Monday, February 22, 2016

நீயா நானா‍- கடைசி பென்ச் மாணவர்கள்

நீயா நானா‍- கடைசி பென்ச் மாணவர்கள்


இடையில் என்னவோ தெரியவில்லை அந்த மழை வெள்ள எபிசோட்டிற்கு பிறகு நீயா நானாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவே இல்லை. இன்று ஹாஸ்டலில் இரவு உணவை முடித்துவிட்டு எதார்த்தமாக சானல் மாற்றும் போது BACK BENCHERS பற்றிய விவாதம் கண்ணில் பட்டது. அதே நேரம் ப்ரோ கபடியை அனைவரும் ஆர்வமாய் ரசித்துக் கொண்டிருந்தனர். ஏதொ நம்ம இன்ப்ளுயன்ஸ் வச்சு கொஞ்சமாய் ஆள்திரட்டி, சண்டை போட்டு கடைசியில் மாற்றச் செய்துவிட்டோம். இந்த மாதிரி கஸ்டப்பட்டு சண்டைபோட்டு மாற்றும் டாபிக்கெல்லாம் சில சமயங்களில் மொக்கையாகிவிடும், அது பெரிய பல்ப் ஆகிவிடும் .ஆனா நேத்து தப்பிச்சுட்டோம்னு தான் சொல்லணும். சுருக்கமான ஆனால் ஒரு சிறப்பான நீயா நானா நேற்றையது.உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் கடைசி பென்ச் மாணவன் இல்லை, FRONT BENCH தான். இங்கு காலேஜ் வந்த பின்னர் கடைசி பெஞ்சில் அமர்கிறேனே தவிர அவர்களுடைய செயல்பாடுகளெல்லாம் சுத்தமாக வராது. லாஸ்ட் பெஞ்ச்னாலே ஒரு கெத்து என்று சொல்வார்கள் ,ஆம் அது உண்மை தான்.யாரப்பத்தியும் பயப்புடாம டக்குணு கமெண்ட் அடிக்குறது, காமெடி பன்ச் அடித்து கிளாசையே சிரிக்க வைப்பது, டைமிங்க் வசனங்கள், பந்தா என அவர்கள் உலகமே தனி. ஆனால் என் பள்ளி நாட்களில் லாஸ்ட் பென்ச் மாணவர்களோடு க்ளோசாக பழகியிருக்கிறேன். அவர்களின் சேட்டைகள் தவிர்த்து எல்லாமும் பகிர்வார்கள், ஆனால் சேட்டை செய்யபோகும் போது நம்மை கழட்டிவிட்டுவிடுவார்கள். க்ளாஸ் லீடராக இருந்து கொண்டு BACK BENCHERS ஐ சமாளிப்பதென்பது உண்மையாகவே கடினமான பணி.

ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் அவர்களை அடக்குவது பெரும் சிரமமாகவே இருக்கும். போர்டில் பெயரெழுதி மிக மிக அடங்கவில்லை என்று எழுதுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்..? ஆனால் அதற்கே பலமுறை என் சைக்கிள் பஞ்சர் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஆசிரியர்களிடமும்,  மாணவர்களிடமும் நல்ல பெயர் வாங்கிவிடுவேன். அதற்கு ஒரு ட்ரிக் வைத்திருந்தேன். எல்லா தேர்வுகளுக்கும் ஒரு மதிப்பெண் விடைகளை சொல்லிக்கொடுத்துவிடுவேன்,தேர்வறையிலேயே. அது ரொம்ப எளிதானது, கடைசி அரைமணி நேரம் அது தான் வேலையே. ஒவ்வொரு பரிட்சைக்கும் ஒவ்வொரு முறை. விரல்கள் சைகைகள், சொறிவது என படு அப்டேட்டடாக இருக்கும். பப்ளிக் பரிட்சையிலும் கூட என் அறையில் தேர்வெழுதிய என் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஒன் வோர்ட் புல் மார்க் தான். அதிலும் என் வகுப்பிலேயே ஆகச்சிறந்த ரவுடி என ஒதுக்கப்பட்ட இரு மாணவர்களுக்கு கணிதப் பரிட்சைக்கு என் பேப்பரையே தந்திருக்கிறேன் பொதுத் தேர்வில். எல்லா தேர்வுகளும் முடிந்த பின் அவ்விரு மாணவர்களும் இணைந்து எனக்கு வாங்கிக் கொடுத்த சர்பத் இன்னும் இனிக்கிறது. பழகிவிட்டால் BACK BENCHERS ஐ போல உயிரையே கொடுக்கும் நண்பர்களைப் பார்க்கவே முடியாது. ஆசிரியர் இல்லாத நேரத்திலெல்லாம் அங்கு போய் அமர்ந்து கொண்டு அவர்கள் குறும்புகளை ரசித்திருக்கிறேன்.

