Tuesday, February 11, 2014

காதலர் தினம்

காதலர் தினம்


இன்றைய நவ நாகரிக உலகில் காதலர்கள் தினம் என்பது இன்றியமையாததாகிவிட்டது. மேற்க்கத்திய கலாச்சாரம் தொற்று நோய் போல பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படி ஒரு பதிவு அவசியமா என்றால் நிச்சயம் அவசியமானது தான்.









புதுமையை எவ்வித தணிக்கைகளும் இன்றி ஏற்றுக்கொள்வதில் தமிழன் முதன்மையானவன் என்பதற்கு வலுவூட்டும்  பல காரணங்களை கூறிக்கொண்டே போகலாம். சில நேரங்களில் நன்மைகளாகவும் பல நேரங்களில் தமிழனின் தனித்துவத்தை இழக்கச் செய்பவைகளாகவும் உள்ளன அந்த புதுமைகள்.


இங்கிலாந்து மண் என்பது குளிர்ச்சியான பிரதேசம். அங்கு உடம்பு முழுவதையும் மறைத்தால் தான் குளிரிலிருந்து தாக்குப்பிடிக்க முடியும். ஆங்கிலேயர்கள் இந்தியா வந்த பிறகும் கூட அவர்கள் உடையை மாற்றிக்கொள்ள முயற்சிக்கவில்லை. காரணம் அவர்களின் உடை நம்முடைய உடையிலிருந்து வித்தியாசமாக இருந்ததால் தனித்துவமாக தெரிய வேண்டுமே என்பதற்காக கடைசி வரை அவர்கள் இந்திய உடைகளை அணிய விரும்பவில்லை.


                                            

ஆனால் இந்தியா கோடைப்  பிரதேசம். இங்கு உடலை காற்றோட்டமாக வைத்திருப்பது தான் வெயிலிலிருந்து காத்துக்கொள்வதற்கான முறை. எனவே தான் நம்முடைய பாரம்பரிய உடைகளாக வேட்டி, சேலை இருந்தது . அனால் தமிழர்கள் தான் எதயும் பின்பற்றுபவர்களாயிற்றே! ஆங்கிலேயர்களை பார்த்து பேண்ட்,சர்ட் அணிய ஆரம்பித்தோம். இன்று நமது பாரம்பரிய உடைக்கு தினம் கொண்டாடும் நிலைக்கு வந்துவிட்டோம்.(வேட்டி தினம்) அது மட்டுமா வளாக நேர் காணலில் இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்ற நிலையே வந்துவிட்டது.


உடையில் மட்டுமல்ல மதத்தில்,கல்வி முறையில்,மொழியில் ஏன் உண்ணும் உணவில் கூட அவர்களை பின்பற்ற ஆரம்பித்து விட்டோம். நன்மைகள் இல்லாமல் இல்லை. இருந்தாலும் நாம் நமது தனித்துவத்தை இழந்துவிட்டோம் என்பதும்  உண்மை தானே!. இவ்வளவு ஏன் நமது உறவுகளான மலயாளிகளும், தெலுங்கர்களும், கன்னடர்களும் இன்னும் சில விசயங்களில் அவர்களது தனித்துவத்தை இழக்கவில்லை.





                                         



சரி இப்போது விசயத்திற்கு வருவோம்!காதலர் தினம் என்பது உலகம் முழுவதும் கொண்டாடப்படும்  விழாவாகிவிட்டது.சில வருடங்களாய் இந்தியா முழுவதுமே கூட கொண்டாடப்பட்டு வருகிறது . தமிழகமும் இதற்கு விதி விலக்கல்ல. தினங்கள் கொண்டாடுவதற்கு என சில முறைகள் இருக்கிறது என்பதை காற்றில் பறக்கவிடும் விழாவாகக்  காதலர் தினம் தற்போது மாறி வருகிறது என்று சொன்னால் அது மிகையில்லை .

