Sunday, February 14, 2016

மாற்று அரசியல் சாத்தியமாகுமா....?


மாற்று அரசியல் சாத்தியமாகுமா....?

எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை வித்தியாசமாக அமையப் போகிறது வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல். மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் கூட. எப்போதும் ஆளும் கூட்டணி, அதற்கு எதிரான ஒரு கூட்டணி, மூன்றாவதாக சிறிய அணி என நடைபெற்ற தேர்தல் இம்முறை பலமுனை போட்டிகள் கொண்டதாக இருக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்ததே..! தற்போதைய சூழலில் அதிமுக தலைமையில் ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி, மக்கள் நல கூட்டணி, பாமக, புறக்கணிக்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ள நாம் தமிழர் கட்சி, தனித்து விடப்பட்டுள்ள பா.ஜ.க என ஆறு முனை போட்டி. கடைசிநேர மாற்றத்திற்குட்பட்டு 5 முனைப் போட்டி என்பது உறுதியான ஒன்று.




தமிழ் மாநில காங்கிரசின் நிலைப்பாடு இதுவரை உறுதியாகவில்லை என்றாலும் அவர்களுடைய நடவடிக்கைகளை வைத்து பார்க்கும் போது  அதிமுக,மநகூ இவையிரண்டும் சாத்தியமாகும் வாய்ப்புகள். தான் கட்சி ஆரம்பித்ததன் வலிமையை காட்டவும் தன் இருப்பை மக்களுக்கு காட்டவும், குறைந்தபட்சம் காங்கிரசுக்கு தன் செல்வாக்கை காட்டவும்  அதிமுகவுடன் செல்வதையே விரும்புவார்   வாசன். அது தான் அவருக்கு பாதுகாப்பு என நினைப்பது தெளிவாகவே தெரிகிறது. பரிட்சார்த்த முயற்சிகளை எடுத்து காங்கிரசைவிட குறைவாக வெல்வது அவமானம் என நினைப்பதும் புரியாமல் இல்லை. எனவே அதிமுகவுடன் இணைந்து 15-20 இடம் வாங்கி போட்டியிடுவதைத் தவிர பெரிய எண்ணம் எதுவும் இந்த தேர்தலில் அவருக்கு இல்லை.  எனவே ம.ந.கூ போக மாட்டார் என அடித்துக் கூறுவேன். என்னைப் பொறுத்த வரை தமாகா  பிரிவுக்கு பின் இளங்கோவனை தலைவராக்கியது சிறந்த முடிவு. அவருடைய அதிரடியான பேச்சும் சுறுசுறுப்பும் வாசனின் இழப்பை முழுமையாக ஈடுகட்டாவிட்டாலும் குறைத்திருக்கிறது.தமாகாவை விட காங்கிரஸ் தமிழகத்தில் வலிமையாக இருப்பதாகவே படுகிறது.

மக்கள் நலக் கூட்டணியின் முடிவு அசாத்தியமானது,பாராட்டப்பட வேண்டியது. பலர் நினைப்பது போல் மநகூ இனி உடைவதற்கு வாய்ப்பே இல்லை. இன்னும் இரு வலிமையான நடவடிக்கை தேர்தல் நெருங்கும் சூழலில் நடக்க இருக்கிறது. அது சஸ்பென்ஸ்.... ;) அதே போல பா.ம.க கட்சியும் இனி பின் வாங்காது. அது தனித்து நிற்பதும் உறுதியான ஒன்றுதான்.

நாம் தமிழர் கட்சியின் துடிப்பும் வேகமும் கவனிக்கத் தக்கது. 234 தொகுதிக்கும் சிறப்பான வேட்பாளர்களை அறிவித்து இத்தேர்தலில் வேறு கட்சி வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு இருக்கிறார்கள். கடலூரில் சீமான் வென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. மொத்தத்தில் இத்தேர்தல் அவர்களுக்கு ஒரு சோதனை முயற்சிதான். 2021 தான் இலக்கு. இந்த முறை வெற்றி தோல்வி பற்றி கவலைப் படாமல் தேர்தலை சந்திப்பார்கள். இங்கு குறிப்பிட்டாக வேண்டிய ஒன்று மநகூ,பாமக,நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு 2021 தான் பிரதான இலக்கு. இம்முறை திமுகவை பலவீனப்ப்டுத்திவிட்டாலே அடுத்து எளிதாக அதிமுகவை வீழ்த்திவிடலாம் என்ற தொலைநோக்கோடு இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