நீயா நானாவில் பகிர்ந்து கொண்ட சேட்டைகள் பெரும்பாலும் எல்லாப் பள்ளிகளிலும் நடக்கிறது என்பது உண்மை. ஆனால் நான் படித்த பள்ளியில் அந்த அளவு இல்லை. அதற்கு ஆசிரியர்களும் ஒரு காரணம், எங்களுக்கு வந்த ஆசிரியர்கள் அன்புக்கு அன்பு அடிக்கு அடி தான். அதிலும் நாங்களெல்லாம் பயந்த ஒரு மாணவனின் பிம்பத்தை முதல் முதலாக க்ளாசுக்கு வந்த ஒரு அறிவியல் டீச்சர் தகர்த்தெறிந்தார். வந்த கொஞ்ச நேரத்திலேயே அவனை கண்டு கொண்டு எப்படித்தான் மாற்றினார்களோ, பின்னர் அவர்களுடைய எந்த வகுப்புக்கும் சேட்டை செய்யாமல் நல்ல பெயர் வாங்கினான். ஆனால் அவருடைய வகுப்பில் மட்டும் தான். ஒரு நாள் ஆசிரியர்கள் வராத போது வகுப்பைப் பார்த்துக் கொள்ள வந்த சத்துணவு சார் இவன் தொல்லை தாங்காமல் அடிக்க வந்தார், திருப்பி அடித்தே விட்டான். அன்றைய நாள் ஸ்கூலே அல்லோலகல்லோலப் பட்டுவிட்டது. அவர் அந்தப்பக்கம் தாவ , இவனை நாங்கள் மடக்க, பின் அந்த டீச்சர் வந்த பின் தான் அடங்கினான். இவர்களுடைய பாணி ஒரு முறை என்றால், இன்னொரு பாணியால் வழிக்கு கொண்டு வந்தார்  ஒரு சார்.ஆம், கணக்கு சார் வருகிறார் என்றாலே அடங்கிப் போய்விடும் கிளாசே. அவருடைய அடி அப்படி.

ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் எனப் பார்த்தால், தனித்துவத்தை காட்டத்தான். நன்றாகப் படிப்பவன் நன்றாகப் படித்து தன் தனித்துவத்தை நிரூபிக்கிறான், திறமைகளை பயன்படுத்தத் தெரிந்தவர்கள் தங்கள் திறமையால் நிருபிக்கிறார்கள். இடைநிலை மாணவர்களுக்கு அந்த எண்ணம் வருவதில்லை. ஆனால் நாமும் தனித்துத் தெரிய வேண்டும், நம்மையும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஏன் இந்த பள்ளியே கவனிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் படிப்பிலோ வேறு திறமைகளிலோ அதைக் காட்ட முயற்சிக்காமல் BACK BENCHERS  எனும் அவதாரத்தை எடுக்கிறார்கள். எனவே அதை சரியாக புரிந்து கொண்டு அவனையும் தனித்துவமாக்கிவிட்டால் இல்லை அப்படி ஒரு பிம்பத்தை கட்டமைத்துவிட்டால் அவனுடைய BACK BENCH மோகம் குறைந்துவிடும் என்பது என் எண்ணம். குறிப்பாக இந்த மனோபாவம் ஒன்பது பத்து வகுப்புகளில் தான் அதிகம் வரும். தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக, ஆசிரியர்களை கலாய்ப்பது,சேட்டைகள் செய்வது என இறங்கிவிடுகின்றனர். சிலர் தலைக்கணத்தாலும் இவ்வேலைகளில் ஈடுபடுகின்றனர் . ஆனால் எண்ணிக்கையில் குறைவு தான்.இதில், மாணவர்களின் உளவியலை மட்டுப்படுத்தாமல் தொடர்ந்து அதே நிலையிலேயே வைப்பது FRONT BENCH மாணவர்கள் அல்ல. அவர்கள் என்றுமே BACK BENCHERS களுக்கு எதிரிகள் தாம்( விதி விலக்காக என்னைப் போன்றோரும் இருக்கலாம் )  பெரும்பாலும் நன்றாகப் படிப்பவர்கள் BACK BENCHERS உடன் அதிகமாக தொடர்பு வைத்திருக்க மாட்டார்கள். இந்த இடைநிலை மாணவர்கள் தான் BACK BENCHERS ஐ ஊக்குவிப்பதே, இது தான்டா கெத்து, அவன் பயந்துட்டான் டா என உசுப்பேற்றி விடுபவர்கள். காட்டிக் கொடுக்க மறுப்பது, அவர்களைப் பார்த்து பயந்து அல்லது நடித்து அவர்கள் ஹீரோயிசத்தை வளர்த்தெடுப்பது இவர்கள் தாம்.இவர்களையும் கவனிப்பது அவசியம் . இல்லையென்றால் இவர்களிலும் பலர அடுத்தடுத்த வகுப்புகளில் BACK BENCHERS ஆக மாறக்கூடும்.