பொது இடத்தில் கொஞ்சிக்குலாவுவதும், கடற்கரை, பூங்கா போன்ற பொது இடங்களில் அத்து மீறுவதும் கூட சமீப காலங்களில் அரங்கேறி வருகிறது.
காதலர் தினம் கொண்டாடக்கூடாது என்பது என் வாதமல்ல. அதனை ஒரு சராசரி தினமாக கொண்டாட வேண்டும் என்பதுதான் என் வாதம்.


காதலின் அடையாளமாக பரிசளித்துக்கொள்வது, வாழ்த்து தெரிவிப்பது என்பன போல பொதுவானவர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்.

 தமிழனை பொறுத்தவரை காதலுக்கு என்றுமே எதிரி கிடையாது. சங்க இலக்கியம் தொட்டு சங்கர் படம் வரை காதல் இல்லாமல் தமிழன் இல்லை. அதற்காக ஒரு தினத்தை ஒதுக்கியவனும் தமிழன் கிடையாது. ஏனென்றால் பிற இனங்களை போல காதலை ஒரு உணர்வாக பார்க்கவில்லை. அதனை உயிரோடு கலந்த வாழ்க்கையாகப் பார்த்தவன் தான் தமிழன். எனவே அத்ற்கென்று ஒரு நாளை ஒதுக்கவேண்டிய அவசியமும் தமிழனுக்கு ஏற்படவில்லை என்றே கூறலாம்.


                                          




என்னை பொறுத்தவரை உண்மையான காதலர்களுக்கு எல்லா நாளுமே காதலர் தினமாகத்தான் இருக்க முடியும் . எனவே காதலர் தினத்தை கொண்டாடித்தான் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்படியே கொண்டாடினாலும் மற்றவர்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாதவாறு கொண்டாட வேண்டும் என்பதே என் விருப்பம், ஏன் அனைவரி விருப்பமும் கூட அதுவாகத்தான் இருக்கும்.


உங்களுடைய காதலர் தின கொண்டாட்டங்களைக் கண்டு முகம் சுளிக்கும் அத்தனை பேரும் உங்களை மட்டுமல்ல இந்த காலத்துக் காதலையே தவறாக நினைத்துவிடும் வாய்ப்புண்டு என்பதை மனதில் நினைத்து காதலர் தினம் கொண்டாடப் போகும் அனைத்து உண்மையான காதலர்களுக்கும் என் மனமார்ந்த காதலர் தின நல்வாழ்த்துகள்.




                           


உங்கள் கருத்துகளை கூறலாம்! 

Wednesday, February 5, 2014

சீமைக்கருவேல மரம்

சீமைக்கருவேல  மரம்

முன்பொரு காலம் நம் தென்னிந்தியாவில் கடுமையான பஞ்சம் நிலவியபோது, மக்களுக்காக பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது வெளிநாட்டிலிருந்து  சிலேபிக் கெண்டை மீனும், சீமைக்கருவை மரமும் கொண்டுவந்தார் என  கிராமத்தில் இன்றளவும் சொல்ல நானே பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் தான் ஹெலிஹாப்டரில் பறந்து சீமைக்கருவை மரத்தின் விதைகளை தூவியதாகவும் கூட சில பெரியவர்கள் கூறுகின்றனர். ஆனால் இதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை. விக்கிபிடியாவில் 1950 என போட்டிருக்கிறார்கள்.














ஆனால் 50 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் இவையிரண்டும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏன் என் தாத்தா கூட அவர் வீட்டிலிருந்து கண்மாய் கரை வரை எவ்வித இடையூறும் இல்லாமல் வெட்ட வெளியாக இருந்ததாக என்னிடம் கூறியிருக்கிறார்.இன்று அவ்வாறு காண முடியவில்லை என்றும் கூறினார்.ஆம் உண்மைதான் இன்று வெட்டவெளிகளாக இருக்கும் பல இடங்களும் சீமைக்கருவை  மரங்கள்  நிறைந்திருக்கிறது.


சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது.அதில், தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற கலெக்டர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. 


