Wednesday, February 24, 2016

பிரண்டன் மெக்கல்லம் - ‍ நவீன யுகத்தின் கிரிக்கெட் வீரன்

பிரண்டன் மெக்கல்லம் - ‍ நவீன  யுகத்தின் கிரிக்கெட் வீரன்





கோடி மகன்களின் நாயகனே கோடி மக்களின் மன்னவனே.. இந்த வரிகள் அநேகம் பேருக்கு மறந்து போயிருக்கலாம்..  எனக்கு நினைவிருக்கிறது.... ஆம் முதல் ஐபிஎல் தொடரின் தமிழ் தீம் சாங். ஏகத்துக்கும் எதிர்பார்த்த ஒரு தொடர். இது வரையில் பார்த்திராத  ( ஆசிய 11, உலக 11 எல்லாம் பேப்பரில் படித்தது தான்) ஒரு புது முயற்சி. வேற்று நாட்டு வீரர்களுடன் உள்ளூர் அணிகளுக்கெதிரான கலர்புல் டி20 தொடர். இந்தியா உலகக் கோப்பை வென்றிருந்த நேரம், டிராவிட்டின் அணி நீக்கத்துக்குப் பின் அவர் பெங்களூர் கேப்டனான தருணம் என உலகக்கோப்பையைக் காட்டிலும் அதிகம் எதிர்பார்த்த தொடர்.



முதல் ஆட்டமே பெங்களூர் ராயல் சேலஞ்சர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ். வண்ணமிகு கலை நிகழ்சிகளுடன் ஆட்டம் தொடங்கிய போது, வேகத்துடனும், சுறுசுறுப்புடனும், உயரம் குறைவான ஒரு மட்டை வீரர்  (டொக்கு பிளேயர்) தோரணையுடன் ஒருவர் உள்ளே வர, பெயர் பலகையில் பிரண்டன் மெக்கல்லம் எனக்காட்டியது. அப்போதே ஒரு வசீகரம் அவரிடம். அதன் பிறகு அந்த ஆட்டத்தில் நடந்தது வரலாறு...! ஜாகீர்கான்,கும்பிளே, பிரவீன் குமார் என யார் பந்தையும் விட்டுவைக்காமல் விளாசு விளாசு என விளாசித் தள்ளிவிட்டார். யாரு சாமி இவன், எங்க இருந்து வந்துருக்கான் என கவனிக்க ஆரம்பித்தது அப்போது தான்.  என்னா அடி...? அந்த ஆட்டம் தான் ஐபிஎல் வீண் முயற்சி என்றவர்களையெல்லாம் ரசிகர்களாக‌ மாற்றியது என்றே சொல்லலாம்..

அப்புறம் சில மேட்சுகளில் சொந்த நாட்டுக்கு ஆடச் சென்றுவிட்டார். அந்த சீசனில் கொல்கத்தா 6ஆவது இடமே பெற முடிந்தது. அடுத்த வருடத்திலேயே நம்ம மெக்கல்லம் கேப்டனாக்கப்பட்டார். கெயிலும் அணிக்குள் வர, டீம் பக்கா வெயிட். ஆனால் யார் துரதிஸ்டமோ சோபிக்க முடியவில்லை.  ஏனோ தெரியவில்லை மெக்கல்லத்தின் கேப்டன்சியும் பிடித்துப் போனது.





மாறி வரும் கிரிக்கெட் சூழலுக்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொண்டவர்களுள் மெக்கல்லம் முதன்மையானவர். டெஸ்டில் ரன்ரேட்- ஸ்ட்ரைக் ரேட் 5 க்கு மேல் மெயிண்டைன் செய்வது என்பது சாதாரண விசயம் இல்லை தானே.. பந்து போடுபவர் எப்பேற்ப்பட்ட பவுலராய் இருந்தாலும் பந்து கைகளிலிருந்து விடுபடுவதற்குள் இவர் கிரீஸிலிருந்து ஒரு தாவு , அடுத்து பேட்டை ஒரு சுழற்று, பந்து பறக்கும் எல்லைக் கோட்டிற்கு... இது ஒரு உளவியல் உத்தி.. பவுலரை ஏறி வந்து அடிப்பது எல்லோருக்கும் வாய்த்துவிடாத கலை. அதில் நம்ம கங்குலி ஸ்பின்னில் கில்லி, ஆனால் கடைசி கால கட்டங்களில்  அவரால் இயலாமல் போனது நிஜம். ஆனால் மெக்கல்லம் வேகப்பந்து வீச்சை இறங்கி வந்து அடிப்பார் அதுவும் ஸ்டைலாக, ஸ்பீடாக... அப்புறம் வேகப்பந்து வீச்சை இறங்கி அடிப்பதில் என்னைக் கவர்ந்தவர் உத்தப்பா. இப்போது அந்த ஸ்டைல் ஆடுவதில்லை என்பது ஏமாற்றம் தான்.. நடந்து வந்து ஒரு தூக்கு.. அநாசயாமாக அடிக்கப்படும் சாட் அது. இது மெக்கலமின் சாட்டிலிருந்து வந்த இன்சிபிரேசன் தான். இன்னொன்று தில்சானின் கண்டுபிடிப்பு கம் பேவரைட் சாட்டான தில் ஸ்கூப்பை அவரைவிட நேர்த்தியாக ஆடுபவர் மெக்கல்லம்.



