Thursday, June 19, 2014

தமிழ் மெல்ல இனி சாகும்......


தமிழ் மெல்ல இனி சாகும்......


சரியாகத்தான் க‌ணித்துள்ளான் பாட்டுப் புலவன் பாரதி. ஆம் தமிழ் மெல்ல அல்ல வேகமாகவே செத்துக்கொண்டு வருகிறது. வடமொழிக்கலப்பிலிருந்த நம் தாய்மொழியை காப்பாற்றிக்கொடுத்துச் சென்ற தமிழறிஞர்கள் திரும்பிவந்து எங்கே எங்களுடைய தனித்தமிழ் என்று கேட்டால் நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்? தாய் மொழி எழுதப்படிக்கத் தெரியாத ஆங்கிலேயரையும், ஜெர்மானியரையும், போர்ச்சுக்கீசியரையும், சீனர்களையும் உங்களால் காட்ட முடியுமா? ஆனால் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத பச்சைத் தமிழர்களை என்னால் காட்டமுடியும் !! எவ்வளவு வேதனையான உண்மை இது தெரியுமா.... 


ஒருவன் எப்பேற்பட்ட அறிஞனாகவும், கலைஞனாகவும், பன்மொழிப்புலவனாகவும் இருந்தாலும் ஏதாவது ஒரு விசயத்தைப்பற்றி சிந்திக்கும் போது தாய் மொழியில் மட்டும் தான் சிந்திக்க இயலும். இது உளவியல்பூர்வமான உண்மை. அப்படி சிந்திப்பதால் தான் சீனரும், ஜப்பானியரும் ,ரஸ்யர்களும் அமெரிக்காவிற்கு போட்டியாக உள்ளன.




உங்களுக்கெல்லாம் ஒன்று தெரியுமா ? அமெரிக்காவில் ஐ போன் வெளியான மறு நாளே அதே தொழில்னுட்பத்துடன் அந்த விலையைவிட 10 மடங்கு குறைவான விலையில் சைனாவில் வெளிவந்துவிடும். இதற்குக் காரணம் அவர்களின் சிந்திக்கும் ஆற்றல். ஆனால் இங்கே நமது இந்தியாவில் ம்கூம், முடியவே முடியாது. அப்படியானால் இந்தியர்களின் சிந்திக்கும் ஆற்றல் குறைவானதா? இல்லவே இல்லை, மொழி !! மொழி ஒன்றுதான் காரணம்.



கடந்த இருபது வருடத்தில் தமிழகத்திலிருந்து கண்டறியப்பட்டு வெளியான உற்பத்திப் பொருட்கள் ஒன்றையாவது உங்களால் காட்டமுடியுமா கிரைண்டரைத்தவிர?? முடியாது! ஏனெனில் நாம் தான் ஆங்கிலத்தை மொத்த குத்தகைக்கு வாங்கிவிட்டோமே, பிறகெப்படி முடியும்...... இந்தியாவில் வேறு எந்த மானிலத்திலாவது தாய் மொழியையே படிக்காமல்  ஆராய்ச்சிப் பட்டம் பெறமுடியுமா? ஆனால் தமிழ்நாட்டில் முடியும் !!!

வருடத்திற்கு 3 லட்சம் ஐடி இஞ்சினியர் வெளியே வரும் தமிழ்நாட்டில் கோவை 
சென்னையைத்தவிர ஐடி நகரங்களைக்காட்ட முடியுமா? ஆங்கிலம் ஒரு மொழியாகப் பார்க்கப்பட்ட காலம் போய், அது ஒரு கௌரவமாகப் பார்க்கப்படும் காலம் வந்துவிட்டது. நான்கு பேர் மத்தியில் தமிழில் பேசினால் அவமானமாகப் பார்க்கப்படும் காலம் வந்துவிட்டது.  ஏன் ஆங்கிலத்தை எந்த இடத்திலும் காணமுடியாத சீனாவும் ,ஜப்பானும்,ரஸ்யாவும், பிராண்ஸும் ,போர்ச்சுக்கல்லும்,ஜெர்மனியும் இன்று உலக வல்லரசுகளாகத் திகழவில்லையா? வளர்சி என்பது மொழியில் கிடையாது, மக்களிடம் தான் உள்ளது.

