Wednesday, August 20, 2014

கிரிக்கெட்டும் நானும் - MY EARLY LIFE WITH CRICKET


கிரிக்கெட்டும் நானும்

இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு விசயத்தின் மீது அதிக ஆர்வம் இருக்கும். அது எந்த துறையாக இருந்தாலும் சரி.சிலர் பொத்தாம் பொதுவாக எல்லாமும் பிடிக்கும் என சொன்னாலும் அவர்கள் அறியாமலேயே சிலவற்றின் மீது நல்ல அபிப்ராயம் இருக்கும்.அந்த வகையில் எனக்கு பிடித்த ஒன்று கிரிக்கெட். அது என்னில் எப்படி வந்தது இன்று எவ்வாறு இருக்கிறது என தேட முயற்சிப்பது தான் இந்த பதிவு. சற்று நீண்டு விட்டதால் பகுதிகளாக தரலாம் என நினைக்கின்றேன்.



கிரிக்கெட்டின் தோற்றத்தினைப் பற்றியோ ரெக்கார்டுகளையோ தர விரும்பவில்லை. அது பல வலைகளில் கொட்டிக் கிடக்கின்றன.எனவே கிரிக்கெட்  மீதான என் ரசனைகளை பதிவு செய்யவே விரும்புகிறேன். இனி பதிவுக்குள் போகலாம். 






ஆரம்ப காலங்களீல் அதாவது என் தொடக்கப் பள்ளி நாட்களில் எனக்கு பிடிக்காத ஒன்று என்றால் அது கிரிக்கெட் தான். ஏனென்றால் என் அப்பா எப்போது வீட்டுக்கு வந்தாலும் கிரிக்கெட் வைத்துப் பார்ப்பார். அப்போது அழுது அடம்பிடித்து மாற்றச் செய்துவிடுவேன்.ஆனால் நாங்கள் காரைக்குடியிலிருந்து எங்கள் சொந்த ஊருக்கு வரும் வரைதான். எப்போது நான்காம் வகுப்பில் அடியெடுத்து வைத்தேனோ அப்போதிலிருந்து கிரிக்கெட் ஆர்வத்தை ஏற்படுத்தத் தொடங்கி விட்டார்கள் என் புது கிராமத்து நண்பர்கள். 


பழைய பள்ளி போல வீட்டுப்பாடங்கள் கொடுக்காத தமிழ் மீடிய அரசுப்பள்ளி. கேட்கவா வேண்டும் ! கிரிக்கெட் குறித்தான என் சந்தேகங்களை கேள்விகளாக கேட்டுக் கேட்டு தெரிந்து கொண்டேன். அறிமுகமான கிரிக்கெட் வெகு சீக்கிரம் என்னை ஆக்கிரமிக்கவும் தொடங்கியது.இப்போது நானும் என் அப்பாவும் சேர்ந்து கிரிக்கெட் பார்த்து அம்மாவைக் கத்தவிடுவது வழக்கமாகிவிட்டது.



எனக்கு கிரிக்கெட் அறிமுகமானதை சொல்லத்தெரிவது போல ராகுல் டிராவிட் அறிமுகமானதை சொல்லத்தெரியவில்லை.ஆனால் வளர வளர அவருக்கு அடிமையாகிப் போனேன்.ஆனால் அவர் விக்கெட் கீப்பிங்க் பார்த்த பிறகுதான் எனக்கு அறிமுகமானர் என அடித்துக் கூறுவேன்.


அழகான தேகம்,கண்ணில் கூலிங் கிளாஸ், வெண்சாயம்,பீல்டிங்க் நிறுத்தும் ஸ்டைல், சற்று பந்தா ( சீன் ) என அவருடைய விக்கெட் கீப்பிங்க் எனக்கு பிடித்திருந்தது. ( அவர் நல்ல விக்கெட் கீப்பர் என்று இன்றும் நண்பர்களுடன் வாதாடுவேன். ஏனென்றால் அவர் ப்ரொபொசனல் கீப்பர் இல்லை தானே)அதனால் தானோ அவர் கட்டைபோட்டு கழுத்தருக்கும் போது என் நண்பர்கள் திட்டினாலும் என்னால் திட்ட முடியவில்லை.இன்னொன்று சச்சின் ! எல்லோருக்கும் சச்சின் பிடித்திருந்ததால் எனக்கு அவர் மீது பார்வை திரும்பவில்லை. ( வித்தியாசமானவனாக்கும் ) 


