Showing posts with label பொறியியல். Show all posts
Showing posts with label பொறியியல். Show all posts

Monday, December 7, 2015

கமல்ஹாசனுக்கு பதில் சொல்வீர்கள்.... மக்களுக்கு..?


 கமல்ஹாசனுக்கு பதில் சொல்வீர்கள்.... மக்களுக்கு..?




தமிழக மக்களின் மனிதத்தையும் மக்கள் ஒற்றுமையையும் கண்டு இந்தியா மட்டும் அல்ல உலகமே மகிழ்ச்சியடைந்திருக்கிறது. மீட்பு பணிகள்  கடந்து மறுகுடியமர்வு வரைக்கும் உதவிக்கரம் நீண்டு கொண்டிருக்கிறது. எல்லாமுமாக இருந்து செயல்படுவது பிறபகுதி பொதுமக்களும் தன்னார்வலர்களுமாகத் தான் இருக்கிறார்கள். அப்படியானால் அரசு...? இருக்கிறது, ஸ்டிக்கர் ஒட்ட, அடியாட்களை வைத்து மிரட்ட, நொடிக்கொருமுறை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கினங்க என்று வசனம் பாட, அதற்கும் மேல் அறிக்கை அர்ர்ச்சனை நடத்த. வெட்கம் மானம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

கமலஹாசன் அவர்கள் கூறிய கருத்துக்கு 3 பக்க அளவுக்கு கண்டன அறிக்கை விடத்தெறிந்த அரசுக்கு மக்களுக்கு ஆறுதல் சொல்லிக் கூட அறிக்கை வெளியிட முடியவில்லை. அறிக்கை கூட வேண்டாம் டிவியில் கூடவா  தோன்றி ஒரு உரையை நிகழ்த்தக்கூடாது. ஆளுங்கட்சியின் இயலாத் தனமும் அதிகார குவிப்பும் இப்போது வெளிப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். எதற்கெடுத்தாலும் தலைமையின் உத்தரவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கும் மந்திரிகள், பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு கூட பதிலளிக்க திராணி இல்லாத மந்திரிகள் என அமைச்சராக இருப்பதற்கான தகுதிகளையே இழந்து நிற்கிறது அதிமுக அரசு.

மீட்புப் பணிகளுக்கு ராணுவம் வந்திராவிட்டால் அதிமுக அரசு ஒன்றுமே செய்திருக்காது என்பது தான் பாதிக்கப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த ஆதங்கம். ஆனால் நொடிக்கொருமுறை மாண்புமிகு முதலமைச்சர் ஆணைக்கினங்க எனும் வார்த்தையைக் கேட்டுக் கேட்டு காது எறிகிறது. மியாட் மருத்துவமனை பிரச்சனை குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் துறை செயலாளர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதும், அமைச்சர்களுக்கான கேள்விகளுக்குக் கூட அதிகாரிகளே பதில் சொல்லிக்கொண்டிருக்கும் போதும் என்ன நடக்கிறது என்பது புரியாதது போலவே தேமே என உட்கார்ந்திருந்த அமைச்சர்களை பார்க்கும் போது எரிச்சலும் கோபமும் வந்தது. இத்தனைக்கும் அரசின் உயர் பொறுப்பு அமைச்சர்கள் அவர்கள்.

ஒரு நல்ல அரசாக இருந்திருந்தால் நிவாரண பொருள் சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தி ஒழுங்குபடுத்தி தேவைப்படும் இடங்களுக்கு அரசே அனுப்பியிருக்கலாம்.பலவித குழப்பங்களுக்கு முடிவு கட்டியிருக்கலாம்.  உயர் நீதி மன்றம் குட்டு வைத்தபின்பே இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டது என்பது கூட மறைக்கப்பட்டு ஒவ்வொரு பேருந்திலும் முதல்வரின் படத்தை ஒட்டி மலிவு விளம்பரம் தேடிய அரசு தான் இந்த அரசு. எதற்கெடுத்தாலும் விளம்பரம் தேடும் இந்த செயல் திமுக ஆட்சியில் கூட இருக்கவில்லை எனபதே நிதர்சனம். ஆனால் நாளை இதே ஒரு பாணியாக மாறிவிடும். ஒரு பேரிடர் ஏற்படும் போது மக்களின் முதல் எதிர்பார்ப்பு முதல்வரோ அமைச்சரோ வந்து ஆறுதல் சொல்வார்கள் என்பதாகத் தான் இருக்கும். அது தான் நடைமுறையும் கூட. ஆனால் முதலமைச்சரோ சென்ற வெள்ளத்திற்கு கார் கண்ணாடியை கூட இறக்காமல்  பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்து வாக்காளப் பெருமக்களே என வாக்கு சேகரித்துவிட்டு சென்றார். இந்த முறை வேறு வழியில்லாமல் ஹெலிகாப்டரில் பார்வையிட்டு ? சென்றார். அவ்வளவு தான், ஆளையே காணோம். டிவியில் கூடதோன்ற நேரமில்லை, அந்த அளவு அரசுப் பணியில் பிசி.