கல்வி,திறமை என்பது அனைவருக்கும் பொதுவானது.FRONT BENCHERS  மட்டும் யோக்கியமா என்றால் இல்லைதான். ஆனால் அவர்கள் நேக்கான சேட்டையர்கள்.ஊமைக் குசும்பர்கள், கெட்டிக்காரர்கள். அந்த கெட்டிக்காரத்தனம் BACK BENCHERS களிடமும் இருக்கிறது, சொல்லப் போனால் அதிகம் கூட, ஆனால் அதை கல்வியில் பயன்படுத்தமாட்டார்கள். கல்வியைத் தாண்டிய ஏதோ ஒரு எண்ணம் அவர்களிடம் இடம் இருக்கிறது. அதைக் கண்டுகொண்டுவிட்டாலே ஆசிரியர்களின் வேலை எளிது. என் பள்ளியில் எங்கள் தமிழ் ஐயா, பட்டன் போடாமல் டாலர் தெரிவது போல் சட்டை போட்டு வந்த ஒரு மாணவனை தொடர்ந்து இரு நாட்கள் முன்னால் அழைத்து நம்ம கிளாஸ் ரஜினி இவர் தான் எல்லோரும் கைதட்டுங்கள் என்பார், மூன்றாவது பட்டனையும் கழட்டி விடுடா அது தான் சூப்பர் என்றும் தட்டிக் கொடுப்பார். மூன்றாவது நாளிலேயே முன்னால் வர வெட்கப்பட்டுக் கொண்டு ஒழுங்காகிவிட்டான் அவன். எல்லா நேரங்களிலும் இது போல் நடக்க முடியாது தான், ஆனால் ஏதாவது ஒரு வகையில் மாற்ற முடியும் எனபதும் உண்மை.

அப்புறம் நீயா நானாவில் சொன்னதைப் போன்ற ஜாதிப் பிரச்சனை, அது தனிடாபிக் அதற்குள் போக விரும்பவில்லை.

ஆண்டுவிழா வேலைகளாகட்டும், சுற்றுலா ஏற்பாடாகட்டும், மரங்களுக்கு தண்ணீர் விடுவதாகட்டும் எல்லா வேலைகளுக்கும் முன்னால் நிற்பது BACK BENCHERS தான். இன்னொன்று ஆசிரியர்களின் புனித பிம்பம் தற்காலத்தில் குறைந்து கொண்டே வருகிறது. சமூகம் அவர்களையும் ஒரு பணியாளர்களாகவே பார்க்க ஆரம்பித்திருக்கிறது.  ஆனால் இன்னும் சில‌கிராமங்களில் ஆசிரியர்களை உயரிய இடத்தில் வைத்துக் கொணடாடுகிறார்கள். அவர் பஸ் ஏற வரும்போது விஸ் பண்ணுவது, அடித்துவிட்டால் கூட அதை பெரிதுபடுத்தாமல் இருப்பது, விழாக்களில் ஆலோசனை கேட்பது என நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த புனித பிம்பம் தொடர்ந்து காப்பாற்றப்படுவது பெற்றோர்கள் கையில் தான் இருக்கிறது. தங்கள் ஆசிரியர் குறித்து உயர்வாக சொல்வது, ஆசிரியப் பணியின் மகத்துவத்தை புரிய வைப்பது என அவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.

