Monday, July 7, 2014

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்


அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் 



இந்தப் பதிவின் மூலம் யார் மனதையும் புண்படுத்துவடு என் நோக்கமல்ல. உண்மைகள் சில நேரங்களில் புண்படுத்தலாம். அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.


சனிக்கிழமை நடந்த விஜய் விருது வழங்கும் விழாவில் பேசிய அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் தேவையில்லை, தளபதி பட்டமே போதும் என்று சொல்லியிருக்கிறார். அத்டோடு நிற்காமல் வாங்கும் கிரீடம் எவ்வளவு கணமாக இருந்தாலும் தலை கணமாக இருக்கக் கூடாதாம். அடேங்கப்பா இத குமுதம் பட்டம் குடுக்கும் போதே சொல்லீருந்தா நீங்க எங்கேயோ போயிருப்பீங்க.


சரி விசயத்திற்கு வருவோம். இப்போது படவுலகில் மிகப்பெரிய டாக் அடுத்த சூப்பர் ஸ்டார் பற்றித்தான். குமுதம் கொளுத்திப்போட்ட சீனி வெடி இன்று சரவெடியாக பற்றி எறிகிறது கோடம்பாக்கத்தில். முதலில் இந்த சர்வேயை மேற்கொண்டதே தவறு. எங்கே அடுத்த சூப்பர் ஸ்டார் போல அடுத்த புரட்சித் தலைவர், அடுத்த நடிகர் திலகம் , அடுத்த மக்கள் திலகம் போன்ற சர்வேக்களை நடத்துங்கள் பார்க்கலாம். முடியவே முடியாது . காரணம் பயம், அந்த பயம் ரஜினியிடம் அவர்களுக்கு இல்லை. இவர் ஒன்றும் சொல்ல மாட்டார், இவர் ரசிகர்களும் கொஞ்ச நாள் கத்திவிட்டு அடங்கி விடுவார்கள் என்ற எண்ணம்.


பட்டங்கள் போட்டுக்கொள்வது என்பது தமிழ் சினிமாவில் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. முதலில் மக்களாக தந்ததும், பின் பட அதிபர்கள் தந்து மக்கள் ஏற்றுக் கொண்டதும், பிறகு பட அதிபர்கள் மட்டுமே தந்ததும், இப்போது நடிகர்களே போட்டுக் கொள்வதுமென பட்டம் என்பது இன்றியமையாததாகிவிட்டது. கலைவாணர், மக்கள் திலகம், நடிகர் திலகம் போன்றவை மக்கள் தந்த பட்டங்கள். சூப்பர் ஸ்டார் பட்டம் பட அதிபர் தந்து மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டம். காதல் மன்னன், உலக நாயகன் , இளைய தளபதி, அல்டிமேட் ஸ்டார் போண்றவை பட அதிபர்கள் தந்த பட்டங்கள். வேறு வழி இல்லாமல் மக்களிடம் திணிக்கப்பட்டது. புரட்சிக் கலைஞர், புரட்சித் தமிழன், சின்னத் தளபதி போன்றவை அவர்களாகவே போட்டுக்கொண்டது. பட்டங்களே போடாமல் ஜெயித்தவர்களும் இருக்கின்றனர்.



இதில் எல்லாம் பிரச்சனை இல்லை. இங்கு அடுத்த எனும் பதம் தான் பிரச்சனை. ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு பட்டம் உச்சமாக விளங்கியிருக்கிறது. பட்டம் அல்ல பட்டத்துக்குரியவர்களால் பட்டம் உச்சமாக விளங்கி வருகிறது. 1955 முதல் 1975 கள் வரை மக்கள்திலகம் என்ற பட்டம் புரட்சித்தலைவர் எனும் நடிகரால் உச்ச அந்தஸ்தில் இருந்தது. 1975 முதல்
1979 முடிய நடிகர் திலகம் எனும் பட்டம் அதற்குரிய நடிகராலும், அதற்குப்பிறகு முதல் இன்று வரை சூப்பர் ஸ்டார் எனும் பட்டம் அதற்குரிய நடிகரால் உச்சத்தில் உள்ளது.




இந்த அடிப்படைகள் கூட புரியாத அல்லது புரியாமல் நடிக்கும் ஒரு நன்கறியப்பட்ட ஊடகம் வேண்டுமென்றே , ஒரு புயலைக் கிளப்பி தன் விற்பனையை உயர்த்த திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனும் பட்டம். சரி எந்த விதத்தில் விஜய் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றது. அதற்கும் காரணம் இருக்கிறது. அஜீத்துக்கு கொடுத்தால் அவர் எப்போதுமே ஒரே சூப்பர் ஸ்டார் என் தலைவர் தான் என்று கூறிவிட்டு வாங்காமல் ஒதுங்கி விடுவார். பின் பத்திரிக்கைக்கு அவமானமாகிவிடும். இருக்கவே இருக்கார் நம்ம விஜய் என அவருக்கு தந்துவிட்டார்கள். இது தான் உண்மை.


சரி கொடுத்துவிட்டார்கள். அதற்கு எந்த வகையில் தகுதியானவர் விஜய் ?


1975 ல் சினிமாவில் அறிமுகமான ரஜினி சிகரட்டை தூக்கிப் போட்டு பிடிப்பதினாலும், முடியை ஸ்டைலாக கோதுவதினாலும், பஞ்ச் வசனங்கள் பேசுவதினாலும் மட்டும் சூப்பர் ஸ்டாராகிவிடவில்லை.எல்லாம் கடின உழைப்பு ! தன்னம்பிக்கை ! விடா முயற்சி ! ஜெயிக்க வேண்டும் என்ற வெறி ! எல்லாவற்றுக்கும் மேல் , மக்கள் செல்வாக்கு !

இவற்றில் ஒன்றாவது விஜய்க்கு இருக்கிறதா ? ரஜினியுடன் ஒப்பிட எந்த வகையிலாவது தகுதி உடையவரா ?

சூப்பர் ஸ்டார் இதுவரை 27 வெள்ளிவிழா திரைப்படங்கள் தந்தவர். அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறிக்கொள்பவர் 7 வெள்ளி விழாபடமாவது தந்திருக்கிறாரா ?

சரி இப்போது படங்கள் ஓடும் நாட்களில் வெற்றி இல்லை. கலெக்ஸனில் தான் உள்ளது என்று வைத்துக் கொள்வோம். எத்தனை படங்களில் கலெக்ஸனை அள்ளி எடுத்து தயாரிப்பாளருக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஒரு வெற்றி என்றால் ஒன்பது தோல்வி !

எத்தனை  தயாரிப்பாளர்கள் விஜயை நம்பி நூறு கோடி பட்ஜெட்டில் படமெடுக்க தயாராக இருக்கின்றனர் !

ரஜினி நடித்த முள்ளும் மலரும் போன்ற ஒரு திரைப்படம், திரைப்படம் கூட வேண்டாம் ஒரு சீனிலாவது நடிக்க முடியுமா ?

ரஜினியால் நான் நஸ்டமடைந்தேன் என ஒரு தயாரிப்பாளராவது சொல்லியிருக்கிறார்களா ?


இந்தியாவைத் தாண்டி விஜய்க்கு என வெளிநாட்டில் ஒரு மார்க்கெட் இருக்கிறதா ?


விஜய் தொண்ணூறுகளில் அறிமுகமானார். 1990ல் வெளியான அண்ணாமலை படத்தின் ரெக்கார்டுகளை எஜமான் முந்தியது. எஜமானை வீரா முந்தியது. வீராவை பாட்ஸா முந்தியது. பாட்ஸாவை முத்துவும் முத்துவை அருணாசலமும், அதை படையப்பாவும் , படையப்பாவை சந்திரமுகியும், சந்திரமுகியை சிவாஜியும் , சிவாஜியை எந்திரனும் முந்திவருகிறது. எந்திரனை கோச்சடையானால் கூட முந்தமுடியவில்லை. அதற்கு அடுத்த இடம் தான். 90களில் மட்டுமல்ல, அவர் உச்ச நட்சத்திரமானதிலிருந்தே இது தான் நடந்து வருகிறது .

இதில் எங்காவது விஜய் படங்கள் ரஜினி படங்களின் வசூலில் பாதியை தொட்டிருக்கிறதா ?

இல்லை வேறு நடிகர்கள் படங்கள் தான் சாதித்து இருக்கின்றனவா?

மேற்கண்டவற்றுள் எதுவுமே இல்லை ! ஆனால் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அலப்பறை வேறு ?






சரி இன்று ரஜினியை எதிர்க்கும் எதிர்ப்பது போல நடிக்கும் விஜய் ஆரம்ப காலங்களிலிருந்து இப்படித்தானா ? என்றால் இல்லை !

