Monday, September 8, 2014

என்னைக் கவர்ந்த திரைப்படம் - புதுக்கவிதை

என்னைக் கவர்ந்த திரைப்படம் -  புதுக்கவிதை


திரைப்படம் என்பது நம் சமுதாயத்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு ஊடகம், அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி, இனி எப்பொழுதும் சரி. ஆனால் அதை நாம் ஒரு பொழுதுபோக்கு ஊடகமாக மட்டும் தான் பார்க்கிறோமா எனறால் இல்லை என்பது தான் விடை. அதை ஒரு வித ஈர்ப்போடு, ஒரு வித அதீத ஆர்வத்தோடு ஏன் சில நேரங்களில் நம் வாழ்க்கையோடு கூட ஒப்பிட்டு மகிழ்கிறோம். நாம் எதிர்பார்க்கும் விசயங்களும் நிகழ்வுகளும் அதில் இருந்துவிட்டால் அதை கொண்டாடவும் செய்கிறோம்.ஒவ்வொருவருக்கும் சில திரைப்படங்கள்  எத்தனை முறை பார்த்தாலும் கண்டிப்பாக சலிப்பைத்தராத கொண்டாட்டங்களாக இருக்கவே செய்யும். அப்படி எனக்கு இருந்த‌ என்னைக் கவர்ந்த ஒரு திரைப்படம் புதுக்கவிதை !





ஒரு வலைப்பக்கத்தில் பதிவர் ஒருவர் இந்த படத்தினை திரையரங்கில் பார்த்த தனது அனுபவத்தை பகிர்ந்திருந்தார். அவர் சொல்லியதிலிருந்து மிகச்சிறந்த காதல் திரைப்படம் என்பதை மட்டும் அறிந்திருந்தேன். வேறு ஏதும் தெரியாது. ஒரு நாள் எதார்த்தமாக வா வா வசந்தமே பாடலை தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது. அது ஒரு ரஜினி பட பாடல் என்பதை தெரிந்து கொண்டேன். கடைசியில் தான் அது புதுக்கவிதை திரைப்பட பாடல் என அறிந்தேன். உண்மையிலேயே அந்தப் பாடல் அவ்வளவு இனிமையான பாடல். காட்சிப்படுத்திய விதமும் என்னை வெகுவாக கவர்ந்திருந்தது. எனக்கு பிடித்த ரஜினி படம் என்று தெரிந்ததும் அதை பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். ஆனால் அவ்வளவு சுலபமாக முடியவில்லை. அதை ஒரு சானலிலும் போடவில்லை.சிடி கடையில் கேட்டுப்பார்த்தேன் அங்கும் இல்லை. ரஜினியின் மசாலா படங்கள் தான் இருந்தது. வேறு வழியில்லாமல் காத்திருக்க வேண்டி இருந்தது.


2 வருடங்கள் கழித்து எங்கள் கல்லூரி விடுதியில் வைபை வசதி கொண்டு வந்தனர். அப்போது முதன் முதலாக நான் டவுன்லோட் செய்த படம் புதுக்கவிதை தான்.

ஒரு வித தாக்கத்தை என் மனதில் ஏற்படுத்தியிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். கதை பழைய கதை தான். மோதல், காதல், பிரிவு ,வெற்றி.ஆனால் காட்சிப்படுத்தியிருந்த விதமும், வசனமும், ரஜினி மற்றும் கதாநாயகி ஜோதியின் நடிப்பும்,எல்லாவற்றுக்கும் மேலாக இசைஞானியின் அற்புத இசையும் படத்தை வேறு நிலைக்கு தூக்கிச் சென்றது. 