சரி இனிமேல் ஆங்கிலம் இல்லாமல் இந்தியாவில் முடியாது, அதற்காக தாய் மொழியை அப்படியே விட்டுவிடலாமா? பேருந்தில் பயணச்சீட்டு தாருங்கள் என்று கேட்பது எவ்வளவு அந்நியமாகத் தெரிகிறதோ, அதேபோல் நாளை இங்கே வா, உன் பெயர் என்ன? என்பன போன்ற சாதாரண வாக்கியங்கள் கூட அந்நியமாகத் தெரியாது என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது.?? இன்று தமிழ் நீடித்திருக்க ஓரளவு காரணம் அச்சில் இருப்பதால் தான். அதிலும் சில பத்திரிக்கைகளில் ஒற்றுப்பிழை, வார்த்தைப்பிழை, ஆங்கிலக் கலப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.



ஐக்கிய மொழி ஆய்வு நிறுவனம் இன்னும் 100 வருடங்களில் அழிந்துவிடும் மொழிகள் குறித்த ஆய்வில் தமிழ் மொழியும் முதலில் இடம்பெற்றதும், பின்னர் சில பல அரசியல் காரணங்களால் நீக்கப் பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படியே போனால் தமிழ் மொழியும் நம் பண்பாடு கலாச்சாரம் போல புத்தகங்களிலும், ஓலைகளிலும் இன்னும் சொல்லப் போனால் அருங்காட்சியகங்களிலும் மட்டும் காணக்கூடிய அவல நிலை ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது.


அந்த நிலையைத் தடுக்க வேண்டும் என்றால், அது நம் கையில் தான் உள்ளது என்று பொய் சொல்லமாட்டேன்.னம் கையிலும் ஓரளவு உள்ளது. இருப்பினும் அது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது. எங்கே முதலமைச்சரே, பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் முக்கிய கூட்டங்களிலும் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார் ! என்று நீங்கள் நினைப்பதையும் உணர முடிகிறது. இருந்தாலும் அரசாங்கம் மனது வைக்காவிட்டால் தமிழ் மெல்ல இனி சாகும் எனும் காலம் போய், தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது என்ற காலம் வந்துவிடும். 



உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாமே!!!!!

உங்கள் சீலன்...

8 comments:

  1. Nice article Mr.Seelan

    ReplyDelete
  2. அர்த்தமுள்ள ஆதங்கந்தான் சகோதரரே!
    தமிழை அழிக்க வெளியிலிருந்து யாரும் வரவேண்டியதில்லை நாமே அதைச் செய்து விடுவோம் என்பதுதான் கொடுமை!
    அழிந்த மொழியை மீட்டுருவாக்கிப் பேச்சு மொழி யாக்கிவிட்ட அதே உலகத்தில் தான் தமிழினைத் தன் பிள்ளை பேசுவதைத் தரக்குறைவென நினைக்கும் தாழ்வு மனப்பான்மையுற்ற தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோரும் இருக்கிறார்கள் என்பது அதனிலும் கொடுமை.
    நல்ல பகிர்வு .
    நன்றி!

    ReplyDelete
  3. இந்த சீனமொழி விஷயத்தை நானும் சொல்லிய படியே இருப்பேன் சகோ. ஆனா அரசாங்கம் மனது வைக்காமல் மொழியை காப்பாற்ற முடியாது. நம் நாட்டில் ஜனநாயகம் என்ற பேரில் முதலாளித்துவம் தானே நடக்கிறது:( நல்ல சிந்தனை சகோ:)

    ReplyDelete
  4. தங்களின் ஆதங்கத்தை இப்பதிவு மூலம் உணரமுடிகிறது. இரண்டாயிரம் ஆண்டு கால மொழியின் பெருமையை மறந்து, தடம் மாறிச் செல்கிறோம்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரர்.
    தங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். பார்க்கவும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா ! அறிமுகம் செய்ததற்கும் வருகைக்கும் !!
      தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன்..

