவிட்டின் துரதிஸ்டம் மட்டும் அல்ல, நாளை ஏதோ ஒரு மிகப் பெரிய வெற்றி, மேற்கண்ட தோல்விகளை எல்லாம் மறக்கடிக்கச் செய்யும் ஒரு பெரிய வெற்றி அவருக்காக காத்திருக்கிறது என்பது தான். அந்த நாளுக்காக நாங்களும் காத்திருக்கிறோம் தலைவா.... ஆல் தி பெஸ்ட்.... #ForEverDravidian


3 comments:

  1. உங்களுக்காகவாவது டிராவிட் வின் பண்ணனும்ங்க.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/blog-post_15.html

    ReplyDelete
  2. வணக்கம்
    நல்ல பகிர்வு நல்ல கருத்தையும் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. veri-thanamana rasigan illa veriyan..nan....on dravid...

    we both have same reasons to have veri on dravid( thala )
    manerisam, perfect-ness, stylish batting
    off-side-la adikura shots ellam kavidhai....
    kaiya valachu adiparru paarunga....
    My role-model boss...avara pola batting panna try pannunen...panren...pannuven..

    luck-kellam vandha varatum....pona pogattumm...boss
    we and fans like us knew the importance of his character and talent....

    ippa dhan unga site-ye padika start pannunen....
    first Branded McCullum...appadiye side scroll pannuna...yen thala...dravid-u...
    Unga palaya post on dravid-um vidama padikkanum boss..

    very happy that my rasanai and unga rasanai othu poradhu....

    thanks boss...keep writing....

    ReplyDelete