BACK BENCHERS  உருவாவதில் ஆசிரியரின் பங்கும் இருக்கத்தான் செய்கிறது. 45 நிமிடமும் அங்கிங்கு திரும்ப விடாமல் அறுவையாக பாடம் நடத்தினால் யாருக்குத் தான் எரிச்சல் வராது. அப்புறம் புஸ் புஸ் என்று கத்தாமல் என்ன செய்வானாம். எங்க பள்ளியில் தமிழ் பீரியட், கணித பீரியட், சோசியல் பீரியட் எப்படா வரும் என்று இருக்கும் . காரணம் அந்த சப்ஜெக்ட் கிடையாது. ஆசிரியர்கள், ஒரு மாணவனுக்கு ஒரு பாடத்தை எவ்வளவு தான் பிடித்திருந்தாலும் ஆசிரியரைப் பிடிக்காவிட்டால் அவ்வளவு தான். அதே போல பிடிக்காத பாடத்தையும் பிடித்த ஆசிரியர்கள் பிடிக்கச் செய்துவிடுவார்கள்.கொஞ்சம் சிரத்தையெடுத்து மாணவர்களின் உளவியலை தொட்டுவிட்டால், பின் அந்த ஆசிரியரின் பாட வேளையில் எந்த BACK BENCHERS  ம் இருக்கவே மாட்டான். BACK BENCH என்பது வெறும் இருக்கையாகப் போய்விடும். இது கல்லூரி வரை கூட பொருந்தும். கல்லூரிகளில் எப்படி இருக்கிறார்கள்..? அது தனி உலகம்... பின்னர் விவாதிக்கலாம்...மொத்தத்தில் நேற்றைய நீயா நான என் பள்ளி வாழ்க்கையை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கச் செய்துவிட்டது ....

5 comments:

 1. தங்களது அனுபவமும், விரிவான அலசலும் நன்று நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...

   Delete
 2. Public examla cheat panna help pannathu ellaam perumayaana vishayamaa

  ReplyDelete
 3. அருமை ஜெயசீலன்! நல்ல கட்டுரை. பேக் பெஞ்சர்ஸ் அனைவரும் மோசமானவர்கள் அல்லர்தான். அவர்களிலும் மிளிர்ந்தவர்கள் உண்டு. ஆனால் குறும்புகளால் பேக்பெஞ்சர்ஸ் ஆனவர்கள். மாணவர்களின் உளவியலைப் படிக்கத் தெரிந்தா ஆசிரியர்கள் மட்டுமே வெல்லவும் முடியும் நல்ல ஆசிரியர்கள் என்றும் சொல்லவும் முடியும். அதைத் தொட்டுவிட்டால் எல்லா மாணவர்களும் ஃப்ரன்ட் பெஞ்ச்சர்ஸ்தான்.

  என் மகன் பேக்பென்சர்தான். இங்கு நால் சொல்லும் பேக்பெஞ்ச் குறும்பல்ல. என் மகன் படிப்பில் குறைபாடு இருந்தவன். அதனால் நன்றாகப் படிக்காதவர்கள், தோல்வியுறுபவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டு பின் பெஞ்சிற்குத் தள்ளப்பட்டவன். இச்செய்கையே மாணவர்களின் தாழ்வுமனப்பான்மைக்கு வித்திட்டுவிடும். இப்படிச் செய்யும் ஆசிரியர்களை ஆசிரியர்கள் என்று ஒரு போதும் சொல்லமுடியாது. ஆனால் அப்படிப் பின் பெஞ்சிற்குத் தள்ளப்பட்ட மகன் இன்று கால்நடை மருத்துவன். குழந்தைகளின் உளவியலைப் படிக்கத் தெரிந்த பெற்றோர்களும் ஆசிரியர்களும் இருந்துவிட்டால் மாணவர்கள் எல்லோருமே மிளிர்வார்கள். படிப்பில் என்றில்லை எந்தத் துறையிலும். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் சார்... படிப்பைத் தாண்டிய உளவியலை கண்டுகொண்டுவிட்டாலே பாதி வெற்றி சார்... உங்கள் அனுபவங்களையும் விரிவாய் பகிர்ந்ததற்கு நன்றி சார்.. படிப்புக்கும் வாழ்க்கைக்கும் இருக்கும் தொடர்பை விட திறமைக்கும் வாழ்க்கைக்குமே தொடர்பு அதிகம் என்பதை புரிந்து கொண்டேன்... மிக்க நன்றி சார் வருகைக்கும் கருத்துரைக்கும்...

   Delete