நீங்கள் நம்பக் கூட மாட்டீர்கள். நான்காம் வகுப்பிலேயே பவுலிங்க் போட்டு LBW  வைத்து, புல் சைட் ரன் வைத்து விளையாடியவர்கள் நாங்கள் ?.இன்றைக்கு ஒரு நான்காம் வகுப்பு படிக்கும் பையனிடம் LBW என்றால் என்ன எனக்கேட்டால் அவனுக்கு சொல்லத்தெரிவது கடினம் தான். ஆனால் நாங்கள் சரியாக சொல்லிவிடுவோம் அப்போதே ! இப்போது நினைத்துப்பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.



அப்போது ராகுல் டிராவிட்டை விட கிரிக்கெட்டின் தாக்கம் என் மீது அதிகமாக இருந்தது.பள்ளியில் கிரிக்கெட்,வீட்டிற்கு போனவுடன் வயல் வெளிகளில் கிரிக்கெட், டீவியில் கிரிக்கெட் என எங்கள் அன்றைய கிராமத்து வாழ்வில் திரும்பிய திசையெங்கும் கிரிக்கெட் மயம்.இப்படியே எங்கள் நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு ஓடிவிட்டது.


ஆறாவது படிக்க அருகில் இருந்த அரசு உயர் நிலைப்பள்ளிக்கு சென்றோம்.அங்கே சேர்ந்த பின் பள்ளியில் கிரிக்கெட் இல்லாமல் போனது. ( மதிய இடைவேளை 30 நிமிடம் மட்டுமே ). அதற்குப் பதிலாக எங்கள் பேச்சில் கிரிக்கெட் ஒட்டிக் கொண்டு விட்டது. ஒரு மேட்ச் நடந்தால் அதைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக அலசிவிடுவோம். ( ஆமா பெரிய ரவி சாஸ்திரின்னு நெனப்பு, நெனப்புத்தான் பொழப்ப கெடுக்கும் )



அந்த சமயத்தில் தான் உலகக் கோப்பை வந்தது ( 2007 ). கரீபிய மண்ணில் நடைபெற்றது. எங்களுடைய முதல் உலகக்கோப்பை.அதிலும் நான் ரசித்த ராகுல் டிராவிட் தான் கேப்டன் . அந்த உலகக் கோப்பை வரை டிராவிடின் ரசிகனாக இருந்தேன், அதன் பின்னர் தான் வெறியனாக மாறினேன். 


ஏன் ???

தொடரும்...



5 comments:

  1. நான்காம் வகுப்பிலேயே எல்.பி டபிள்யூ வைத்து விளையாடினீர்களா? பெரிய ஆளுங்கதான்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா ! :) :):) :)விரைவான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா ! தொடர்ந்து வருகை தர வேண்டும் !

      Delete
  2. நல்ல தான் விலாயாடிருக்கீங்க:)) நான் பதிவைசொன்னேன் :)
    தொடருங்கள் சகோ!! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. விரைவான வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ !! தொடருவேன் சகோ ! கிரிக்கெட் விளையாடவும் தெரியும், டீடெயிலா அடுத்த பதிவில் !!

      Delete
  3. அனுபவம் பேசும் அளவு வயதாகிவிட்டதா என்ன ? சும்மா வெளாட்டுக்கு சொன்னேன் ! தொடர்ந்து எழுது ! நன்றாகத் தான் இருக்கிறது. ஆமாம், உன்னோட பதிவ நம்ம வலைப்பக்கத்தில போட சொன்னதே நீ தான், ஆனா அதுக்கு நன்றி சொல்லி கமெண்ட் வேறயா , ம்ம் கலக்கு ....

    ReplyDelete