இளைய தளபதி என்ற பட்டமே இதற்குச் சான்று. ஒவ்வொரு படங்களிலும் தலைவர் ரசிகன், ஒவ்வொரு விழாக்களிலும் தலைவர் புராணம், ஒவ்வொரு பேட்டியிலும் தலைவர் புகழ் என மிகத்தீவிர ரஜினி ரசிகராகவே இருந்தார். இடையில் என்ன மாயமோ ?அண்ணாமலை தம்பி இங்கு ஆட வந்தேண்டா என்று பாடியவர் புரட்சித்தலைவர் ரசிகராகிவிட்டார். இல்லை ரசிகராக மாற்றப்பட்டார். அவர் மனதளவில் இன்றும் ரஜினி ரசிகர் தான் என்பதற்கு 2010ல் நடந்த இயக்குனர் சங்க விழா சாட்சி.

நேற்று சங்கர் இயக்கிய படங்களிலேயே இந்தியன் படம் தான் அவருக்குப் பிடித்த திரைப்படமாம். இதை சிவாஜி வெளியான போது மறந்துவிட்டார். ஏனென்றால் அப்போது சங்கர் இந்தியன் படம் எடுத்திருக்கவில்லை !! அவருக்கு எந்தப் படம் வேண்டுமானாலும் பிடித்துவிட்டு போகட்டும். எந்த நடிகரையும் பிடித்துவிட்டு போகட்டும் எதற்காக சூப்பர் ஸ்டாரை வைத்து வியாபாரம் பார்க்க துடிக்கிறார் ?

மக்கள் விரும்பும் நாயகனாகிவிட்டால், அடுத்த தலைமுறையில் இவர் பட்டமே உச்ச நட்சத்திரமாகிவிடப்போகிறது. அதை விடுத்து இப்போது செய்யும் நடவடிக்கையில் மக்களிடம் பெயர்தான் கெடுகிறது.


இந்த நேரத்தில் ஒரு அறிக்கை விடுத்திருக்கிறார் தல. என்றைக்குமே சூப்பர் ஸ்டார் தலைவர் மட்டும் தான். வீணாக சண்டை போட வேண்டாம் . அவர் துரோணாச்சாரியார் , நான் ஏகலைவனாக இருக்கவே ஆசைப்படுகிறேன். இவ்வாறு கூறிய தல எங்கே, அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் எங்கே !


அவர் விஜயைப் போல மாற மாட்டார். அன்றும் இன்றும் என்றும் தலைவர் ரசிகர் தான்.

இவ்வளவு ஏன் பட்டமே போட்டுக்கொள்ளாமல் 25 வெள்ளி விழா திரைப்படங்களை மோகன் கொடுக்கவில்லையா ? முரளி வெற்றிபெறவில்லையா ? இன்றும் தனுஸ் முதல் விஜய் சேதுபதிவரை எத்தனை பேர் இருக்கின்றனர் ?


அதெல்லாம் தெரியாது. அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தவுடனேயே பல்லை இளித்துக்கொண்டு வாங்கிவிட்டு அறிக்கை வெளியிட்டு புலகாங்கிதம் அடைய வேண்டியது.

தலைவர் எனும் நாமத்தை தலைவா எனும் திரைப்பட பெயரால் பறிக்க முயன்று தோற்ற கூட்டம், இன்று சூப்பர் ஸ்டாரை சூறையாட எண்ணுகிறது ! இவ்வுலகில் கடைசி ரஜினி ரசிகன் இருக்கும் வரை அது உங்களால் முடியாது. 

கூகுளிலும் சரி உலகிலும் சரி தலைவர் என்றால் அது இருவர் தான். ஒருவர் என் தேசியத்தலைவர் பிரபாகரன். இன்னொருவர் என் க‌லையுலக தலைவர் சூப்பர் ஸ்டார்.( வேண்டுமானால் சர்ச் செய்து பார்த்துக் கொள்ளுங்கள் ) 


உங்களுக்கெல்லாம் மறந்து போயிருக்கலாம். விடுதலை புலிகள் கடுப்பாட்டில் ஈழம் இருந்த போது தணிக்கை இல்லாமல் அங்கு வெளியாகும் திரைப்படங்கள் தலைவர் படங்கள் மட்டுமே !!!


இரண்டு நிகழ்சிகழை மட்டும் நினைவு கூற விரும்புகிறேன். 2007 சிவாஜி வெளியாகியிருந்த சமயம். திரைப்படமே பார்க்காத இந்நாள் முதல்வர் அன்றைய முன்னால் முதல்வர் அத்திரைப்படத்தை தோழியோடு அமர்ந்து பார்த்துவிட்டு படம் அருமை என பத்திரிக்கை பேட்டியளித்துவிட்டு செல்கிறார்.படம் வெற்றியடைகிறது. வெள்ளி விழாவில் முதல்வர் அமர்ந்திருக்கிற விழாவில் அவர் பெயரைச் சொல்லி பாராட்டியதற்கு நன்றி தெரிவித்து பேசியவர் தலைவர்.


அதேபோல 2013ல் எம்.எஸ்.வி பாராட்டு விழாவில் இன்றைய முதல்வர் விழாவில் என் ஆருயிர் நண்பர் என முன்னாள் முதல்வரின் பெயர் சொல்லி வாழ்த்தினார் எம் தலைவர்.



இப்படிப்பட்ட எம் தலைவர் எங்கே அடுத்த சூப்பர் ஸ்டார் எனச் சொல்லும் இவர் எங்கே !ஒன்று மட்டும் தான்,



இவ்வுலகிற்கு ஒரே சூரியன் ! அதுபோல‌

ஒரே சூப்பர் ஸ்டார் எம் தலைவன் மட்டுமே !

அடுத்த சூப்பர் ஸ்டார் எல்லாம் மின்னி மறையும் மின்மினிப் பூச்சிகள் !

மின்மினிப்பூச்சிகள் வெளிச்சம் தரலாம் .

 என்றைக்கும் சூரியனாகிவிட முடியாது.... 

புரிந்தவர்களுக்கு தெரியும் யார் சூப்பர் ஸ்டார், யார் தலைவர் என்றெல்லாம் !


வாசித்த கண்களுக்கு நன்றிகள் !

கருத்திடப் போகும் விரல்களுக்கும் நன்றிகள் !!



 நன்றிகளுடன் உங்கள் சீலன் !

Thursday, June 19, 2014

தமிழ் மெல்ல இனி சாகும்......


தமிழ் மெல்ல இனி சாகும்......


சரியாகத்தான் க‌ணித்துள்ளான் பாட்டுப் புலவன் பாரதி. ஆம் தமிழ் மெல்ல அல்ல வேகமாகவே செத்துக்கொண்டு வருகிறது. வடமொழிக்கலப்பிலிருந்த நம் தாய்மொழியை காப்பாற்றிக்கொடுத்துச் சென்ற தமிழறிஞர்கள் திரும்பிவந்து எங்கே எங்களுடைய தனித்தமிழ் என்று கேட்டால் நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம்? தாய் மொழி எழுதப்படிக்கத் தெரியாத ஆங்கிலேயரையும், ஜெர்மானியரையும், போர்ச்சுக்கீசியரையும், சீனர்களையும் உங்களால் காட்ட முடியுமா? ஆனால் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத பச்சைத் தமிழர்களை என்னால் காட்டமுடியும் !! எவ்வளவு வேதனையான உண்மை இது தெரியுமா.... 


ஒருவன் எப்பேற்பட்ட அறிஞனாகவும், கலைஞனாகவும், பன்மொழிப்புலவனாகவும் இருந்தாலும் ஏதாவது ஒரு விசயத்தைப்பற்றி சிந்திக்கும் போது தாய் மொழியில் மட்டும் தான் சிந்திக்க இயலும். இது உளவியல்பூர்வமான உண்மை. அப்படி சிந்திப்பதால் தான் சீனரும், ஜப்பானியரும் ,ரஸ்யர்களும் அமெரிக்காவிற்கு போட்டியாக உள்ளன.




உங்களுக்கெல்லாம் ஒன்று தெரியுமா ? அமெரிக்காவில் ஐ போன் வெளியான மறு நாளே அதே தொழில்னுட்பத்துடன் அந்த விலையைவிட 10 மடங்கு குறைவான விலையில் சைனாவில் வெளிவந்துவிடும். இதற்குக் காரணம் அவர்களின் சிந்திக்கும் ஆற்றல். ஆனால் இங்கே நமது இந்தியாவில் ம்கூம், முடியவே முடியாது. அப்படியானால் இந்தியர்களின் சிந்திக்கும் ஆற்றல் குறைவானதா? இல்லவே இல்லை, மொழி !! மொழி ஒன்றுதான் காரணம்.