ரஜினி(ஆனந்த் ) ஒரு பைக் ரேசர். ஜோதி (உமா) ஒரு பணக்கார வீட்டு பெண். பரிசளிப்பு விழாவில் ரஜினியின் கறுப்பு நிறத்தையும்,கிரீஸ் அழுக்கு ஒட்டிய தேகத்தையும் பார்த்து அருவருப்பு அடைந்து பேசுவார் ஜோதி. முடிந்து வீடு திரும்பும் வழியிலும் இது தொடரும். பொறுக்க முடியாத கார் டிரைவர் தேங்காய் சீனிவாசன் ( ரஜினியின் சித்தப்பா ) பாதிவழியில் இறங்கி சென்றுவிடுவார். அதற்கு ஜோதியின் அம்மா ஆள் வைத்து அடிக்க, நம்ம ஹீரோ வீட்டுக்குள்ளேயே பைக்கோடு சென்று அடிபிரித்துவிட்டு, கறுப்பு எனச்சொல்லிய ஜோதிக்கு முத்தம் கொடுத்துவிட்டு வந்துவிடுவார். மறுபடி அவள் அம்மா ரஜினியின் வீட்டுக்கு தீவைத்து கொல்ல முயற்சிக்கும் போது ஜோதி காப்பாற்றுவார். உடனே இருவருக்கும் லவ் வந்துவிடும் . பின் டூயட் தான்.  இவ்வாறு முதல் பாதி வழக்கமான மசாலாத்தனத்துடனே செலும்.அந்த வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே பாடல் தான் முதல் பாதியில் சொல்லிக் கொள்ளும் அளவு சிறப்பு. மிக அருமையான இசையமைப்பு, காட்சி, நடிப்பு, என இப்போதும் மிகச்சிறந்த பாடலாக திகழ்வதே அதற்கு சாட்சி.


ஒருகட்டத்தில் ஜோதியின் அம்மா கல்யாணத்திற்கு சம்மதிப்பது போல‌ சூழ்ச்சி செய்து ரஜினியை சென்னை அனுப்பி விடுவார்.அங்கே ரவுடிகள் கையில் மாட்டிக்கொண்டு விடுவார்.அங்கிருந்து தான் மாஸ் படம் கிளாஸ் படமாக மாற்றம் அடையும். ரவுடிகளின் தலைவன் ரஜினியின் டைரியைப் படித்துவிட்டு இரக்கம் கொண்டு அனுப்பிவிடுவார். ரஜினி தன்னுடைய டைரியை மறந்துவிட்டு செல்லும்போது, வில்லன்களில் ஒருவர், ' .......பிரதர்.......காவியத்தை மறந்துட்டு போறீங்க.......' எனபார் பாருங்கள் , மாஸ் வசனம். நம்ம ஹீரோ அங்கிருந்து பைக்கிலேயே ஊட்டிக்கு பறப்பார். இவர் வருவதற்கும் வேறொருவருடன் திருமணம் நடப்பதற்கும் சரியாக இருக்கும்.அத்தோடு இடைவேளை.


இடைவேளை முடிந்தவுடன் ரஜினி வேறொரு ஊரில் ஒரு பெண்ணோடு குழந்தையுடன் வாழ்ந்து வருவார். அதே ஊரில் ஜோதியும் அந்த குழந்தை படிக்கும் பள்ளியிலேயே ஆசிரியராக வேலை பார்த்து வருவார்.



ஒரு நாள் எதார்த்தமாக அந்த குழந்தையை அழைத்துவர ரஜினி பள்ளிக்குச் செல்ல ரஜினியும் ஜோதியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வார்கள்.அப்போது ரஜினி நடந்து வர , ஜோதி எதிரே நடந்து வர பேக்ரௌண்டில் வெள்ளைப் புறா ஒன்று ஏங்குது பாடல் ஜேசுதாசின் உருகும் குரலில் ஒலிக்கும். இருவரின் கண்களிலும் அந்த காதல் தெரியும். அப்போது அம்மா வரலையா ? என குழந்தை ஒன்று ரஜினியை நோக்கி நடந்து வரவும் ஜோதி அதிர்ச்சியுடன் தன் காதலை மறைக்க முயற்சிப்பார். செம சீன். ஜோதி அந்த குழந்தையைத் தூக்கி ஓம் பேரு என்ன ம்மா என கேடக அதற்கு உமா என அந்த குழந்தை பதில் சொல்லும், அப்படியே கண்களில் மகிழ்வுடன் ரஜினியைப் பார்த்து சிரித்துவிட்டு போய்விடுவாள் ஜோதி.. கிளாஸ்...


அடுத்து ஒரு காட்சியில் உமா உன்னோடு தனியாக பேச வேண்டும் என ரஜினி அழைக்க இருவரும் சந்திப்பார்கள். அப்போது ரஜினி நீயாவது நல்லா இருக்கியா உமா ? எனக் கேட்பார். எனக்கென்ன கடவுள் மாதிரி கணவர், அழகான இரண்டு ஆண் குழந்தைகள், என சொல்வார். நீயாவது நல்லா இருக்கியா என கேட்டதன் அர்த்தம் என்ன ?  என ரஜினியிடம் ஜோதி கேட்க, ரஜினி, அன்பான மனைவி ,குடுமபம், முன்னாடி உனக்காக வாழ்ந்தேன், உனக்காக சிரித்தேன்,உனக்காக அழுதேன் இப்போ எனக்காக சிரிக்க எனக்காக அழ ஒரு ஜீவன் இருக்கு என சோகம் கலந்த சிரிப்போடு சொல்வதைக் கேட்டு ஜோதி மகிழ்வார். கடைசியாக‌ நான் போட்டுமா என ரஜினியைப் பார்த்து கேட்க, அதான் போயிட்டியே என ரஜினி சொல்ல அப்போதும்  பேக்ரவுண்டில் ராஜாவின் இசை அப்படியே ஆளைத் தூக்கும்  ஒரு அற்புதமான காட்சி.


இன்னொன்று வா வா வசந்தமே பாடல். அந்த குழந்தையோடு ஒரு தீபாவளிக் காலையில் வருவதைப்போல் படமாக்கப்பட்டிருக்கும்."என் வானிலே ஒரு தேவ மின்னல் வந்ததே" எனும் வரியில் ஜோதியின் புகைப்படத்தை எடுத்துப் பார்ப்பார் ரஜினி. அருமையான நடிப்பு. செம பாடல்.அதே போல வெள்ளைப் புறா ஒன்று சோகப் பாடலும் மனதை வருடும் ஒரு பாடலாக இருக்கும். காதல் தோல்வியில் ரஜினி பாடும் பாடலாக இது இருக்கும்.மொத்தத்தில் ரஜினி படமா இளைய ராஜா படமா எனத் தெரியாத அளவிற்கு இசையில் பின்னியிருப்பார் இசைஞானி...



ஆனால் ரஜினி சொன்ன பொய்யும் ஜோதி சொன்ன பொய்யும் இருவருக்குமே தெரியாது. சரிதா சூப்பர் ரோலில் இருவரையும் சேர்த்துவைக்க ப்ளே பண்ணியிருப்பார். அந்த குழந்தை சரிதா, டெல்லி கணேஷ் குழந்தை என்பதையும், ரஜினி இன்னும் தன்னை மறக்கவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளும் ஜோதி தன்னுடைய பையை அவர்கள் வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு அழுகையுடன் கிளம்பிவிடுவார். அப்பொது வீட்டுக்குள் வரும் ரஜினி பையை கொடுப்பதற்காக ஜோதியின் வீட்டுக்குள் போவார். அப்போது காபி போட்டுத் தருமாறு   ரஜினி  கேட்க ஜோதி போய்விடுவார். அப்போது தான் ரஜினி அவளுடைய‌ கணவர் போட்டோ மாலையுடன் மாட்டப்பட்டிருப்பதைப் பார்க்கவும் காபி டம்ளரை ஜோதி போட்டு உடைக்கவும் சரியாக இருக்கும். இருவரின் கண்களிலும் கண்ணீர். உடனே ரஜினி போட்டோவில் இருந்த பூவை ஜோதிக்கு வைத்துவிட்டு நாளை நாம் புது வாழ்க்கையை தொடரலாம் எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிடுவார்.