இன்றைய தேதியில் மக்களின் பெரிய எதிர்பார்ப்பு தேமுதிக யாரோடு கூட்டணி வைக்கும் என்பது தான். 2011ல் அதிமுக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற விஜயகாந்தும் ஒரு காரணம் என்பதை மறுத்துவிட முடியாது. இவர்கள் யாரோடும் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவு பேர வலிமையை உயர்த்தி இருக்கிறார்  விஜயகாந்த். மக்கள் வலிமையை உயர்த்தி இருக்கிறாரா என்பதை காஞ்சி மாநாடு தான் சொல்ல வேண்டும். ஆனால்  தன் பிரதான எதிரியாய் கருதும் ஜெயலலிதாவை வீழ்த்த திமுகவுடன் தான் சேர வேண்டும் என எண்ணுகிறார். எனவே திமுக - தேமுதிக - காங்கிரஸ் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்பதே என் எண்ணம்.

கடைசியாய் தனித்து விடப்பட்ட பா.ஜ.க, ஒன்று தனித்து நிற்க வேண்டும் இல்லை பாமக தலைமையிலாக தேர்தலை சந்திக்க வேண்டும். எந்த பத்மவிபூசனும் பயன் தராது என்று உணர்ந்தவாரு அதிமுகவிடம் தஞ்சம் அடையலாம் என முயன்றாலும் ஜெயலலிதா ஏற்றுக் கொள்வது சாத்தியமில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பேன் கூட்டணிலாம் வேண்டாம் என்று தெளிவாக சொல்லிவிடுவார் ஜெயலலிதா. பா.ஜ.க  ன் இன்றைய நிலைக்கு யார் காரணம்.....? அவர்களேதான், ஆம்..! தமிழிசை அரசை விமர்சித்தால் அடுத்த நொடி இல.கணேசன் ஜெயலலிதாவை புகழ்வார்.தமிழகத்தில் அவர்களுக்கு என அடையாளம் ஏற்படுத்திக் கொடுத்த விஜயகாந்தை விடுத்து ரஜினிகாந்தை தேடி ஓடுவார்கள் . தேமுதிகவை மதிப்பதே இல்லை. இவையெல்லாம் பா.ஜ.க வின் நம்பகத் தன்மையை குறைத்துவிட்டன. பத்மவிபூசன் மூலமாக ஏதாச்சும் அதிசியம் நடந்தாலே ஒழிய பா.ஜக இந்த தேர்தலில் சில ஆயிரம் ஓட்டு வாங்க்கக் கூட  வாய்ப்பு இல்லை.


இத்தகைய பல முனைப் போட்டியால் சந்தேகமே இல்லாமல் லாபம் அடையப்போவது அதிமுக தான். தனிப்பெரும்பான்மையுடன் இல்லாவிட்டாலும் 80-90 இடம் அடிக்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டாவது இடத்திற்கு ம.ந.கூ யும் திமுகவும் மல்லுக்கட்டும். ஒரு வேலை தேமுதிக திமுகவுடன் சேர்ந்தால் இந்நிலை மாறலாம். ஆனால் ஆட்சியப் பிடித்துவிடும் என்பதெல்லாம் உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். குறிப்பாக இளைஞர்களிடம் பாஜகவிற்கு இருக்கும் ஆதரவு கூட ஸ்டாலினுக்கு இல்லை. திமுகவின் இந்த அளவு பலவீனத்திற்கு கலைஞரின் நிலைப்பாடுகளும் காரணம். அவரால் முன்னர் போல பிரச்சாரத்திலும் ஈடுபட முடியாது. ஸ்டாலின் மீது கட்சியினருக்கு ஈர்ப்பு இருக்கிறதோ தெரியவில்லை,பொது மக்களுக்கு சுத்தமாக இல்லை.கலைஞர் எத்தனை இடத்தில் பிரச்சாரம் செய்வார் என்றும் சொல்ல முடியாது. ஆக திமுகவின் இருப்பை நிலைப்ப்டுத்திக் கொள்ள விஜயகாந்த் எனும் பீரங்கி கண்டிப்பாக தேவை. மனைவி பாஜகவுடன் போகலாம் என்கிறார்,மைத்துனர் திமுகவுடன் தான் என நிற்கிறார், கேப்டன் குழம்புகிறார். ஒரு வேலை அவரும் கைவிட்டு 2021 ஐ இலக்காக கொண்டு பா.ஜ.க வுடனோ மநகூ உடனோ போய்விட்டால் திமுகவால் அழகிரியைக் கூட சமாளிக்க முடியாது. அழகிரியின் ஒவ்வொரு குரலும் ஊடகங்களால் ஊதப்பட்டு பெரிதாக்கப்பட்டு திமுகவுக்கு சாவு மணி அடித்துவிடும். தோல்வி அடையும் என்று அவர் சொல்ல சொல்ல மக்களும் தோல்வி அடையும் கட்சிக்கு எதற்காக வாக்களிக்க வேண்டும் என யோசித்துவிடுவார்கள்.

இன்னொன்று சமூக வலைத்தளங்களில் மக்கள் நலக் கூட்டணிக்கு பெருகி வரும் ஆதரவும் கவனிக்கப்படக்கூடியதே. அங்குள்ள அத்தனை தலைவர்களும் எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர்கள், நல்ல பேச்சாளர்கள், அவர்கள் பிரச்சாரத்தில் இறங்க இறங்க அவர்களுடைய வீச்சு அதிகமாகிக் கொண்டே வரும்.தொகுதிப் பங்கீட்டை மட்டும் தெளிவாக தாண்டிவிட்டால் 2021ல் அசைக்கமுடியாத சக்தி மக்கள் நலக் கூட்டணிதான். மதுரை மாநாட்டை எந்த ஊடகமும் காட்டவே இல்லை. ஆனால் அந்த மாநாடு பெரிய வெற்றி அடைந்த பின் புறக்கணித்த ஊடகங்கள் கவனிக்க ஆரம்பித்துவிட்டன. எனவே மநகூ ஊடகங்களுடன் பேசி தேர்தலுக்கு முன்பாக இன்னும் ஒரு மாநாட்டை நடத்திவிட்டால் அவர்களின் கிராப் பெரிய வளர்ச்சி அடையும். ஆனால் இதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம்.

திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்று வேண்டும் என எதிர்பார்க்கும் இளைஞர்களில் நானும் ஒருவன். இத்தனை நாள் ரஜினி அந்த மாற்றத்தை தருவார் என்று நம்பினேன். ஆனால் அது நடக்கவே நடக்காத கானல் நீர் எனத் தெரிந்துவிட்டது. எனவே இப்போது இருப்பதிலேயே எது பெஸ்ட் என தேர்ந்தெடுக்கும் நிலை தான். எனக்கு மட்டும் அல்ல, மாற்றத்தை விரும்பும் யாவருக்குமே கூட...! எல்லோரும் சொல்வது போல மநகூ அதிமுகவின் பி டீமோ என்ற எண்ணம் எனக்கும் இருந்தது. .இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே  எனும் எண்ணம் தற்போது வந்துவிட்டது. ஒரு வேலை அதிமுக பெரும்பான்மை பெறாமல் மநகூ ஆதரவோடு ஆட்சியமைக்கும் சூழல் வந்தாலே பெரிய மாற்றம் தானே..? ஜெயலலிதாவும் உடலளவில் தளர்ந்துவிட்டார். தீவிர அரசியலில் முன்னர் போல் ஈடுப்ட முடியுமா என்றும் தெரியவில்லை.குமாரசாமி கணக்கு காப்பாற்றுமா எனவும் உறுதி இல்லை. எனவே மநகூ ஆட்சியை இயக்குவதுடன் அமைச்சரைவையிலும் பங்குபெற்று, அதிருப்தி ஏற்படும் போது ஆட்சியைக் கலைத்துவிட்டு அடுத்த தேர்தலில் பெரும்பானமை வெற்றி பெறக் கூட சாத்தியம் இருக்கிறது அல்லவா.

அது நடக்காவிட்டாலும் குறைந்தபட்சம் அதிமுக திமுகவுக்கு மாற்றாக‌  ஒரு மாற்றத்துக்கான விதை தூவப்படும் என்பதால் மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு கூட்டணி மக்கள் நலக் கூட்டணியாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். தேர்தல் நெருங்கும் சூழலில் ஒரு பெரிய ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வாய்சும், உச்ச நடிகரது ஆதரவுடன் கூடிய பிரச்சாரமும் மக்கள் நலக் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும் வாய்ப்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத‌ தகவல்கள் தெரிவிக்கின்றன. அது நடந்தாலும் நடக்காவிட்டாலும் இந்த தேர்தலில் என்னுடைய ஓட்டு மக்கள் நலக் கூட்டணிக்கே....!










1 comment:

  1. நல்ல அலசல் ஜெயசீலன். எப்படியேனும் ஒரு மாற்றம் வந்தால் தமிழ்நாடு உருப்படும். அந்த மாற்றமும் நல்ல மாற்றமாக இருக்க வேண்டும்...பார்ப்போம்..மக்கள் என்ன தீர்ப்பளிக்கப்போகின்றார்கள் என்பதை.

    ReplyDelete