கடந்த இருபது வருடத்தில் தமிழகத்திலிருந்து கண்டறியப்பட்டு வெளியான உற்பத்திப் பொருட்கள் ஒன்றையாவது உங்களால் காட்டமுடியுமா கிரைண்டரைத்தவிர?? முடியாது! ஏனெனில் நாம் தான் ஆங்கிலத்தை மொத்த குத்தகைக்கு வாங்கிவிட்டோமே, பிறகெப்படி முடியும்...... இந்தியாவில் வேறு எந்த மானிலத்திலாவது தாய் மொழியையே படிக்காமல்  ஆராய்ச்சிப் பட்டம் பெறமுடியுமா? ஆனால் தமிழ்நாட்டில் முடியும் !!!

வருடத்திற்கு 3 லட்சம் ஐடி இஞ்சினியர் வெளியே வரும் தமிழ்நாட்டில் கோவை 
சென்னையைத்தவிர ஐடி நகரங்களைக்காட்ட முடியுமா? ஆங்கிலம் ஒரு மொழியாகப் பார்க்கப்பட்ட காலம் போய், அது ஒரு கௌரவமாகப் பார்க்கப்படும் காலம் வந்துவிட்டது. நான்கு பேர் மத்தியில் தமிழில் பேசினால் அவமானமாகப் பார்க்கப்படும் காலம் வந்துவிட்டது.  ஏன் ஆங்கிலத்தை எந்த இடத்திலும் காணமுடியாத சீனாவும் ,ஜப்பானும்,ரஸ்யாவும், பிராண்ஸும் ,போர்ச்சுக்கல்லும்,ஜெர்மனியும் இன்று உலக வல்லரசுகளாகத் திகழவில்லையா? வளர்சி என்பது மொழியில் கிடையாது, மக்களிடம் தான் உள்ளது.

சரி இனிமேல் ஆங்கிலம் இல்லாமல் இந்தியாவில் முடியாது, அதற்காக தாய் மொழியை அப்படியே விட்டுவிடலாமா? பேருந்தில் பயணச்சீட்டு தாருங்கள் என்று கேட்பது எவ்வளவு அந்நியமாகத் தெரிகிறதோ, அதேபோல் நாளை இங்கே வா, உன் பெயர் என்ன? என்பன போன்ற சாதாரண வாக்கியங்கள் கூட அந்நியமாகத் தெரியாது என்பதில் என்ன நிச்சயம் இருக்கிறது.?? இன்று தமிழ் நீடித்திருக்க ஓரளவு காரணம் அச்சில் இருப்பதால் தான். அதிலும் சில பத்திரிக்கைகளில் ஒற்றுப்பிழை, வார்த்தைப்பிழை, ஆங்கிலக் கலப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.



ஐக்கிய மொழி ஆய்வு நிறுவனம் இன்னும் 100 வருடங்களில் அழிந்துவிடும் மொழிகள் குறித்த ஆய்வில் தமிழ் மொழியும் முதலில் இடம்பெற்றதும், பின்னர் சில பல அரசியல் காரணங்களால் நீக்கப் பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படியே போனால் தமிழ் மொழியும் நம் பண்பாடு கலாச்சாரம் போல புத்தகங்களிலும், ஓலைகளிலும் இன்னும் சொல்லப் போனால் அருங்காட்சியகங்களிலும் மட்டும் காணக்கூடிய அவல நிலை ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது.


அந்த நிலையைத் தடுக்க வேண்டும் என்றால், அது நம் கையில் தான் உள்ளது என்று பொய் சொல்லமாட்டேன்.னம் கையிலும் ஓரளவு உள்ளது. இருப்பினும் அது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் கையில் தான் உள்ளது. எங்கே முதலமைச்சரே, பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் முக்கிய கூட்டங்களிலும் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார் ! என்று நீங்கள் நினைப்பதையும் உணர முடிகிறது. இருந்தாலும் அரசாங்கம் மனது வைக்காவிட்டால் தமிழ் மெல்ல இனி சாகும் எனும் காலம் போய், தமிழ் செத்துக்கொண்டிருக்கிறது என்ற காலம் வந்துவிடும். 



உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாமே!!!!!

உங்கள் சீலன்...

Monday, June 16, 2014

நீயா நானாவும் என் கேள்விகளும் !!


 நீயா நானாவும் என் கேள்விகளும் !!




முன்குறிப்பு ;  நீண்ட நாட்களாக பதிவுலகிற்கு வரமுடியாமல் போய்விட்டது. காரணம் தேர்வுகளும் விடுமுறைகளும் தான். இனிமேல் எப்போதும் போல் வாரத்திற்கு மூன்று பதிவுகளாவது எழுதிவிட முயற்ச்சிக்கிறேன். 


நேற்றைய நீயா நானா விஜய் டிவி நிகழ்ச்சியில் மீண்டுமொருமுறை அழகான தலைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. கூட்டுக் குடும்பத்தை விரும்பும் தாய்மார்களையும் , தனிக்குடும்பம் தான் என்னுடைய தேர்வு என்ற இளம் பெண்களுக்குமான விவாதமாக அமைந்திருந்தது. வந்திருந்தவர்கள் அனைவருமே பெண்கள் தான். வழக்கம் போல கோபியின் தொகுப்பு நச் என்றிருந்தது.


தனிக்குடித்தனம் தான் என் தேர்வு என்ற பக்கம் இருந்த பெண்கள், கூட்டுக் குடும்பத்தை மிகவும் எதிர்த்தனர். கூட்டம், கும்பல், வடித்துக்க் கொட்டுதல் என்ற அளவிற்கு சென்று விட்டது. ஆனால் தாய்மார்கள் தரப்பில் ஒரே காரணம் தான். எங்கே பையனை நம்மிடமிருந்து பிரித்து அவர்களுடைய தாய் வீட்டோடு ஒட்டிவிடுவார்களோ என்பது மட்டும் தான். அதற்கு இளம்பெண்கள் அளித்த பதில் எனக்கு மிகவும் ஆச்சரியமானதாக இருந்தத

பெண்கள் அவர்களுடைய தாய் வீட்டை பிரிந்து வருவதை ஏற்றுக்கொள்ளும் இத்தமிழ்ச் சமூகம் , ஆண்கள் அவ்வாறு செய்வதை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்பது தான் அது. நியாயம் தானே?  , இது ஒரு ஆணாதிக்க தமிழ்ச்சமூகத்தினைத்தானே காட்டுவதாக உள்ளது, என்று கூட எண்ணத்தோன்றுகிறது. ஆம் ஆணாதிக்கமே தான்.

கடைசியில் கோபிநாத், ஒரு உணர்வுப்பூர்வமான கேள்வியாக," உங்கள் மகன் உங்களைப் பிரிந்து சென்றால் உங்கள் மனநிலை என்ன ?"என தாய்மார்களிடத்தில் வைத்த போது அவர்கள் உண்மையாகவே அழுதுவிட்டனர்.அதைப்பார்த்த நமக்கும் அதே மனநிலைதான். ஒரு பெண் கணவன் இல்லாமல் கூட காலத்தைக் கடத்திவிடலாம் ஆனால் மகன் இல்லாமல் முடியாது என்ற அளவிற்கு வருத்தப்பட்டுவிட்டனர். அதைப் பார்த்திருந்தால் நீங்களும் நானும் கூட வருத்தப்பட்டிருப்போம். ஏன் எதிரணி பெண்கள் கூட வருந்திவிட்டனர். 


அனால் இது நமது சமூகப்பண்பாட்டின் சிக்கலான உணர்வு முடிச்சு என்பதை சற்றே ஆழ்ந்து நோக்கினால் புரிந்து கொள்ளலாம். ஆம், காலம் காலமாக ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாட்டிலிருந்து வெளிவர முடியாத ஒரு சூழலை நமது சமூக அமைப்பு ஏற்படுத்திவிட்டது என்று தான் கூறவேண்டும். இதை வைத்துப் பாருங்கள், அப்படியானால் பெண்பிள்ளைகள் பெற்றவர்களின் எதிர்காலம் ? தங்களது முயற்சியினால் எல்லாவற்றையும் தனது மகளுக்காகச் செய்துவிட்டு, எவ்வித பிரதி பலனையும் எதிர்பார்க்கக்கூடாது என்பதாகத்தானே நமது சமூகச்சூழ்நிலை இருந்து வருகிறது. இது உண்மையில் சரியா என்பதை யோசித்தால் நமக்குக் கிடைக்கும் விடை ?????????


உண்மையிலேயே ஒரு பெண்ணின் சுதந்திரம் திருமணத்திற்குப் பிறகு பறிக்கப்படுவதும், ஆணின் சுதந்திரம் அதிகரிப்பதும் தானே காலம் காலமாக நடந்துவருகிறது. என்ன இருந்தாலும் பெண்பிள்ளைகளிடத்திலிருந்து உதவி கேட்பது என்பது எந்த ஒரு பெற்றோருக்கும் இழினிலையாகத்தானே பார்க்கப்பட்டு வருகிறது இன்றுவரை. ஒரு பெண் கணவனைவிட மகனை நம்புவதைப்போல ஏன் மகளை நம்பமுடியவில்லை. இருவருமே தனது பிள்ளைகள் தானே? விடை ஒன்றுதான் ஆணாதிக்கம் !!

ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டில் வாழ்வது சரி என்றால், ஒரு ஆண் திருமணத்திற்குப் பிறகு மனைவி வீட்டில் சென்று வாழ்வது மட்டும் ஏன் தவறாக இருக்கிறது.

தீர்வு ஒன்றுதான், ஒரு ஆண் தனது திருமணத்திற்குப் பின்  தாய் தந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்வது எவ்வளவு சரியோ, அதேபோல ஒரு பெண் திருமணத்திற்குப் பிறகு அவளுடைய தாய் தந்தையை பார்த்துக்கொள்வதையும் ஏற்றுக்கொள்ளும் மன நிலை எல்லோரிடத்திலும் வர வேண்டும். வருவதற்கு கொஞ்சம் காலம் ஆகலாம். ஆனால் வருவதை தடுக்கக் கூடாது என்பது தான் என் எண்ணம். 


அந்த மாற்றத்தின் முதல் படியாகத்தான் நான் தனிக்குடித்தனத்தைப் பார்க்கிறேன். என்றாலும் கூட அதை ஏற்றுக்கொள்ள என் மனது மறுப்பதும் நிஜம். நானும் ஒரு ஆண் என்பதாலோ என்னவோ தெரியவில்லை. எனக்கு வரப்போகும் மனைவி அவளது பெற்றோரைவிட்டு வருவதைப் போல என்னால் எனது பெற்றோரைவிட்டு போக முடியுமா என்றால் , கண்டிப்பாக  முடியாது என்பது தான் விடை. ஆனால் என்னுடைய மகன் எங்களைவிட்டுப்  போகும் போது அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை அடைந்துவிடுவேன் என்று கண்டிப்பாக‌ நம்புகிறேன்.


உண்மையிலேயே நேற்றைய நீயா நானா பல கேள்விகளை என்னுள் ஏற்படுத்திச் சென்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பதில்களைத் தேட முயற்சிக்கிறேன்............

பதிவு குறித்து மறக்காமல் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

 நன்றி!

உங்கள் சீலன் !

Friday, April 25, 2014

ஏழு பேர் விடுதலை?


ஏழு பேர் விடுதலை?

ராஜீவ் கொலை குற்றத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான விடுதலைக்கெதிரான மத்திய அரசின் முறையீட்டிற்கு உச்சநீதிமன்றம் நேரடி தீர்ப்பு வழங்காமல் அரசியல் சாசன அமர்விற்கு மாற்றி உத்தரவிட்டுள்ள நிலையில் ஏழு பேரின் விடுதலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதைப்பற்றிய ஒரு சிறிய அலசல் தான் இந்தப்பதிவு.


முதலில் குற்றம்சாட்டப்பட்ட அந்த ஏழு பேரில் நளினியின் தூக்கு தண்டனை ஏற்கனவே குடியரசுத்தலைவரால் குறைக்கப்பட்டதும் உங்களுக்கு நியாபகம் இருக்கலாம். இன்று அளிக்கப்பட்ட தீர்ப்புக்கான உத்தரவில் அரசியல் சாசன அமர்வு என்பது இனிமேல் தான் அமைக்கப்பட இருக்கிறது. அதுவரை இவர்களுக்கான விடுதலை தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியல் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் போன்றவர்களால் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது. தீர்ப்பை எதிர்நோக்கியபோது மேலும் இழுத்தடிக்கும்விதமாகத்தான் இதை பார்க்கவேண்டியுள்ள நிலையை ஏற்படுத்தி உள்ளது.

சரி இந்தவிசயத்தில் தமிழக அரசியல் கட்சிகள் என்னவெல்லாம் செய்தன என்று பார்க்கவேண்டி உள்ளது. 

முதலில் திமுக. எதற்கெடுத்தாலும் வீராப்பு வசனம் பேசும் கட்சியான திமுக இந்த விசயத்தைப் பற்றியும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கவில்லை. கலைஞர் ஆட்சியில் இவர்கள் மீதான தூக்கு தண்டணை கருணை மனு குறித்து ஆளுநர் அமைச்சரவை முடிவைக்கேட்ட போது நளினிக்கு மட்டும் தூக்கு தண்டணையைக் குறைக்கலாம் என பரிந்துரைத்தது. இப்போது இவர்கள் விடுதலை ஆனால் வறவேற்போம் என்று கூறுகிறது. இதை ஆட்சியில் இருந்த போதே செய்திருக்கலாமே. சரி இவர்கள் பரிந்துரைத்தால் ஆளுநர் தூக்கை ரத்து செய்துவிடுவாறா? என்று கேட்கலாம். ரத்து செய்வதும் செய்யாததும் இரண்டாம் பட்சம், ஆனால் இவர்கள் பரிந்துறைக்கவே இல்லையே!. இப்போது தாம் தூம் என்று குதிக்கிறார்கள். என்ன லாபம்? மொத்தத்தில் திமுக இந்த விசயத்தில் உறுதியான நிலைப்பாடு இருக்கவில்லை என்பது தான் என் கருத்து.


அடுத்து ஆளும் அதிமுக. இந்த விசயம் இவ்வள‌வு தூரம் சென்றதற்கே அதிமுக தான் காரணம். வெறும் தேர்தல் அரசியலுக்காக இவ்வளவு அவசரப்பட்டதும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சரி இந்த விசயத்திலும் இக்கட்சியின் ஆரம்ப நிலைப்பாடு தெளிவானதாக இல்லை.விடுதலை செய்வதில் இவ்வளவு அவசரம் காட்டியதும் அதிமுக தான், நளினி பரோலில் செல்ல அனுமதி கேட்டபோது மறுத்ததும் அதிமுக தான்.அரசியல் சட்ட ஆலோசனைகளை ஆற அமர யோசித்து முடிவெடுத்திருக்கலாம். எங்கே தேர்தல் நேர கவர்ச்சி போய்விடுமோ என்று அவசர முடிவு எடுத்துவிட்டு இன்று பதறுகிறார்கள். இது போல் பலமுறை நீதிமன்றத்தால் குட்டு வாங்கியும் இருக்கிறது.(சமச்சீர் கல்வி போன்று)


காங்கிரஸ் மட்டுமே அன்றிலிருந்து இன்றுவரை எதிர்ப்பது என்ற ஒரே நிலையிலுள்ளது மனிதாபிமானமே இல்லாமல்.

தமிழ் ஆர்வலர்கள் வேறு. அவர்கள் தொல்லை வேறு தாங்க முடியவில்லை. விடுதலைப் புலிகள் தலைவர் பிராபகரனை தூக்கில் போடவேண்டும் என்று சொன்னவரையும், ஒருமணி நேரம் உண்னாவிரதம் இருந்தவரையும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்துவருகின்றனர்.பிறகெப்படி அவர்கள் குரல்கள் நேர்மையானதாக, உறுதிமிக்கதாக இருக்கும்?

இன்று இவர்கள் அந்த ஏழுபேரையும் நிரபராதிகள் என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்றோ குற்றம் நிரூபிக்கப்பாடதவரகள் என்றோ கூடச் சொல்லலாம்.அதை விடுத்து நிரபராதிகள் என்று சொல்வதெல்லம் திசை திருப்பும் முயற்சி. பிறகு ஏன் அவர்கள் அப்போதே விடுவிக்கப்படவில்லை? தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உச்சநீதி மன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டவர்களை நிரபராதிகள் என்று இன்று கூறும் இவர்கள் அன்றே வலிமையான வாதத்தை வைத்து விடுவித்திருக்கலாமே? ஆனால் குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த ஏழு பேரும் ஏதோ ஒருவிதத்தில் ராஜிவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், காரணமானவர்கள் இல்லை என்பது சின்னக்குழந்தைக்குக் கூட தெரியும் என்பது உச்ச நீதிமன்றத்திற்கு தெரியாதா? தெரியாமலா தூக்குதண்டனை விதித்து தீர்பளித்தது. ஆனால் ஒன்று அவர்கள் நிரபராதிகள் என்று யாரும் சொல்லமுடியாது. அதே நேரத்தில் அவர்கள் குற்றவாளிகள் என்றும் சொல்லக்கூடாது. அது அவர்கள் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும்.


என்னுடைய பார்வையில் இன்றைய தீர்ப்பு ஏமாற்றத்தை தந்தாலும், முறையான தீர்ப்பு வரும் வரை மக்களைக்குழப்பாமல் இருக்கவேண்டும் இந்த அரசியல் கட்சிகள்.