ஸ்டீபன் பிளமிங்குக்கு பின் டேனியல் வெட்டோரியும், மெக்கல்லமும் இல்லாதிருந்திருந்தால் இன்றைய கிவி அணியை நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது. லீட் ப்ரம் த ப்ரண்ட் என்பார்கள், அது மெக்கலமுக்கு அப்படியே பொருந்தும். அதிரடியாக ஆட்டத்தை துவக்கி அசாத்திய தன்னம்பிக்கையை அணியில் விதைத்துவிட்டுத் தான் செல்வார். அதே போல பீல்டிங். ஒரு விக்கெட் கீப்பர் பீல்டராக மாறும் போது க்ளிக் ஆவது கடினம். ஆனால் இவர் அதில் தான் கில்லி. பாயிண்ட், கவர்,  லாங் என ஆல் இன் ஆல் அழகுராஜாவாக முன்னிற்பார்.




சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணிக்கு வந்தபின்னர் அவருடைய ரசிகர் வட்டம், ஆட்ட நுணுக்கம் ஆகியவை உச்சத்திற்கு சென்றது என்றே சொல்லலாம். கடந்த இரண்டு சீசன்களிலும் 400 ரன்களைக் கடந்து நம்பிக்கையான வீரராய் உரிமையாளர்களிடம் பெயர் வாங்கி இன்று அதிக தொகைக்கு குஜராத அணிக்கு தேர்வாகியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் போர் என்று சொல்பவர்களையெல்லாம் அதையும் ரசித்துப் பார்க்கச் செய்தவர் மெக்கல்லம். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மட்டும் இவர் கொஞ்சம் சுதாரித்திருந்தால் கிவி அணி கோப்பையை தட்டியிருக்கும். அணித் தேர்வு, கேப்டன்சி,டெக்னிக்கல் யுத்தி, அதிரடி என கலக்கல் காக்டெய்ல் மெக்கல்லம் என்றால் அது மிகையில்லை. சென்ற வருடம் நம் அணிகெதிராக அடித்த 302 ஐ மறக்க முடியுமா..? இல்லை கடைசி டெஸ்டின் அதிவேக சதத்தைத் தான் மறக்க முடியுமா...?


எவ்வளவு பெரிய ஆட்டக்காரருக்கும் சறுக்கும் இடம் ஒன்று இருக்கும். டிபெண்டிங் பேட்டிங்கில் வல்லவரான‌ ஆனானப்பட்ட டிராவிட்டே அதிக முறை பவுல்ட் ஆன சாதனையை வைத்திருக்கவில்லையா..! அதே போல மெக்கல்லமின் பலம் பலவீனம் இரண்டுமே வேகம் தான். ஒன்று வந்த உடன் அடித்துவிட வேண்டும், இல்லையென்றால் வந்த உடனேயே திரும்பிவிடுவார். சுழல் பந்துவீச்சில் அவர் கொஞ்சம் வீக் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்...அதே போல அவரின் மட்டையில் பந்து சிக்காமல் தடுத்து பிரசர் உண்டாக்கினாலும் வீழ்ந்துவிடுவார். ஆனால் 2008 க்கு முன்பான மெக்கல்லத்தைவிட இன்றைய மெக்கல்லம் சிறப்பான ஆட்டக்காரர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பார்மில் இருக்கும் போதே, பீக்கில் இருக்கும் போதே ஓய்வு பெறுவது கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பெரிய வரம், எனக்குப் பிடித்த டிராவிட்டுக்கும், வெட்டோரிக்கும்,யூசுப் யுகானாவுக்கும், அகர்கருக்கும் கிடைக்காத வரம் என்னைக்கவர்ந்த மெக்கல்லத்துக்கு கிடைத்திருக்கிறது, மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. இன்னும் ஒரு வருடம் ஆடியிருக்கலாம் என்று பேசவைக்கும் ஓய்வு தான் சிறப்பான,பெருமையான ஓய்வு அறிவிப்பு. அந்த வகையில் மெக்கல்லம் ரசிகர்களின் மனங்களை வென்றுவிட்டார். 