வழக்கத்திற்கு மாறாக மத்திய அரசே நேரடி நிவாரணம் அளிக்கும் அளவுக்கு மெத்தனமான மாநில அரசாக இருக்கிறது.தன்னார்வலர்களுக்கும் அரசுக்குமான ஒருங்கிணைப்பு முழுவதும் இல்லை இன்னும் கூட. எந்த செயல்களிலும் இல்லாத அளவு இந்த முறை பொதுத் தளத்திலும், சமூக வலைதளங்களிலும் படு தோல்வி அடைந்திருக்கிறது ஆளும் அரசு என்றுதான் சொல்ல வேண்டும்.  குறிப்பாக இளையவர்கள் மத்தியில் முற்றிலும் மதிப்பிழந்து செல்லாக் காசாக மாறிவிட்டது அரசின் செயல்பாடுகள். இது கண்டிப்பாக தேர்தலில் எதிரொலிக்கும். ஆனால் வெற்றியை தீர்மானிக்கப் போவது பணம் தான் என முடிவெடுத்து செயல்படுகிறார்கள் போலும். எல்லாவற்றையும் பணம் கொடுத்து வாங்கிவிட முடியாது அதே போலத் தான் எல்லோரையும் பணம் கொடுத்து வாங்கிட முடியாது.  PREDISASTER PREPARATION, DURING DISASTER MITIGATION ல் தான் தோல்வி, RE-HABITATION , RECONSTRUCTION  யாவது சீரிய முறையில் செய்து இழந்த பெயரை மீட்கப் பாருங்கள். இல்லை என்றால் தமிழகத்தில் உங்கள் இருப்பே கேள்விக்குள்ளாக்கப் படும்.

Tuesday, December 1, 2015

வடகிழக்கு பருவ மழை - 1


                        வடகிழக்கு பருவ மழை - 1


எந்த வருடமும் இல்லாத அளவு இந்த வருடம் வடகிழக்கு பருவமழை பின்னி எடுத்து வருகிறது. மழையின் அளவும் பாதிப்பும் குறையும் என்று எதிர்பார்க்கும் போதெல்லாம் அதிகமாகிக் கொண்டே வருகிறது . ஒரு புவிதகவலியல் மாணவனாக எனக்கு  இந்த மழை பற்றியும் மழையின் பாதிப்புகளுக்கான காரணம் குறித்தும் என்னுடைய பார்வையில் புரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்ள இந்த பதிவை எழுத முடிவு செய்தேன். பைனல் இயர் ப்ராஜெக்ட் வேறு இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை. இதையே எடுத்துவிடலாமா எனும் எண்ணமும் வருகிறது. டேட்டா கிடைப்பது தான் கடினம். பார்க்கலாம்.

2005 என்று நினைக்கிறேன் .  எங்கள் ஊர் கண்மாய் நிறைந்து உபரி நீர் வெளியேறிய வருடம். நம்ம தெற்கு வெள்ளாற்றில் கடையக்குடி பாலத்துக்கு மேலே தண்ணீர் சென்றது. சைக்கிளில் சென்று வேடிக்கை பார்த்தது இன்னும் நியாபகம் இருக்கிறது. நம்ம மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுதும்  நல்ல மழை. பெரும் பாதிப்புகள். ஆனால் இந்த முறை வட தமிழகமும் தென் தமிழகமும் மட்டும் தான் பாதிப்பு. உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் அவ்வளவு பாதிப்பு இல்லை. சொல்லப்போனால் மழைஅளவு இன்னும் சராசரி அளவைக்கூட எட்டவில்லை. ஆனாலும் இவ்வளவு உயிர் சேதம் பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன. அதற்கான காரணத்துக்குள் நான் போக விரும்பவில்லை. அது பல செய்தித் தாள்களிலும் தொலைகாட்சி விவாதங்களிலும் அலசப்பட்டுவிட்டது.

தமிழகத்தின் சராசரி மழை அளவு 958-970 மி.மீ. அதாவது வடகிழக்கு,தென்மேற்கு,கோடைமழை அனைத்தையும் சேர்த்து. இதில்  50 -60 %வடகிழக்கு பருவமழைக்கானது. கோவை,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் இரண்டு பருவத்திலும் மழை பெறக்கூடியவை. தேனி,சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் இரண்டிலும் சுமார் மழையே பெறக்கூடியது.  வடகிழக்கு பருவ மழை காலம் எனபது அக்டோபர் முதல் டிசம்பர் வரை. டிசம்பரை சேர்த்தே பெய்திருக்க வேண்டிய  வ.கி மழை சராசரி  485 மி.மீ.ஆனால் டிசம்பரை சேர்க்காமலேயே இது வரை 440 மி.மீ வரை பெய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சென்னை மாவட்டம் மட்டும் அல்ரெடி நூற்றாண்டு சாதனைய  தாண்டிருச்சு. இப்பவே 1000 மி.மீ தாண்டி நாட் அவுட்டா போய்கிட்டு இருக்கு. இன்னும் மூன்று இடங்களில் லோ ப்ரெஸ்ஸர் (low pressure )  உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது ( IMD data ). அதில் ஏதாவது புயலாக இருந்தால் தமிழ்நாட்டுக்கு கெட்ட காலம் தான்.

2013 ஆம் ஆண்டு கேதார்னாத் பெருவெள்ளம் குறித்து மறந்திருக்க மாட்டோம். அந்த பெருவெள்ளத்திற்கு மிகமுக்கிய காரணம்  அதீத மழைப்பொழிவு (sudden rainfall). அதுவும் மேகம் முழுதும் மழை மேகமாக இருந்திருக்கிறது.(cloud monitoring தொழில்நுட்பம் இன்னும் இந்தியாவில் அதிகளவு வளர்ச்சியடையவில்லை ) அதை நமது வானிலை ஆய்வு மையம் கணிக்க தவறியதால் அத்தகைய இழப்பை சந்திக்க நேர்ந்தது. ஆனால் இந்த முறை சென்னை மழைப் பொழிவை துல்லியமாக கணித்தும் கோட்டை விட்டது ஆளும் அதிமுக மற்றும் செயல்படாத முதலமைச்சர். அதற்குள் போக விரும்பவில்லை.

அந்தமானுக்கு தெற்கே உள்ள கடல்பகுதியும் கன்னியாகுமரிக்கு தெற்கே லட்சத்தீவுக்கு கிழக்கே உள்ள கடல் பகுதியும் தான் இந்திய பருவ மழைக்கு 80-90% காரணமாக இருக்கிறது. அதாவது இந்த பகுதிகளில் தான் காற்றழுத்த வேறுபாடு ஏற்பட்டு காற்றழுத்த தாழ்விநிலை,புயல்,சூறாவளி உருவாகி மழை மேகங்களை உருவாக்குகிறது. இந்த கடற்பகுதி நேரடியாக பசிபிக் நீரோட்டங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. எனவே தென் பசிப்பிக்கில் ஏற்படும் மாற்றம் நேரடியாக இந்த பகுதியிலும் மாற்றம் நிகழக் காரணமாய் இருக்கிறது. அங்கே ஏற்படும் வெப்ப மாறுபாடு இங்கேயும் சற்று குறைவாக ஏற்படுகிறது. அது கடற்பரப்பு அழுத்தத்திலும் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. தென் பசிபிக்கில் உருவாக்கப்படும் பருவ மாற்றங்களான எல்நினோ,லாநினா இந்திய பருவ மழையுடன் தொடர்பு உடையதா என்று நான் மேற்கொண்ட மினி பிராஜெக்டில்  ( இதையே மெயின் பிராஜெக்டாக எடுக்கவும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் , உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன் ) குறிப்பிடத்தகுந்த முடிவுகள் கிடைத்தது. அதற்கும் இப்போதைய மழைப் பொழிவுக்கும் சம்பந்தம் இருக்கிறதா ...............?அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாய் பார்ப்போம்........!

Wednesday, September 24, 2014

மங்கல்யான் ! கனவு நனவானது !!!!


மங்கல்யான் ! கனவு நனவானது !!!!


உலக வல்லரசுகளே உற்றுக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய கனவை நம் விஞ்ஞானிகள் நனவாக்கியதுடன் , அந்த வல்லரசுகளை எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்கச் செய்துவிட்டார்கள். இந்தியன் என்பதற்கான பெருமை இப்போது இன்னும் ஒருபடி மேலே ஏறிப் போய்விட்டது, மற்ற நாட்டவர்களுக்கு மத்தியில். என்னடா, ஒரு செயற்கைக் கோள் வெற்றிக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா ? என நீங்கள் நினைத்தால் அது தவறு.ஆம் இது சாதாரண திட்டம் கிடையாது. சந்திரயான் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கருவிகளில் பெரும்பாலானவை வேற்று நாடுகளைச் சேர்ந்தது. ஆனால் மங்கல்யானில் பயன்படுத்தப்பட்டவை அனைத்தும் நமது உழைப்பு, நமது கண்டுபிடிப்பு. இதுவரை உலக நாடுகளில் நிகழ்ந்த 51 செவ்வாய்க் கோள் பயண முயற்சிகளில் 21 பயணங்கள்தான் வெற்றி அடைந்துள்ளன.ஆனால் நாம் முதல் முயற்சியிலேயே வெற்றியடந்திருக்கிறோம் இதிலிருந்தே இந்த வெற்றி எவ்வளவு முக்கியமானது என உணர்ந்து கொள்ளலாம்.ஒரு வேளை இது தோல்வியடைந்திருந்தால் இழப்பு 450 கோடி பணம் மட்டுமல்ல , உலக நாடுகள் நம் விண்வெளித் துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் இழந்திருப்போம்...


Thursday, September 18, 2014

புவித்தகவலியல்-GEO INFORMATICS


புவித்தகவலியல்-GEO INFORMATICS

நான் படிக்கும் பொறியியல் படிப்பு குறித்து எழுதிய முந்தைய பதிவின் தொடர்ச்சி தான் இது. முந்தைய பதிவு....


http://pudhukaiseelan.blogspot.com/2014/09/be-geo-informatics-engineering.html

புவித்தகவலியல் (GEO INFORMATICS) என்பது பூமியைப் பற்றிய தகவல்களை சேமித்து உபயோகப்படுத்துவது என்பதாகும்.அவ்வாறு சேமிக்கும் தகவல்களை எந்த முறைகளைப் பயன்படுத்தி சேமிக்கலாம், எந்த முறைகளைப் பயன்படுத்தி உபயோகிக்கலாம் என்பதைப்பற்றி படிக்கும் பொறியியல் தான் புவித்தகவலியல் பொறியியல்(GEO INFORMATICS ENGINEERING) ஆகும்.இன்று சாதாரண குடிமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ள ஜி.பி.எஸ் (GLOBAL POSITIONING SYSTEM)எனப்படும் குளோபல் பொஸீஸனிங் சிஸ்டம் அதாவது புவியிடங்காட்டி முறை என்பது இந்த புவித்தகவலியலின் ஒரு பயன்பாடு தான்.(பார்த்தவுடன் புரியும் வகையில் எளிமையான படங்களே கொடுக்கப்பட்டுள்ளது)



Friday, September 12, 2014

நான் ஏன் இஞ்சினியரிங் (B.E GEO INFORMATICS ENGINEERING ) சேர்ந்தேன் ?


நான் ஏன் இஞ்சினியரிங் (B.E GEO INFORMATICS ENGINEERING ) சேர்ந்தேன் ?


என்னுடைய PROFILE பார்த்தவர்களுல் சிலர் நான் படித்துக் கொண்டிருக்கும் GEO INFORMATICS ENGINEERING   என்பது எதைப்பற்றியது எனக் கேட்டனர்.அதனால் என்னுடைய பொறியியல் படிப்பைப் பற்றி விரிவாகவும் முடிந்த அளவு தமிழிலும் எழுத முயற்சி செய்கிறேன் !! அதற்கு முன்னால் நான் ஏன் இந்த படிப்பில் சேர்ந்தேன் ? எப்படிச் சேர்ந்தேன் ? என்பதையும் சொல்லிவிட்டு அடுத்த பதிவில் அதைப் பற்றி  விரிவாக எழுதுகிறேன்.