என்னைப்பொறுத்தவரை இது மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான ஒரு அரசியல் அதிகாரப் போட்டியாகத்தான் பார்க்கிறேன். இருவரது போட்டியில் ஏழுபேர் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பம் தான் பாதிக்கப்படுகிறது. நான் மாண்புமிகு பாரதப்பிரதமரின் கொலையை நியாப்படுத்தவும் இல்லை.அவரையும் அவரோடு இறந்த குடும்பங்களையும் ஒரு நிமிடம் எண்ணிப்பார்த்தால் இது உங்களுக்கே விள‌ங்கும்.ஆனால் கொலைக்கு உண்மையான  காரணமானவர்கள் தண்டிக்க‌ப்படவில்லை என்பது தான் வேதனையான உண்மை. அதற்காக இந்த ஏழுபேரை இனிமேலும் தண்டிப்பது நியாயம் ஆகாது.


முதலில் ,அவர்கள் இனி தூக்கு தண்டனை அடையப்போவதில்லை. அவர்களுக்கான விடுதலை தான் தள்ளிப்போடப்பட்டுள்ளது என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்.உச்ச நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அரசின் கொள்கை முடிவு விடுவிக்கலாம் என்பது தான்.இந்த முரண்பாடுகளெல்லாம் களையபடும். ஆயுள் தண்டனை என்பது எத்தனை வருடம் என்பதும் அரசியல் சாசன அமர்வினால் இனி கூறப்பட்டுவிடும், அதுவும் ஒருவித்ததில் நல்லது தானே.



இப்போது நான் ஒன்றை நினைவு கூற விரும்புகிறேன். அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்பளித்த போது உச்ச நீதி மன்றம் இந்த வார்த்தையை பயன்படுத்தியது. இந்தியர்களின் கூட்டு மனசாட்சிப்படி எனும் வார்த்தைகள் தான் அவை. அப்படியானால் தமிழர்களுக்கு கூட்டு மனசாட்சி இல்லையா ? இந்த விசயத்தில் மொத்தமாக குழப்புவது உச்சநீதிமன்றம் தான் என்பது என் எண்ணம்.


ஆனால் குறைந்தபட்ச மனிதாபிமான அடிப்படையில் தீர்ப்பு வரும் வரை அவர்களை பரோலிலாவது விடுவிக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும் என்பது தான் என் கோரிக்கை. அதுவரை இந்த விசயத்தை அரசியலாக்காமல் இருக்கவேண்டும் இந்த அரசியல்வாதிகள். இன்னொன்று இன்றைய நிலைகளை எல்லாம் பார்க்கும் போது அரசியல் சாசணத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனும் வாதம் வலுப்படுவது போல் தான் உள்ளது. காலம் கடந்த நீதி அநீதிக்குச் சமம் தானே தவிர அநீதி ஆகாது என நம்புவோம்!!!1



உங்கள் சீலன்!!

Tuesday, April 22, 2014

முதல் வாக்காளர்களின் வாக்கும் என்னுடைய கணிப்பும்!!


முதல் வாக்காளர்களின் வாக்கு!!!

இன்றுடன் பிரச்சாரம் ஓய்வு. பொதுமக்களுக்கு நிம்மதி. வேட்பாளர்களுக்கு இனிதான் கவலை. கொடுத்த காசு வேளை செய்யுமா? ஜெயித்துவிடுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? என யோசித்தே மண்டை வலி வரப்போகிறது வேட்பாளர்களுக்கு. இன்னொறு பிரச்சனையும் இருக்கிறது இந்த முதன் முறை வாக்காளர்களின் ஓட்டுகளைக் கவர்வது. ஆம் அதுவும் வெற்றியைத்தீர்மானிக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும் கணிசமான ஓட்டுகள் கிடைக்கலாம். இந்த முறை முதன் முறை வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு கணிசமாக கிடைக்கும் எனப் பார்ப்பது தான், பார்க்க முயல்வதுதான் இந்தப்பதிவு,

இளைஞர்கள் மத்தியில் முதல்முறை வாக்களிக்கப் போகும் உணர்வே அதிகமாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் மற்றவர்கள் போல குறிப்பிட்ட இந்தக்கட்சிக்குத்தான் வாக்கு என்றெல்லாம் முடிவெடுத்து செல்வதில்லை வாக்காளர்கள். தீர்க்கமான முடிவு அறிவுசார்ந்த வேட்பாளர் தேர்வு என இளம் வாக்காளர்களின் வாக்கு அமையும் என்று கூட சொல்லலாம்.இன்றைய தேதியில் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இதைப் பற்றி மற்றவர்களுடன் விவாதித்துக்கூட முடிவெடுக்கின்றனர். உதாரணமாக என் நண்பர்களையே சொல்லலாம்.


ஆனால் எதை வைத்து வாக்களிக்க உள்ளனர் என்று பார்த்தால் முக்கியமாக‌ ஊடகத்தை பார்த்து தான் தேர்வு செய்கின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நமது இளைஞர்களின் ஓட்டு யாருக்கு என்று பார்க்கவேண்டும். அவை கூட கூடப் படிக்கும் மாணவர்களிடம் விவாதிக்கப்பட்ட ஒரு தேர்வாகத்தான் பெரும்பாலும் இருக்கிறது. நான் பார்த்த பழகிய என் தோழர்கள் , என் பல்கலைக்கழக நண்பர்கள், என் விடுதி நண்பர்கள், என் ஊர் நண்பர்கள் யாவருமே புதிய வாக்களர்கள் தான் (நானுட்பட). அவர்களிடம் பல நேரங்களில் பேசியதிலிருந்து, அவர்களாகவே கூறியதிலிருந்து நான் கூற வருவதுதான் உண்மையாக இருக்கும் என்று கூறமுடியாது. சில இடங்களில் மாறலாம். ஆனால் பெரும்பான்மையாக இது தான் இருக்கிறது.


இன்றைய சூழலில் இளைஞர்களின் தேர்வாக இருப்பது கண்ணை மூடிக் கொள்ளுங்கள், மோடி மோடி மோடி தான். ஆம், என்ன காரணம் என்று பார்த்தால் ஊடகம். ஊடகங்களிம் மூலம் மோடிக்குக் கிடைத்த வெளிச்சம். இதில் தான் ஊடகங்கள் ஒருபக்கமாக இருக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது.
எப்போது மோடி பாஜகவின் பிரச்சாரக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அப்போதிலிருந்து நமோ கோசம் தான் எந்தப் பக்கத்தை புரட்டினாலும். இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மீதான வெறுப்பு. இதை வெறுப்பு என்று கூட சொல்ல முடியாது, போதும் என்ற மனநிலை. அவர்களே ஆட்சி செய்யக்கூடாது. மாற்றித்தான் பார்க்கலாமே என்ற எண்ணம் தான்.மூன்றாவது முகப்புத்தகம் . அதில் செய்யப்படும் பிரச்சாரம், மோடி புகழுரைகள் போன்றவை. இன்னொன்று இன்றைய இளைஞர்கள் மக்களவை, சட்டசபை தேர்தலுக்கான வித்தியாசத்தையும் புரிந்துவைத்துள்ளனர்.


நான் பல முறை மோடி போடும் வேசத்தை என் நண்பர்களிடம் விளக்கும் போது, அவர்கள் கூறும் ஒரே பதில், பிறகெப்படி அவர் முன்று முறை முதல்வராக வெற்றி பெற்றார் என்பது தான். அவரின் வரலாற்று அறிவு, பொருளாதார சிந்தனை  உள்ளிட்டவற்றை மன்மோகனோடு ஒப்பிட்டால் கண்டிப்பாக மோடி சிறந்தவர் இல்லை தான். ஆனாலும் அவரின் குஜராத் வளர்ச்சி வித்தை, அவரை காப்பாற்றிவிடுகிறது.


இரண்டாவதாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் மன்மோகன் பெயர் மிகவும் டேமேஜ் ஆகிக் கிடக்கிறது. இதுவும் ஊடகங்களைப் பார்த்து புரிந்துகொண்டதுதான் எனலாம். சோனியாவின் கைப்பாவை என தினமொறு செய்தியாகப் போட்டுப் போட்டு மன்மோகனை டேமேஜ் செய்துவிட்டன்ர்.  ராகுல் காந்திக்கு ஓரளவு இளைஞர்களிடம் ஆதரவு இருக்கிறது. ஆனாலும் மோடியோயுடு ஒப்பிட்டக்கூட முடியாத அளவில் தான்.


தமிழகக் கட்சிகளைப் பொறுத்தவரை இளைஞர்களின் ஆதரவு திமுக ஆதிமுக வுக்கு சம‌மாக இருக்கிறது. கேப்டனுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது, ஆனால் அது எவ்வாறு என நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சற்று அரசியலை கூர்ந்து நோக்கும் மாணவர்களிடம் மோடியின் பருப்பு வேகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதே நேரத்தில்  சிறுபான்மை இளைஞர்களிடமும் மோடி பெயர் வாங்க முடியவில்லை.

கலைஞர் பற்றிப் பார்த்தால் அவருடைய பெயரும் அவ்வளவாக இல்லை. குடும்ப அரசியல் , ஊழல் என அவர் பெயரும் டேமேஜ் தான். முதல்வரின் மீதும் நல்ல பார்வை இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கு, எழுதிவைத்துப் பேசுவது போன்றவைகளை தெரிந்தே வைத்துள்ளனர்.அதே நேரத்தில் லாப் டாப் திட்டத்தினால் ஓரளவு இளைஞர் ஆதரவு இல்லாமலும் இல்லை. வைகோவிற்கு நல்ல பெயர் உள்ளது. ஆனால் அது ஓட்டுகளாக மாறும் அளவிற்கு இல்லை. கம்யூனிஸ்டுகள் பற்றிய பார்வை அரசியலை கூர்ந்து நோக்கும் மாணவர்களிடம் மட்டுமே உள்ளது. அதே போல ஜாதிக்கட்சிளுக்கான ஆதரவு துளியும் இல்லை இன்றைய இளைஞர்களிடம். பாராட்டப்படவேண்டிய விசய‌ம் தானே?அதே நேரம் படிப்பறிவில்லாத முத‌ல் வாக்காளர்களிடம் ஜாதி கொடிகட்டிப் பறக்கிறது என்பதும் உண்மை. நோட்டாவிற்கும் கூட ஆதரவு இருக்கிறது. ஆனால் கண்டிப்பாக பயன்படுத்த‌ மாட்டார்கள். 


மொத்தத்தில் இன்றைய இளைஞர்களின் ஆதரவு கீழ்கண்டவாறு இருக்கிறது.


முதல் இடம்; நரேந்திர மோடி

இரண்டாவது; கேப்டன் விஜயகாந்த் (விதிமுறைகளுக்கு உட்பட்டது)

மூன்றாவது இடம் ; முதல்வர் ஜெயலலிதா

நான்காவது இடம்; கலைஞர் 

ஐந்தாவது இடம்; நோட்டா

ஆறாவது இடம்; மன்மோகன் சிங்க் ( எதிர்மறை ஆதரவு)

ஏழாவது இடம்; வைகோ ( வாக்காக மாறுமா எனத்தெரியவில்லை, நல்ல பெயர் இருக்கிறது)


தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் என்னுடைய கணிப்பாக சில தொகுதிகளின் வெற்றி நிலவரம். ( என்னுடைய கணிப்பு மட்டுமே)

சிவகங்கை( என்னுடைய‌ தொகுதி) ;  அதிமுக ஜெயித்துவிடும் என்றே தெரிகிறது. இரண்டாவது இடம் திமுகவிற்கு கிடைக்கலாம். கார்த்தி சிதம்பரம் தோல்வி அடைந்தாலும் கவனிக்கத்தகுந்த வாக்குகளைப் பெறலாம். ஹெச்.ராஜாவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது.


கன்னியாகுமரி;  பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றியடைவார் எனத்தெரிகிறது.காங்கிரஸ் வசந்த குமார் கவனிக்கத் தகுந்த வாக்குகளைப் பெறலாம்.

விருதுநகர்; வைகோ வென்றுவிடுவார் எனத் தோன்றுகிறது. ஓட்டு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும் எனப்படுகிறது.


நீலகிரி; திமுக ராஜா ஜெயிப்பார்.

மத்தியசென்னை; தயாநிதி மாறனுக்கு வாய்ப்புகள் அதிகம்.

தென்காசி; புதிய தமிழகம் கட்சிக்கே அதிக வாய்ப்பு.

சிதம்பரம்; விசிக்கு வாய்ப்பிருக்கிறது.

தஞ்சாவூர்; திமுக மிகக் குறைந்த வித்தியாசத்தில் ஜெயிக்கலாம்.

புதுச்சேரி; என். ஆர் காங்கிரஸ் ஜெயிக்க அதிக வாய்ப்பு, காங்கிரஸுக்கும் வாய்ப்பு அதிகம்.

அவ்வளவு தான் என்னுடைய கணிப்பு. மொத்தமாக அதிமுக  18-20 தொகுதிகள்.திமுக 16-18 பாஜக -1 மதிமுக -1 பாமக 0-1 தேமுதிக 0 தொகுதிகள் ஜெயிக்கலாம்.(பாவம் கேப்டனின் அரசியல் வாழ்க்கை இத்தேர்தலுக்குப் பிறகு என்ன ஆகப் போகிறது எனத்தெரியவில்லை)

இது பற்றிய என்னுடைய பதிவு;  http://pudhukaiseelan.blogspot.in/2014/04/blog-post_17.html


வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கிய நீங்கள், உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ஒருகணம் ஒதுக்கலாமே?

உங்கள் சீலன்!

கருத்துகள் எதிர்பார்க்கப்படுகின்றன!!!!







Thursday, April 17, 2014

கேப்டன் விஜயகாந்த்


கேப்டன் விஜயகாந்த் 







இன்றைய தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட கேப்டனுக்கு முக்கியமாக இருக்கிறது. இது முரசுக்கு  ஒரு மானப்பிரச்சனை என்று கூட சொல்லலாம். ஆனால் அதை விஜயகாந்த் புரிந்துகொண்டிருக்கிறாரா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை என்பதே விடையாக இருக்கும். 2005ல் கட்சி ஆரம்பித்தபோது இவர் மாற்று அரசியல் செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே விடையாகக் கிடைத்துள்ளது. ஆனாலும் இவருக்கென்று வாக்கு வங்கி உருவாகியிருக்கும் நிலையில் அதை வளர்த்துக்கொள்வதில் அக்கறை செலுத்தாமல் குறைத்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்.



2006 ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்த விஜயகாந்த் அதில் கணிசமாக ஒட்டு வாங்கவும் தவறவில்லை.  2009ல் மக்களவையில் தணித்துப்போட்டியிட்டு அரசியல் கட்சிகளை ஆட்டம் காணச்செய்த விஜயகாந்த் இன்று 2 மக்களவை தொகுதிக்காக தனது வாக்கு வங்கியை அடமானம் வைத்திருக்கிறார். மக்களோடும் தெய்வத்துடனும் கூட்டணி என்று சொல்லி தேர்தலை சந்தித்த கேப்டன் 2011 ஆம் ஆண்டு அம்மாவுடன் கூட்டணி வைத்து சட்டப்பேரவைத்தேர்தலைச் சந்தித்து வெற்றியும் கண்டார்.


2011 ல் ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்றியதற்கு முக்கிய காரணம் விஜயகாந்த் தான் என்பது நாடறிந்த ரகசியம். ஆனால் விஜயகாந்த் எதிர் கட்சி தலைவர் பதவியை அடைந்ததற்கு அம்மாதான் காரணம் என்பதும் உண்மை. ஆம் ஸ்பெக்ட்ரம் ஊழலைத்தவிர்த்து திமுகவை குறைசொல்ல ஏதும் இல்லை, இலங்கை தமிழர் பிரச்சனை கூட அவ்வளவாக எடுபட்டிருக்காது, ஆனால் ஒவ்வொரு தொகுதியிலும் 25000 வாக்கு வைத்திருக்கும் விஜயகாந்த் கட்சி தனித்து நின்றிருந்தால்.


அன்றைய சட்டப்பேரவைத்தொகுதி முடிவுகளை உற்று நோக்கினால் இந்த உண்மை விளங்கும். ஆம் அதிமுக கூட்டணி ஜெயித்த இடங்களில் ஏறத்தாழ‌

90 - 100 தொகுதிகள் 20000 வக்கு வித்தியாசத்திற்கு குறைவான வித்தியாசத்தில் ஜெயிக்கப்பட்டவை. ஒருவேளை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கேப்டனின் தேமுதிக தனித்து நின்றிருந்தால் இன்றைய நிலைமைட‌யே வேறு ஆம், அந்த 90 - 100 தொகுதிகளில் கண்டிப்பாக திமுக 50 - 60 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். எஞ்சிய தொகுதிகளை அதிமுக கைப்பற்றியிருக்கும். அப்படிப்பட்ட நிலையில் திமுக கூட்டணி 100  -

120 இடங்களிலும் சமமான இடங்களில் அதிமுக கூட்டணியும் வெற்றிபெற்று தொங்கு சட்டப்பேரவை அமைந்திருக்கும். ஆனால் தேமுதிக வின் வாக்குகளால் அதிமுகவும் அதிமுகவின் வாக்குகளால் தேமுதிகவும் பயனடைந்தன என்ற உண்மையை மறந்துவிட்டோம் இன்று.






அதற்கு பிறகு சட்டப்பேரவையில் அம்மா vs கேப்டன் களேபரங்கள் ஊர் அறியும் . அப்போதிலிருந்து தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்தார் முதல்வர். தேமுதிக என்ற கட்சியை ஒழித்துக்கட்டுவதை தனது முக்கிய கடமையென நினைத்து அதை சரியாக செய்துவருகிறார். இதில் தான் விஜயகாந்தும் ஜெயலலிதாவும் வேறுபடுகின்றனர். அவரின் ராஜ தந்திரத்திற்கு முன்னால் விஜயகாந்த் காணாமல் போய்விடுவாறோ என்று எண்ணத்தோன்றுகிறது. சரி இப்போது விழித்துக்கொள்வார் அப்போது விழித்துக்கொள்வார் என்று பார்த்தால் ம்கூம் நடக்கவே இல்லை.