ஐபிஎல் போட்டிகளின் போது டோனியிடம், கேப்டன்சி கடினமாக இல்லையா எனக் கேட்கப்பட்டபோது, மெக்கல்லத்தை டீம்ல வச்சு இருக்கேன், உங்களுக்கே இந்த கேள்வி நியாயமா எனக் கேட்டார் சிரித்துக் கொண்டே.. ஆம் சென்னை அணி ஆடும் போது திடீரென பீல்டிங் சேஞ்ச் செய்துவிட்டு தோனியைப் பார்ப்பார், அவர் மெலிதாக புன்னகைப்பார்..ஓவருக்கிடையில் அவரும் டூபிளசியும் தோனியும் ரெய்னாவும் கலந்தாலோசிப்பதைப் பார்க்கும் போது அட அட அட.. இது அன்றோ டீம் என தோன்றும்.. ரசிகர்களின் துரதிஸ்டம் சென்னையும் இல்லை... மஞ்சள் சீறுடையும் இல்லை.. 





பொழுதுபோக்காய் மாறிவரும் கிரிக்கெட் உலகம், ஒரு நல்ல எண்டர்டெயினரை  இழந்திருக்கிறது.. ஆனால் அவருடைய ஆட்டம் இனி உருவாகப் போகும் பல எண்டர்டெய்னர்களுக்கு ஆரம்ப விதையாய் இருக்கப் போகிறது என்பது மட்டும் நிஜம்.. ஓய்வுக் காலம் சிறப்பாய் அமைய வாழ்த்துகள் பிரண்டன்.. கலக்குங்க ஐபிஎல்9 உங்களுக்காக காத்திருக்கிறது....



5 comments:

  1. Excellent Article It seems how much he inspires you I am big fan of him too, Thanks

    ReplyDelete
  2. Ji Super...Very good, timely and rare informations about the great man...
    He is not only Brendon McCullum, He is Branded and Granted McCullum.

    ReplyDelete
  3. வணக்கம் நண்பரே கிரிக்கெட்டை நான் பொழுது போக்காக மட்டுமே இதுவரை உபயோகப்படுத்துகின்றேன் தங்களது பதிவு தாங்கள் எவ்வளவு தூரம் கிரிக்கெட்டை நேசிக்கின்றீர்கள் என்பதை தெளிவாக விளக்குகின்றது.

    தங்களது ‘’பிச்சைக்காரன்’’ கதையை படித்து தங்களது எழுத்தின் நடையை, வசீகரத்தை கண்டு இன்றுவரை வியந்து கொண்டு இருக்கின்றேன் அவ்வளவு திறமை தங்களிடம் இருக்கின்றது முயலுங்கள் தாங்களும் சாதிக்கலாம் எழுத்தின் மூலம் நாட்டுக்கு பயனில்லாத இந்த விடயங்களை பொழுது போக்குக்காக உபயோகியுங்கள் நாளைய மன்னர்களில் தாங்களும் ஒருவரே....

    //நமது நட்பு என்பது வேறு
    கருத்து வேறுபாடுகள் என்பது வேறு//

    இரண்டையும் நான் இணைக்கத் தெரியாதவன் மட்டுமல்ல, இணைக்க மறுப்பவனும்கூட...

    என்றும் நட்புடன்
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக ஜீ.. என் பதிவுகளை படித்து ஊக்குவிக்கும் உங்கள் போன்றவர்கள் தான் என் எழுத்துகளின் ஆக்கமே... உங்கள் வார்த்தைகள் எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஜீ... மிக்க நன்றி.. கண்டிப்பாக பொழுதுபோக்கு விசயங்களை குறைத்துக் கொள்கிறேன்... நட்பு தொடரட்டும்.. நன்றி சார்..

      Delete
  4. வணக்கம்
    ஒவ்வொரு படத்துக்கும் அற்புத விளக்கம் கொடுத்துள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete