வடகிழக்கு பருவ மழை - 1
எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருடம் வடகிழக்கு பருவமழை பின்னி எடுத்து வருகிறது. மழையின் அளவும் பாதிப்பும் குறையும் என்று எதிர்பார்க்கும் போதெல்லாம் அதிகமாகிக் கொண்டே வருகிறது . ஒரு புவிதகவலியல் மாணவனாக எனக்கு இந்த மழை பற்றியும் மழையின் பாதிப்புகளுக்கான காரணம் குறித்தும் என்னுடைய பார்வையில் புரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த பதிவை எழுத முடிவு செய்தேன். பைனல் இயர் ப்ராஜெக்ட் வேறு இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை. இதையே எடுத்துவிடலாமா எனும் எண்ணமும் வருகிறது. டேட்டா கிடைப்பது தான் கடினம். பார்க்கலாம்.
2005 என்று நினைக்கிறேன் . எங்கள் ஊர் கண்மாய் நிறைந்து உபரி நீர் வெளியேறிய வருடம். நம்ம தெற்கு வெள்ளாற்றில் கடையக்குடி பாலத்துக்கு மேலே தண்ணீர் சென்றது. சைக்கிளில் சென்று வேடிக்கை பார்த்தது இன்னும் நியாபகம் இருக்கிறது. நம்ம மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுதும் நல்ல மழை. பெரும் பாதிப்புகள். ஆனால் இந்த முறை வட தமிழகமும் தென் தமிழகமும் மட்டும் தான் பாதிப்பு. உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் அவ்வளவு பாதிப்பு இல்லை. சொல்லப்போனால் மழைஅளவு இன்னும் சராசரி அளவைக்கூட எட்டவில்லை. ஆனாலும் இவ்வளவு உயிர் சேதம் பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன. அதற்கான காரணத்துக்குள் நான் போக விரும்பவில்லை. அது பல செய்தித் தாள்களிலும் தொலைகாட்சி விவாதங்களிலும் அலசப்பட்டுவிட்டது.
தமிழகத்தின் சராசரி மழை அளவு 958-970 மி.மீ. அதாவது வடகிழக்கு,தென்மேற்கு,கோடைமழை அனைத்தையும் சேர்த்து. இதில் 50 -60 %வடகிழக்கு பருவமழைக்கானது. கோவை,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் இரண்டு பருவத்திலும் மழை பெறக்கூடியவை. தேனி,சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் இரண்டிலும் சுமார் மழையே பெறக்கூடியது. வடகிழக்கு பருவ மழை காலம் எனபது அக்டோபர் முதல் டிசம்பர் வரை. டிசம்பரை சேர்த்தே பெய்திருக்க வேண்டிய வ.கி மழை சராசரி 485 மி.மீ.ஆனால் டிசம்பரை சேர்க்காமலேயே இது வரை 440 மி.மீ வரை பெய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சென்னை மாவட்டம் மட்டும் அல்ரெடி நூற்றாண்டு சாதனைய தாண்டிருச்சு. இப்பவே 1000 மி.மீ தாண்டி நாட் அவுட்டா போய்கிட்டு இருக்கு. இன்னும் மூன்று இடங்களில் லோ ப்ரெஸ்ஸர் (low pressure ) உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது ( IMD data ). அதில் ஏதாவது புயலாக இருந்தால் தமிழ்நாட்டுக்கு கெட்ட காலம் தான்.
2013 ஆம் ஆண்டு கேதார்னாத் பெருவெள்ளம் குறித்து மறந்திருக்க மாட்டோம். அந்த பெருவெள்ளத்திற்கு மிகமுக்கிய காரணம் அதீத மழைப்பொழிவு (sudden rainfall). அதுவும் மேகம் முழுதும் மழை மேகமாக இருந்திருக்கிறது.(cloud monitoring தொழில்நுட்பம் இன்னும் இந்தியாவில் அதிகளவு வளர்ச்சியடையவில்லை ) அதை நமது வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறியதால் அத்தகைய இழப்பை சந்திக்க நேர்ந்தது. ஆனால் இந்த முறை சென்னை மழைப் பொழிவை துல்லியமாக கணித்தும் கோட்டை விட்டது ஆளும் அதிமுக மற்றும் செயல்படாத முதலமைச்சர். அதற்குள் போக விரும்பவில்லை.
அந்தமானுக்கு தெற்கே உள்ள கடல்பகுதியும் கன்னியாகுமரிக்கு தெற்கே லட்சத்தீவுக்கு கிழக்கே உள்ள கடல் பகுதியும் தான் இந்திய பருவ மழைக்கு 80-90% காரணமாக இருக்கிறது. அதாவது இந்த பகுதிகளில் தான் காற்றழுத்த வேறுபாடு ஏற்பட்டு காற்றழுத்த தாழ்விநிலை,புயல்,சூறாவளி உருவாகி மழை மேகங்களை உருவாக்குகிறது. இந்த கடற்பகுதி நேரடியாக பசிபிக் நீரோட்டங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே தென் பசிப்பிக்கில் ஏற்படும் மாற்றம் நேரடியாக இந்த பகுதியிலும் மாற்றம் நிகழக் காரணமாய் இருக்கிறது. அங்கே ஏற்படும் வெப்ப மாறுபாடு இங்கேயும் சற்று குறைவாக ஏற்படுகிறது. அது கடற்பரப்பு அழுத்தத்திலும் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. தென் பசிபிக்கில் உருவாக்கப்படும் பருவ மாற்றங்களான எல்நினோ,லாநினா இந்திய பருவ மழையுடன் தொடர்பு உடையதா என்று நான் மேற்கொண்ட மினி பிராஜெக்டில் ( இதையே மெயின் பிராஜெக்டாக எடுக்கவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் , உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன் ) குறிப்பிடத்தகுந்த முடிவுகள் கிடைத்தது. அதற்கும் இப்போதைய மழைப் பொழிவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா ...............?அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாய் பார்ப்போம்........!