சரி அவருக்கு எதிராக அரசியல் செய்யவேண்டிய நிலைக்கு விஜயகாந்த் வந்துவிட்டார். அப்படியானால் அதற்கு சரியான இடம் திமுக தான் என்பதை மறந்துவிட்டார். கலைஞர் நேரடியாக அழைப்புவிடுத்தும் அங்கு செல்லாமல் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டார். இது அவரின் மிகப்பெரிய தவறு என்பது என் எண்ணம்.அதற்கு விஜயகாந்தின் ராஜ தந்திரம் காரணமாம். இப்போது நடக்கும் மக்களவைத்தேர்தலைவிட அவருக்கு 2016ல் நடைபெறப்போகும் சட்ட்ப்பேரவைதான் முக்கியமாம். இப்போது கலைஞரோடு கூட்டணி வைத்துவிட்டு இன்னும் இரண்டு வருடத்தில் அவரையே எதிர்க்க வேண்டுமே என்ற ராஜ தந்திரம் தான் அது. ஆஹா எவ்வளவு அருமையான எண்ணம். நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கு அவர் தகுந்த கூட்டணியில் அல்லவா சேர்ந்திருக்க வேண்டும். பா.ஜ.க உடன் சேர்ந்தார். யாரை எதிர்த்து அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறாரோ அவருடன் எதிர்காலத்தில் சேரப்போகும் கட்சியுடன் , ஒருவேளை நரேந்திர மோடி பிரதமராக வந்தால் அந்த அமைச்சரவையில் இவரும் இடம்பெறுவார், இவருடைய எதிரியும் இடம்பெறுவார். அல்லது இவர் கழட்டிவிடப்படுவார்.




எது எப்படியாயினும் நஸ்டம் விஜயகாந்துக்குத்தான். இடையில் காங்கிரஸ், தனித்துப்போட்டி என இமேஜை வேறு கெடுத்துக்கொண்டார். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் விஜயகாந்திற்கு அரசியல் தெரியவில்லை. தான் இருக்கும் இடத்தில் உண்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் எங்கு பொருந்தினாலும் அரசியலுக்குப் பொருந்தாது. அதை செய்து வருகிறார் captain. தமிழ்நாடு முழுவதும் அலைந்து கொண்டு தான் சார்ந்த கட்சிக்கு, கூட்டணிக்கு உழைத்து வருகிறார். எங்கே போனார்கள் தமிழினத்தலைவர்கள் வைகோ ! ராமதாஸ்! பொன்னார்! இல.கணேசன்! போன்றவர்கள்.


சரி இவரின் உழைப்புக்கு ஊதியம் கிடைக்குமா என்று பார்த்தால் அதுவும் சந்தேகம் தான். சிறுபான்மையின மக்களைப் பகைத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல், தனது வாக்குவங்கியையும் அடமானம் வைத்துவிட்டார். ஒருவேளை இவர் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டு அதிமுகவை பகைத்துக்கொள்ளுமேயானால் அது தான் பா.ஜ.க இவருக்கு கொடுக்கும் உண்மையான  ஊதியம். அது நடைபெற குறைந்தபட்ச வாய்ப்புதான் உள்ளது. சரி போகட்டும் 2016 இருக்கிறது என்று தேற்றிகொள்ள்ளலாம் . அது கூட‌  2016 வரை இந்த கூட்டணி நிலைத்தால் தான், சட்டப்பேரவையில் அதிமுக, திமுகவிற்கு மாற்றாக வலுவடைய முடியும். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. வைகோ விஜயகாந்தை முதல்மைச்சராக, குறைந்தபட்சம்  முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வாரா ? இல்லை ராமதாஸ் தான் ஏற்றுக்கொள்வாரா? கண்டிப்பாக மாட்டார்கள்!!!!


தமிழ்நாட்டில் நடப்பது வாக்குவங்கி அரசியல் தான் என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறார் என்று தெரியவில்லை.




என்னைப் பொறுத்தவரை விஜயகாந்த், திமுகவுடன் சேர்ந்து தேர்தலைச்சந்தித்து அவரின் அரசியல் எதிரிக்கு தக்க பாடம் புகட்டியிருக்கவேண்டும். அல்லது தனித்தோ காங்கிரஸ் அல்லது இடது சாரிகளோடோ சேர்ந்து தேர்தலைச்சந்தித்து தனது பலத்தை மீண்டும் ஒருமுறை காட்டியிருக்கவேண்டும். ஆனால் இதை செய்யாமல் தானும் ஒரு அரசியல்வாதிதான் எனக்காட்ட ஒரு கொள்கை முரணான கூட்டணீயில் சேர்ந்து அவரின் அரசியல் எதிரிக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டார். காலம் தான் பதில் சொல்லவேண்டும் அவர் அரசியலைக் கற்றுக்கொண்டு மீண்டு வருகிறாரா இல்லையா என்பதை!!








நான் எப்போதுமே மாற்று அரசியல் ஏற்படவேண்டும் என்பதைத்தான் விரும்புவேன். திமுகவும் சரி அதிமுகவும் சரி இரண்டுமே ஒரே குப்பையில் ஊறிய மட்டைகள் தான். ஆனால் தேமுதிகவை அவ்வாறு நினைக்கவில்லை. இன்று அதுவும் ஒரு மட்டைதான். என்ன வித்தியாசம் என்றால் இன்னும் ஊறிவிடவில்லை அவ்வளவு
 தான்.



உங்கள் சீலன்!!





வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கிய நீங்கள், உங்கள் 

கருத்துகளை தெரிவிக்கவும் ஒரு கணம் 

ஒதுக்கலாமே? தயவு செய்து!!!!

Wednesday, April 16, 2014

நரேந்திர மோடி vs ரஜினி vs விஜய்


நரேந்திர மோடி vs  ரஜினி  vs விஜய்



இன்று மாலை பரபரப்பான ஒரு செய்தி. விஜயை சந்திக்கப்போகிறார் நரேந்திர மோடி. ஓட்டுக்களுக்காக மோடி இன்னும் யாரையெல்லாம் சந்திக்கப்போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு நாட்டின் பிரதமராக வரப்போகிறார் என்று பரவலாக அறியப்படும் நரேந்திர மோடி தமிழ் நாட்டில் ஓட்டு வாங்க இன்னும் எத்தனை நாடகங்களை அரங்கேற்றப்போகிறார் எனத் தெரியவில்லை.


 நரேந்திரமோடி அலை தமிழ் நாட்டில் பரவலாக வீசுகிறது. எனவே எங்களுக்குத்தான் வெற்றி என முழங்கிய தமிழக‌ பா.ஜ.க தலைவர்கள் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் ரஜினி எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று வெளிப்படையாகவே பேசி வந்தனர், வருகின்றனர் இனியும் அப்படித்தான் சொல்லப்போகின்றனர். அது வேறு விசயம், அப்படியானால் மோடி அலை எங்கே போனது???. பிரதம வேட்பாளர் என அறிவித்துவிட்டு தேர்தலைச் சந்திப்பதே என்னைப் பொருத்தவறை தவறான முன்னுதாரண‌ம். 



அப்புறம் தமிழ் நாட்டில் கூட்டணி முயற்சி. என்னதான் மோடி அலை வீசினாலும் ,வீசுவது போல சொல்லப்பட்டாலும் தமிழ்நாட்டில் கூட்டணி சேர்வதற்கு ஆளில்லாமல் தான் முதலில் இருந்தது . கூட்டணி பேரம் முடிந்து, அதை இறுதிசெய்து பிரச்சாரத்திற்கு வருவதற்குள்ளாகவே தமிழ் நாட்டின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் பிரச்சாரத்தை ஆரம்பித்து, கொஞ்ச நஞ்ச மோடி அலையையும் காணாமல் செய்துவிட்டனர். எனவே இதை சரிசெய்ய என்னசெய்யலாம் என யோசித்த தமிழக பா.ஜ.க ரஜினி - மோடி நட்பை பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தது. மேடை தோறும் ரஜினியின் ஆதரவு எங்களுக்குத்தான் என சொல்ல ஆரம்பித்த‌னர். வாக்காளர்கள் ஏமாளிகளா? எவ்வளவு நாள் ஏமாற்றுவது? எப்படியாவது ரஜினியை மோடி சந்தித்து விட ஏற்பாடு செய்யவேண்டும். இதை சரியாகச் செய்த தமிழக பா.ஜ.க ரஜினியின் வாய்ஸைப் பெறுவதில் தவறிவிட்டது.