மறு நாள் ஜோதி ரஜினியிடம் சொல்லாமல் ரயிலில் வேறு ஊருக்கு  கிளம்பிவிடுவார். உடனே ரஜினி தன் பைக்கிலேயே ரயிலை பின் தொடர்வார். உடம்பெல்லாம் ரத்தம் வழிய விழுந்து புரள்வதைப் பார்க்கும் ஜோதி ஒரு ஸ்டேசனில் இறங்கி விடுவார், ஓடிவந்து. இருவரும் கட்டிப்பிடித்துக் கொள்வர். அப்போது பிண்ணனியில் வெள்ளைப் புறா ஒன்று பாடல் ஒலிக்க இனிதே நிறைவடையும் படம்...............


ஒருவித சோகம்,  மகிழ்ச்சி,திருப்தி எல்லாம் எழுந்தது மனதில் . அவ்வளவு கண‌மாக உண்ர்ந்தேன். கண்ணிலிருந்து  ஒரு துளி கண்ணீர் எட்டிப்பார்த்தது. ஏன் ? என்பதற்கான விடை இன்னும்  தெரியவில்லை ?????? 


பின்குறிப்பு: கவிதாலயா தயாரிப்பில் எஸ்.பி முத்துராமன் இயக்கிய இந்தப் படம் சுமாராகத்தான் ஓடியதாம். இதில் மட்டும் ஜோதிக்குப் பதிலாக பநீ தேவி நடித்திருந்தால் படம் பட்டைய கிளப்பியிருக்கும் என நினைக்கிறேன். 

உங்கள் கருத்துகளைப் பகிரலாம்.


உங்கள் சீலன்...

8 comments:

  1. எனக்கும் மிக பிடித்த படம். அருமையான இசை, அழகான திரைக்கதை. இவ்வளவு இருந்தும் சித் சுமாராக ஓடியதற்கு காரணம் (என்னை பொறுத்தவரை), அந்த சரிதா -டெல்லிகணேஷ் கதா பாத்திரங்கள். அந்த பாத்திரம் எஹ்டுவும் கதையில் ஒட்டவில்லை.மிகவும் செயற்கையாக இருந்தது. அதை மற்றும் சற்று மாற்றி அமைத்து இருந்தால் இன்னும் நன்றாக அமைந்து இருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார் நான் சொல்ல மறந்ததைச் சரியாக சொல்லிவிட்டீர்கள், நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும். தொடர்ந்து வருகை தர வேண்டும்...

      Delete
  2. உன் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது, அடுத்த முறை ஊருக்கு வரும்போது படத்தை காப்பி கொடு, பாத்துருவோம்....

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  4. நண்பரே,

    நீங்கள் இவ்வளவு சிலாகிக்கும் இந்தப் படம் ஹிந்தியில் அணில் கபூர் ஒரு படத்தின் தமிழ்த் தழுவல். எனது பார்வையில் நெற்றிக்கண் கொஞ்சம் சகித்துக்கொள்ளக்கூடிய படம். அதில் ரஜினியின் நடிப்பு (தந்தை ரஜினியைச் சொல்கிறேன்) நம் மனத்தைக் கவரும் விதத்தில் இருக்கும்.

    ReplyDelete
  5. முதல் வருகைக்கும் அறியாத தகவலுக்கும் மிக்க நன்றி சார்..புதுக்கவிதை திரைப்படத்தை நெற்றிக்கண் என நினைத்துவிட்டீர்கள் என நினைக்கிறேன். தொடர்ந்து வருகைதர வேண்டும்..

    ReplyDelete