இதனுடைய தாவரவியல் பெயர் ப்ரோசோபிச் சூலிஃப்லோரா என்பதாகும்.


இன்றைய நாட்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை கைவிட்டுவரும் நிலையில், அந்த நிலங்களில் எல்லாம் இந்த மரங்கள் மண்டி வருகின்றன. இன்றைய தேதியில் மட்டும் இதுவரை சுமார் 9 லட்சம் பேர் விவ‌சாயத்தை விட்டுள்ளதாக தினத்தந்தி கூறியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் வயல்களில் இந்த மரங்களையே வளர்ப்பர்?  ஆம் வளர்க்கவில்லை எனினும் இது தானாகவே வளர்ந்துவிடும்!  அவர்களும் அதை அகற்ற விரும்பமாட்டார்கள்.  ஏன் என்றால் அந்த மரத்திற்கு நீர் ஊற்ற தேவையில்லை,பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அனால் அதனுடைய விறகு நல்ல விலை போகும். எங்கள் ஊர் பகுதிகளில், ஒரு டன் 8000 ரூபாய் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! எனவே அதை அகற்ற கண்டிப்பாக யாரும் விரும்ப மாட்டார்கள் என்பதே நிதர்சன உண்மை.


தீமைகள் ;


1.இந்த கருவை மரங்களால், நமக்கு மட்டுமல்ல நமது மண்வளத்திற்கும் சுற்றுச்சூழலிற்கும் பெரும் கேடு. ஆம் இந்த மரங்கள் ஆணிவேர் தன்மை கொண்டவை ஆதலால் தண்ணீரைத் தேடி எவ்வளவு ஆழம் வேண்டுமானாலும் பயணிக்கவல்லவை.

2.இவை மற்ற மரங்களை போலலாமல் பகலில் குறைவான ஆக்ஸிஜனையும் இரவில் அதிகமான கார்பன்டை ஆக்ஸைடையும் வெளிவிடுபவை, இதனால் வளிக்காற்றிலுள்ள ஆக்ஸிஜன் அளவிற்கு ஆபத்து உள்ளதாக கணித்திருக்கிறார்கள், அறிவியலார்கள். 


3.இவை மட்டுமல்ல இன்று கிராமப் புறங்களில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் இவை செழித்து வளர்கின்றன. இதனால் நீரின் நிறமே மாறிவிடும் நிலை உள்ளது.

4.அதனுடைய முட்கள் மிகவும் கூராக இருப்பதால், காலில் குத்துவதுடன் காலில் தங்கினால் பெறும் ஆபத்துதான். 


5.இவை வளர்ந்த மண்ணில் மீண்டும் பயிர்செய்ய முயன்று தோற்றவர்களை நானே பார்த்திருக்கிறேன். இவற்றை அகற்றிய 4லிருந்து 10 வருடங்களுக்கு பிறகுதான் அந்த மண் பழைய நிலையை அடைகின்றது. 


6.எல்லாவற்றுக்கும் மேலாக இவை நிலத்தடி நீரை முற்றும் உறிஞக்கூடியவையாக இருப்பதுதான் மெகப்பெரிய தீங்கு. இப்போதே நகர் புரங்களில் 800 அடி 100 அடி சென்று விட்டனர். கிராமங்களில் சற்று பரவாயில்லை. ஆனால் இந்த மரங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில்  நிலத்தடி நீர் சுத்தமாக இல்லாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.


7.மேலும் பறவைகளின் எதிரியாகவும் இவை உள்ளது. இந்த மரங்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் உள்ள மற்ற மரங்களில் கூட பறவைகள் கூடு கட்டுவதை தவிர்க்கின்றன.பறவைகள் மட்டுமல்ல கால் நடைகளும் இதனுடைய காயை தவிர வேறு எதையும் முகர்ந்துகூட பார்ப்பதில்லை. காய்களும் அளவோடுதான். அதற்குப் பிறகு தீண்டுவதில்லை. 


கால் நடைகள் மூலமாகத்தான் இவைப் பலுகிப்பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.


எனவே இதை அகற்றுவது அவசியமாக உள்ளது. அனால் இதை அகற்றுவதும் அவ்வளவு சுலபமில்லை. அகற்றிவிட்டு அந்த இடத்தை தீ வைத்தால் தான் இது மீண்டும் வளராமல் இருக்கும். மேலும் இதனுடைய விதை 1 வருடம் வரையிலும் வீரியத்துடன் வளரும் தன்மை உடையதாக இருக்கும். எனவே தான் இப்போது அகற்ற ஆரம்பித்தால் தான் இன்னும் 5‍- 8 வருடங்களுக்குள் முழுமையாக அகற்றமுடியும்.எனவே இந்த விசயத்தில் ஆகாயத்தாமரை அகற்றுவது போல மெத்தனமாக இல்லாமல், அரசாங்கம் சற்று கூடுதல் அக்கறை எடுக்கவேண்டும் என்பது என் விருப்பம். 


அரசாங்கம் மட்டுமல்ல நாமும் நம் நிலங்களிலுள்ள இந்த மரங்களை அகற்ற குறைந்தபட்ச முயற்சியாவது எடுக்க வேண்டும். நம் போன்றவர்களுக்கு இதனுடைய தீங்குகளை எடுத்து சொல்ல முயல வேண்டும்.




பயன்கள்;

 இதில் பயன்களும் இருக்கின்றன. ஆனால் நிலத்தடி நீரை உறிஞ்சுதல்  எனும்  தீமையோடு ஒப்பிடும் போது எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவை,

1.எரிபொருளாக பயனளிக்கிறது.

2. கால் நடைகள்  இதனுடைய காய்களை உணவாக அளவோடு எடுத்துக்கொள்ளும்.

3.ஏழைகளுக்கு பொருளாதாரத்தில் உதவுகிறது.

4.இதனுடைய காயிலிருந்து உணவாக, காபியாக பெரு போன்ற நாடுகளில் பயன்படுவதாக சொல்கிறார்கள்.

மற்றபடி பெரிதாக பயன்கள் இல்லை. 

சிலர் இந்த மரங்களுக்கு அதரவாக பதிவுகள் போட்டிருப்பதையும் காண முடிகிறது. பிறகு ஏன் இதனுடைய தாயகம் என்று சொல்லப்படும் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகள் இவற்றை அருங்காட்சியகங்களில் மட்டுமே  வளர அனுமதிக்க வேண்டும்! 


மேலும் இவை வளர்ந்த மண் விவசாயத்தினை குறைக்கிறது என்பதும் நிரூபனமான உண்மை. அகற்றுவதில் உள்ள பிரச்சனைகளை கலைய வேண்டுமே தவிர அந்த மரத்திற்கு ஆதரவு தெரிவிப்பது முட்டாள் தனமான ஒன்று என்பது என்கருத்து. மாற்றுக்கருத்துகள் வரவேற்கப்படுகின்றன!



இன்னொரு முக்கியமான விசயம் இதனை அகற்றும் போது நம் பாரம்பரியமான‌
கருவேல மரங்களை (கிரமங்களில் நாட்டுக்கருவை) அகற்றிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.




அதனால் மண்வளத்திற்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.இதனுடைய வேர் அமைப்பு சல்லிவேர் அமைப்புடையது. மேலும் உயரமாக வளர்ந்துவிட்டால் இதனுடைய தண்டுப்பகுதிகளில் முட்கள் வருவதில்லை. இதனுடைய இலைகளை கால் நடைகள் விரும்பி உண்ணும்.


இதனுடைய விறகு சீமைக்கருவை போல் அல்லாமல் மிகவும் உறுதி வாய்ந்தது. 

கலப்பைகள், மண்வெட்டி, கொடாரி, கலைக்கொட்டு போன்றவை செய்ய விவசாயிகள் பெரிதும் விரும்புவது இந்த மரத்தைத்தான்.இதனுடைய முட்கள் மட்டுமே கொஞ்சம் அபாயகரமானது. 

மற்றபடி இது நிழலுக்கேற்ற மரம். நல்ல குளிர்சியாகவே இருக்கும்  இதன் நிழல்."ஆலும் வேலும் பல்லுக்குறுதி" என்பதில் உள்ள வேல் இந்த மரத்தைக்குறிப்பதுதான். 

இதனிலிருந்து வளியும் கோந்து நன்றாக ஒட்டும் தன்மை உடையது. இதனுடைய காய்கள் கிலுகிலுப்பை என சிறுவர்களால் விளையாடப்படுவதும் உண்டு.








 எனவே அகற்றும் போது நாட்டுக்கருவேல மரங்களை அகற்றி விடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.


இனியும் காலம்  தாழ்த்தாமல் சீமைக்கருவேல மரங்களை அகற்ற சீரிய முயற்சிகளை எடுக்க  அரசும், அரசு சாரா இயக்கங்களும் ,பொதுமக்களும், ஏன் ? நாமும் கூட முன்வரவேண்டும் என்பதே என் விருப்பம்.


உங்கள் கருத்துகளை கூறலாம்!

படங்கள் உதவி; விக்கிபிடியா (நன்றி)

                                                                                                                  - உங்கள் சீலன்!

Tuesday, February 4, 2014

ஃபேஸ்புக் கவிதைகள்!

நான் முகப்புத்தகத்தில் எழுதிய சில காதல் கவிதைகள்!

1.அவளையே நான் பார்த்துக்கொண்டிருந்த போது...

திடீரென்று என்னை அவள் பார்த்தாள்!

மின்னல் வெட்டியதைப் போன்ற உணர்வு!

இதற்குப் பெயர் தான் காதலோ?


2.உன்னோடு வாழ்ந்தால் நன்றாக இருக்கும்

என எண்ணுவதை விட‌

உன்னோடுதான் வாழ்வேன் என

எண்ணுவது தான் உண்மையான காதல்!




3.கண்கள் பார்க்கிறது! காதுகள் கேட்கிறது!

வாய் தானே பேசவேண்டும்!‍ என் அன்பே

உன்னோடு மட்டும் என் இதயம் பேசுவது எப்படி?


4.நேரமிருந்தால் நினைத்துப்பாருங்கள்

நேரில் வரமுடியாவிட்டாலும் உங்கள்

நினைவிலாவது வருவேன்.


5.ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் அவளை

மட்டும் கண்டுபிடித்துவிடுகிறது என் கண்கள்!

காதலுக்கு கண் இல்லை என்று யார் சொன்னது?


6.உன்னை அவள் காதலிக்கவில்லை என கவலைப்படாதே!

உன்னுடைய காதல் காதலிக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்!

காலத்திற்கு கட்டாயம் தெரியும்!





உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்!






Saturday, February 1, 2014

ரஜினியின் ஆளுமை

ரஜினியின் ஆளுமை





நான் சிறுவனாக இருக்கும் போது எல்லாரையும் போலவே எனக்கும் 
இரண்டின் மீது அபிப்ராயம் இருந்தது. ஒன்று கிரிக்கெட்! மற்றொன்று சினிமா! என் வயது தோழர்கள் அனைவருக்கும் விஜய், அஜீத் பிடித்திருந்தது.(கில்லி,வில்லன் வந்த சமயங்கள்) ஆனால் எனக்கு மட்டும் ரஜினியை பிடித்திருந்தது. என்ன காரணம் என சொல்லத்தெரியவில்லை. அதேபோல கிரிக்கெட், அனைவருக்கும் சச்சின்,கங்குலி பிடித்திருக்க எனக்கு மட்டும் ராகுல் டிராவிடை பிடித்திருந்தது.
ஆனால் இதற்கு காரணம் இருந்தது.. அவருடைய விக்கெட் கீப்பிங் ஸ்டைல் மற்றும் அணியை வெற்றி பெற வைக்கும் திறமை.