      Delete
  6. யானறிந்தவரையிதுகாலுமெங்கிலுமெவரும் தாய்மொழியினிலக்கிய உருவை வாய்மொழியாகக் கொண்டதில்லை. அவ்வாறு ஒரு மொழியின் இலக்கிய இலக்கண உருவைத்தான் அன்றாட வழக்கிலும் கையாள வேண்டுமெனின் ஒன்று அது நடப்பதற்கு வாய்ப்பில்லை. சாலமன் பாப்பையா அவர்கள் மேடையிலே பேசும் பேச்சு அவர்களது திறனைக் காட்டுகிறது. சொற்கட்டு, பொருட்சுவை இரண்டும் கலந்த .வாதங்கள் நிறைந்த அவர்தம் பேச்சு தொண்ணூறு விழுக்காடு தமிழே. அவரை வழக்கு மொழி துறந்து இலக்கணத் தமிழே பேசுமாறு பணித்தால் எப்படி இருக்கலாம் ? எண்ணிப்பாருங்கள்.

    ஒரு மொழி, உரு அழிவதற்குக் காரணமே அதை இலக்கண வல்லுனர்கள் கட்டிப்போடுவது தான் என மொழி சார் இயல் .கூறுகிறது. லத்தீன சம்ஸ்க்ருத மொழிகள் வழக்கு மொழிகளாக இன்று இல்லை என்பதற்கு ஒரு காரணம் இதுவும் தான்.

    94 ல், சென்னை வந்து சேர்ந்தபோது, இங்கு பேசப்படும் தமிழ் என்னால் தஞ்சை, திருச்சியைச் சேர்ந்த என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.

    இன்னாயா பேசிக்கினே கீரே விசயம் இன்னா பட்டுன்னு உடச்சு போடு என்று எனது பேராசிரியர் நண்பர் ஒரு குழுக்கூட்டத்தில் சொன்னபோது ,
    நான் திடுக்கிட்டு போனதும் 95ல் நடந்தது.

    இரண்டு திங்களுக்கு முன்பே அம்பாள் அடியாள் அவர்கள் அயல் நாட்டிலிருந்து தூய தமிழில் பேசியபோது புல்லரிக்கச் செய்தது
    அதுவும் உண்மை.


    இத்தனையும் சொன்னாலும் நீங்கள் சொல்வதில் உங்கள் ஆதங்கம்
    புரியாமல் இல்லை. ஆயினும் பல வகுப்புகளில் யான் தூய தமிழில்
    பேசிடும் காலையில் மாணவர் கவனம் சிதறிப் போனதும் உண்டு.

    லட்சியம் ஒன்று. சாத்தியம் இன்னொன்று.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  7. 'சரியாகத்தான் க‌ணித்துள்ளான் பாட்டுப் புலவன் பாரதி. ஆம் தமிழ் மெல்ல அல்ல வேகமாகவே செத்துக்கொண்டு வருகிறது" - இது தவறு நண்பா, இது பாரதியின் கருத்தன்று. பாரதியின் பாடலைப் பார்க்க -
    “மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
    ........மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
    என்றந்தப் பேதை உரைத்தான், -ஆ!
    .......இந்தவசையெனக் கெய்திடலாமோ?
    சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
    .......செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்”இவே பாரதிபாடல்
    எனினும் நாம் கவலைப்பட வேண்டிய செய்திகளைத்தான் தொகுத்திருக்கிறீர்கள்.. யுனெஸ்கோ அல்ல, வேறெந்தக் கொம்பன் அமைப்புச் சொன்னாலும் தமிழ் இன்னும் பலநூறாண்டுகள் வாழும். அதன் அடித்தளம்-மரபுச் செழுமை அப்படி. ஆனாலும் நம் அலட்சியம் எல்லை மீறித்தான் போய்க்கொண்டிருக்கிறது.. தேவையே மாற்றங்களின் தாய்.. தேவையிருக்க, மாற்றங்கள் நிகழும்.
    எனினும் “தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்“. நாம் மாற்றுவோம்.. மாறும் உலகில் மாற்றங்கள் தேவையென்பதை உணர்ந்து மாற்றும் முயற்சியில் இந்தக் கட்டுரையும சேரும்.

    ReplyDelete