ரஜினியை காண வரும் முன் பெங்களூரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மோடி, அடுத்து உங்கள் மண்ணின் மைந்த‌ர் ரஜினியை சந்திக்கச் செல்கிறேன் என பலத்த கரவொலிக்கிடையே மகிழ்சியோடு பேசியிருக்கிறார். ஆனால் அவரின் மகிழ்சி நிலைக்கவில்லை. அவர் நினைத்திருப்பார் ரஜினியிடம் கேட்டவுடனேயே அவர் ப்ரஸ் மீட் வத்து தனது ஆதரவை அறிவிப்பர் என்று. அப்படித்தான் தமிழக ப.ஜ.க வும் அவரிடம் சொல்லியிருக்கும். ஆனால் நடந்தது வேறு என்பது உங்களுக்கே தெரியும். இப்போது ரஜினியைச் சந்தித்ததால் பா.ஜ.க வுக்கு என்ன லாபம் என்பதுதான் என் கேள்வி.


ரஜினியுடைய மக்கள் செல்வாக்கு இன்றும் இருப்பது உண்மைதான். அதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் அவர் சொல்பவர்க்கெல்லாம் ஓட்டுப் போடும்  அளவிற்கு மக்கள் முட்டாள்களில்லை. அமைப்பு ரீதியாக ரஜினியே நேரடியாக களத்தில் இறங்கி மக்களை சந்தித்து கேட்டாலே ஒழிய மக்கள் அவரைமட்டுமல்ல யாரையுமே ஆதரிப்பது சந்தேகம். பின்னர் ஏன் 1996 ல் ஆதரித்தபோது நடந்தது என நீங்கள் கேட்கலாம். அதற்கு காரணம் இருக்கிறது.






ஜெயலலிதா எதிர்ப்பலையோடு ரஜினியின் வாய்ஸ் சேர்ந்ததால் ஏற்பட்ட விளைவுதான் அன்றைய தேர்தல் முடிவுகள். அதன் பிறகு 1998 லேயே அவர் புரிந்து கொண்டார், மக்களை சந்திக்காமல் ஊடகத்தின் வழியே பேசினால் எடுபடாது என்பதை. அன்றோடு அவர் வாய்ஸ் கொடுப்பதையும் நிறுத்தி விட்டார் . 2004 ல்  பா.ஜ.க விற்கு ஓட்டளித்ததாகத்தானே கூறினார் தவிர வாய்ஸ் தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று ரஜினி அல்ல அவருடைய ஆருயிர் நண்பர் கலைஞர் போய் அவரைச் சந்தித்தாலும் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்ட புகழுரைகளைவிட அதிகமாகக் கண்டிப்பாகக் கிடைக்கும்.




அனால் வெளிப்படையான ஆதரவு  கண்டிப்பாகக் கிடைக்காது. இதில் அதிகம் வருத்தப்பட்டது மோடியாகத்தான் இருக்கும். தேடிப்போய் பார்த்தும் நமக்கு வாய்ஸ் தரவில்லையே என்பதுகூட காரணமாக இருக்கலாம். ஆனால் இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது. ஒருவேளை அதுவும் நடக்காமல் மற்றவர்கள் சந்திக்க வரும்போது ரஜினி செய்யும் வாசல் வரை வந்து வழியனுப்புதல் மட்டும் நடந்திருந்தால்  மோடி நொந்தே போயிருப்பார். ஆனாலும் சோர்ந்துவிடவில்லை தமிழக பா.ஜ.க மோடி பங்கேற்ற கூட்டத்தில் ரஜினியின் பாராட்டுகளை வாசித்தது. அதோடு மட்டும் நிற்காமல் கிடைக்கிற கேப்பில் இன்னும்  கிடா வெட்டிக்கொண்டே இருக்கின்றனர்.






இன்று விஜய். ரஜினியாவது பரவாயில்லை. அவருக்கு ஒரு எதிர்ப்பு என்றால் துணிந்து போராடுவார். போய் காலில் விழ மாட்டார். ஆனால் விஜய், காலிலேயே போய் விழுந்துவிடுவார். தமிழ்நாட்டின் சர்வாதிகாரியாக ஒருகாலத்தில் இருந்த  ஜெயலலிதாவையே எதிர்த்து அரசியல் நடத்தி அதில் வெற்றியும் கண்டவர் ரஜினி. ரஜினியைப் பற்றி முதல்வருக்குத்தெரியும். எனவே இனிமேல் ஒரு போதும் ரஜினியை முதல்வரோ, முதல்வரை ரஜினியோ  ஒருபோதுமே பகைத்துக்கொள்ளமாட்டார்கள். முதல்வர் மேடையிலேயே கலைஞரைப்புகழந்த ரஜினிக்கு ஜெ தொந்தரவு தர நினைக்கவில்லை. ஆனால் டைம் டூ லீட் என்ற ஒரு  வாசகத்திற்காக விஜய் பட்ட பாடு உலகமே அறியும் . கொடனாடு வரை சென்று திரும்பிவந்த கதையும் நாடு அறியும்.இத்தனைக்கும் சட்டசபைத்தேர்தலில் அணில் போல உதவியவர்?  இளைய தளபதி விஜய். 




எனவே மோடியின் வலையில் விஜய் விழமாட்டார் என அடித்துக்கூறுவேன். விஜய்க்கும் ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் ரஜினி போல மக்கள் செல்வாக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஒரு ரஜினி ரசிகன் என்ற முறையில் நாட்டின் எதிர்கால பிரதமர் வீடு தேடிவந்து ஆதரவு கேட்டார் என்பது எப்படி எனக்குப் பெருமையோ அதேபோல மோடியை விரும்பும் ஒரு ப.ஜ.க தொண்டனுக்கு அது பெருமையாக இருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது என்பது தமிழக பா.ஜ.க யோசிக்க மறந்த விசயம்.  மோடி போயஸ் தோட்டத்தில் ரஜினியை சந்திக்க இருக்கிறார், தவ்ஹீத் ஜமாத்தின் ஆதரவு வாபஸ், தி.மு.க வின் எழுச்சி போன்ற செய்திகள் தான் முதல்வரை  பா.ஜ.க விற்கு எதிராகப் பேசவைத்திருக்கிறது.  ஆனால் தேர்தலுக்குப் பின் நடக்கப் போவதை நாடே அறியும். பாவம் இதில் பலிகடா ஆக்கப்பட்டவர் நமது கேப்டன். இதுகுறித்து ஒரு தனிப்பதிவு எழுதுகிறேன்.





ஒரு மீள் சிந்தனை........................


கேள்வியாளர்; அதிமுக விலிருந்து கொலை மிரட்டல்கள் வருகிறதாமே உங்களுக்கு?


ரஜினி; இல்லை அதிமுகவில் இருப்பவர்கள் என்னுடைய தோழர்கள், எனவே அங்கிருந்து கொலை மிரட்டல்கள் வருவது என்பது வதந்தி. இப்போது இருப்பது அதிமுக இல்லை ஜெதிமுக.



இப்படி பதிலளித்தவர் தலைவர் ரஜினி. எனவே யாருக்காகவும் பயந்து  பா.ஜ.க விற்கு ஆதரவு தெரிவிக்காமல் இல்லை.  ஆனால் மக்களை நன்றாக புரிந்து வைத்திருப்பதன் அடையாளம் தான்  இது.


ஆனால் இதைவைத்து ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்று கூறிவிட முடியாது. இன்றைக்கு கட்சி ஆரம்பித்து அமைப்பு ரீதியாக மெருகேற்றிக்கொண்டு மக்களைச் சந்திக்கும் வரை , சந்தித்து தோல்வியடையும் வரை அதை  யாரும் அதை சொல்ல முடியாது.

ஆனால் ஒன்று கலைஞர் காலத்தில் கண்டிப்பாக தலைவர் அரசியலுக்கு வரமாட்டார். அவருக்குப் பிறகு ஏற்படும் வெற்றிடத்தை சரியாக கணிக்கத்தவறும் வரை அவருக்கான அரசியல் வாய்ப்பு மங்கிப்போகாது.

 1991ல் அழிய இருந்த அதிமுகவை ராஜிவ் படுகொலை காப்பாற்றியது. அது தான் முதல்வரின்  அரசியல் வாழ்வில் திருப்புமுனை  வெற்றி. அதுபோல ரஜினிக்கும் ஏதாவது வாய்ப்பு அமையும். அமையாவிட்டாலும், அவர் அரசியலுக்கு வராவிட்டாலும் வருத்தப்படமாட்டேன். என்னைப்பொறுத்தவரை ரஜினி விஜய் இருவரும் வாய்ஸ் கொடுத்தாலும் கூட தமிழகத்தில் பாஜகவிற்கு 5 க்கு மேல் முடியாது. அதிமுக 20 -  25. திமுக 7 - 15. இது தான் என் கணிப்பு. 






மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!!



உங்கள் சீலன் !!




வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கிய நீங்கள் உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் ஒரு கணம் ஒதுக்கலாமே? தயவு செய்து!!!!