Saturday, August 2, 2014

ஆட்சி மாறியது ! ஆனால் காட்சி மாறவில்லை !


ஆட்சி மாறியது ! ஆனால் காட்சி மாறவில்லை !


இந்த புது மொழி யாருக்குப் பொருந்துகிறதோ இன்றைய நரேந்திர மோடி அரசுக்கு மிகவும் பொருந்தும்.சரி ஆட்சிக்கு வந்து 2 மாதங்களுக்குள்ளாகவே ஒரு அரசைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம் என பார்த்தால், 2 மாதமல்ல இரண்டு வருடங்களானாலும் மாறாது என்பது தெரிந்துவிட்டது.இனி எப்போது விமர்சித்தால் என்ன ? ஆபத்பாண்டவனாக நினைத்து வாக்களித்த மக்கள் இன்று ஆபத்து வராமல் பார்த்துக் கொள்ள பழகி விட்டதைப் போன்று தெரிகிறது. 
முந்தைய காங்கிரஸ் அரசிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறது இன்றைய மோடி அரசு. எதிலும் இல்லை. ஒன்றைத்தவிர ! சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு தடை விதித்தது மட்டும் தான். ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே ரயில் கட்டணத்தை உயர்த்தியது, வாரமிருமுறை பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்துவது, இலங்கை கடற்படையினரை கண்டு கொள்ளாமல் இருப்பது என சத்தமில்லாமல் பல சாதனைகளையும் புரிந்து வருகிறது. பட்ஜெட்டில் உண்மையிலேயே வரவேற்கக் கூடிய அம்சங்கள் பல இருந்தாலும் மேற் குறிப்பிட்ட சாதனைகள் அதை மறைத்துவிடுகின்றன.

சென்ற ஆட்சியில் இலங்கை கடற்படையால் தமிழ் மீனவர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு வருகை புரிந்த இன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி.சுஸ்மா அம்மையார் இனி அவர்கள் தமிழ் மீனவர்கள் அல்ல , இந்திய மீனவர்கள் என்று வீரவசனம் பேசினார்கள். இன்று வாரா வாரம் கடற்படையால் தமிழக மீனவர்கள் மன்னிக்கவும் , இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் போது எங்கே போகிறார் எனத் தெரியவில்லை. நிரந்தர தீர்வு வேண்டும் என கடந்த ஆட்சியில் கேட்டுக்கொண்ட அவர்கள் தங்களுடைய ஆட்சியில் நிரந்தர தீர்வு ஏற்பட என்ன செய்தார்கள் ? அல்லது குறைந்தபட்சம் என்ன முயற்சி எடுத்தார்கள் ? கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ் அரசாங்கம் என்றால், அங்கே கொடுக்கப்பட்டு வரும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் பறிக்கிறது இன்றைய மோடி அரசாங்கம். கச்சத்தீவு குறித்து ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு நிலைப்பாடு , ஆட்சிக்கு வந்த பின்னர்  ஒரு நிலைப்பாடு என காங்கிரஸ் அடிவருடிகள் போலவே தமிழகத்திற்கு  துரோகம் புரிகிறது இன்றைய ஆளும் பா.ஜ.க.. இதற்கு பேசாமல் காங்கிரஸே ஆட்சிக்கு வந்திருக்கலாமே என இப்போது எண்ணுகின்றனர் தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்கள். யாரது அங்கே கூட்டணி இன்னும் இருக்கிறதா எனக் கேட்பது ?தமிழக தலைவர்கள் பலரின் வேண்டுகோளினையும் மதிக்காமல் நரகாசுரன் ராஜபக்சேவை அழைத்தவர் இந்த மோடி என்பதையும் மறந்து விட வேண்டாம் ?


விஜயகாந்த் கூட்டணியில் இருக்கிறாரா என்றே தெரியவில்லை ? மருத்துவர் இருக்கிறார் என்று நினைக்கிறேன். நம்ம வைகோ அண்ணன் மட்டும் இன்னும் கூட்டணியை விட்டுக் கொடுக்காமல் திரிகிறார். பார்க்கத்தானே போகிறோம் இன்னும் 3 மாசமா இல்ல மூணு வாரமான்னு!!!!மொத்தத்தில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரைகூட தாங்காது இந்த கூட்டணி. வழக்கம் போல் பலிகடா ஆகப் போவது நம்ம கேப்டன் தான். 


கூட்டி கழித்து பெருக்கி வகுத்து தப்புக் கணக்கை சரியாகப் போடும் திறமையை நமது புரட்சிக் கலைஞர் ஓவராக வளர்த்துக் கொண்டு வருகிறார். எங்கே சென்று முடியப் போகிறதோ தெரியவில்லை? அண்ணியாருக்கே வெளிச்சம் !!! :)


எல்லையிலே அத்துமீறும் பாக்கிஸ்தானை திருப்பித் தாக்க வேண்டாம், ஒரு கண்டன அறிக்கை கூடவா விடுக்க முடியாது. நாடு விட்டு நாடு பறந்தும் இந்தியை மறக்க மனமில்லாத மோடி, இந்தியாவில் மட்டும் எப்படி மறப்பார். இந்தித் திணிப்பையும் செய்தாயிற்று. இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் இந்தியை திணிக்க வேண்டுமென்று வாய்மொழி உத்தரவு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.செம்மொழித் தமிழகத்தில் சமஸ்கிருத வாரம். இல்லாத மொழியை ஊட்டி வளர்க்க ஆசைப்படும் மோடி சர்க்கார், இருக்கின்ற மொழியையும் அழ வைத்துவிடும் போலிருக்கிறது. 


ராஜீவ் கொலைக் குற்றவாளீகளுக்கு வழங்கப்பட்ட தண்டணையை எதிர்த்து அப்பீல் செய்தது முந்தைய காங்கிரஸ் அரசு. அதனை ஆதரித்து வாதாட‌ அரசு வழக்கறிஞரை நியமித்திருப்பது மோடி அரசு. பெரிய வித்தியாசங்களில்லை.இவைதான் ஆட்சி முழுமைக்கும் தொடருமோ எனும் அச்சம் யாருக்கு எழுகிறதோ இல்லையோ தமிழர்களுக்கு கண்டிப்பாக எழுந்துவிட்டது.ரயில்வே பட்ஜெட்டை பார்க்கும் எந்த ஒரு தமிழனும் குறிப்பாக, மோடிக்கு ஓட்டுப்போட்ட தமிழனும் எவ்வளவு மகிழ்சியாக இருப்பார்கள் இருக்கப் போகிறார்கள் எனத் தெரிந்து கொள்ளலாம்.எந்த ஒரு ஆட்சியிலும்  தமிழகம் ஒருபோதும் இப்படி வஞ்சிக்கப்பட்டதில்லை. தென் தமிழக எல்லைக்குள் ஒரு ஈ காகம் கூட எட்டிப்பார்க்கவில்லை. இத்தனைக்கும் பொன்னாரின் ஊருக்கு கூட ஒரு ரயில் விடவில்லை.நான் எதிர்பார்த்தது போலத் தான்  நடந்துவருகிறது. வெளியுறவுக் கொள்கையிலும், பொருளாதாரக் கொள்கையிலும் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் ஏன் மோடியும் கூட ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் என்பது நூற்றுக்கு நூறு உண்மையாகிவிட்டது.ஆனால் இதில் அதிகம் வஞ்சிக்கப்படப் போவது தமிழகமா என்பது இன்னும் கொஞ்ச காலத்தில் தெரிந்துவிடும்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து இன்றுவரை நாட்டு மக்களுக்காக ஏதாவதொரு நன்மை பயக்கும் திட்டத்தினை மோடி அறிவித்திருக்கிறாரா எனப் பார்க்கும் போது, மன்மோகன் சிங்காவது பொம்மை பிரதமராக இருந்தார். எங்கே  ந‌ம் மோடி பிரதமர் பொம்மையாகவே இருந்துவிடுவாறோ என அஞ்சத் தோன்றுகிறது.


என்ன தான் மோடி மீது விமர்சனங்களை வைத்தாலும் , அவர் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்தபோது,அவர் பேச்சுகளைப் பார்த்து இவர் அடுத்த வாஜ்பாய் போல் இருந்து விட மாட்டாரா என உள்ளுக்குள் ஆசைப்பட்டேன் ! ஆனால் இவர் அடுத்த வாஜ்பாய் இல்லை அதே மோடியாகத்தான் இருப்பார் என இப்போது தெரிந்துவிட்டது. ஆட்சிக்கு வந்து 2 மாதங்கள் தான் ஆகிறது. எனவே பொறுத்திருந்து பார்ப்போம், ஆப் கி பார் மோடி சர்க்காரை.............


மாற்றம் ஒன்று தானே மாறாதது ???????உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் !!


                                                                           உங்கள் சீலன் !

2 comments:

  1. nice post mr seelan , keep it up , modi waste

    ReplyDelete
  2. இது தெரிஞ்சது தான சகோ! அதனால் தானே நிலவன் அண்ணா போன்றோர் கடைசிவரை மோடி வரகூடாதுன்னு போராடினாங்களே:(
    தமிழக மக்கள் செம கெட்டி! மத்த மாநிலத்தில் தான் ஏமாந்துட்டாங்க.

    ReplyDelete