இப்பொழுது எதற்கு இதை கூறுகிறேன் என நீங்கள் நினைக்கலாம். காரணம் இருக்கிறது....

திரைத்துறையில் ரஜினியின் ஆளுமை எவ்வாறு இருக்கிறது என்பது நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆனால் மக்கள் மத்தியில் அவருடைய ஆளுமை எப்படி இருக்கிறது என்பதை எனக்கு ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு!






1975 களில் திரைத்துறையின் கதவைத்திறந்து உள்ளே நுழைந்த அவர் 1980 ல் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த அவர், 1985 களில் திரையுலகின் முதல் நிலைக்குச் சென்ற அவர், 1990 களில் மக்கள் நாயகனாக ஏற்றுக்கொள்ள‌ப்பட்ட அவர், 1990  களில் அரசியல் சக்தியாக விளங்கிய அவர், 2010 களில் உலக நட்சத்திரமாக ஜொலித்து வரும் அவர் இன்று மக்கள் மத்தியில் எவ்வாறு பார்க்கப்படுகிறார்?






நான் இங்கு சொல்லும் நிகழ்வுகள் அனத்தும் சிறிதும் மிகைப்படுத்தப்ப‌டாதவை என்பதையும், அனைத்தும் நான் நேரில் பார்த்தவை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கே முன்னர் தோன்றியது , ரஜினி 90 களில் மக்கள் செல்வாக்கு நிறைந்தவராக இருந்திருக்கலாம்! இப்போது அப்படி இல்லை, அனால் ஊடகங்களால் இன்னும் அப்படி சித்தரிக்கப்படுகிறார் என்று நானே பல நேரங்களில் நினைத்ததுண்டு! ஆனால் இந்த நிகழ்ச்சிகளை பார்த்த பிறகு ஊடகங்கள் கூறுவது உண்மையே! இப்போது மட்டுமல்ல எப்போதும் அவருடைய மக்கள் செல்வாக்கு குறையாது என்பதையும் தெரிந்துகொண்டேன்.


நிகழ்ச்சி1;

 நான் கல்லூரி விடுமுறைமுடிந்து மீண்டும் கல்லூரி செல்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து மதுரைக்கு (திருநெல்வேலி செல்வதற்காக) இரவு 9.30 க்கு பேருந்தில் ஏறினேன். வண்டி கிளம்பியவுடன் பேருந்தில் உழைப்பாளி திரைப்படம் போட்டார்கள். என்ன ஆச்சரியம்  வண்டியில் ஒருவருமே தூங்கவில்லை! இது அது சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் என்பதால் தூங்காமல் பார்த்திருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம்? ஏன் நானே அப்படித்தான் முதலில் நினைத்தேன்! ஆனால் போகப்போக பேருந்தில் நிலமை மாறியது. ஒருகட்டத்தில் ரஜினி  பன்ச் வசனங்கள் பேசும் போது கைதட்ட ஆரம்பித்துவிட்டனர். இன்னும் ஒருபடி மேலே சென்று ஒரு 10, 15 பேர் விசில் அடித்து தலைவா என்று குரல் எழுப்பி திரை அரங்கமாகவே மாற்றி விட்டனர்.  பொறுத்திருந்து பார்த்த பேருந்தின் நடத்துனர் படத்தை நிறுத்திவிட்டு படம் பார்ப்பதாக இருந்தால் அமைதியாக பார்க்க வேண்டும் இல்லையெனில் படம் போடப்பட மாட்டாது என்று எச்சரிக்கை செய்த பிறகுதான் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர்! பிறகு இரவு 11.30 மணிக்கு? இப்படி நடந்து கொண்டால்.. என்னதான் பலருக்குப் பிடித்திருந்தாலும் சிலர் இதையெல்லாம் ரசிக்க மாட்டார்கள் தானே? 





நிகழ்ச்சி2;

  சிவாஜி 3டி படம் பார்ப்பதற்காக ஒரு வெள்ளிக்கிழமை படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட  3 வாரம் கழித்து நண்பர்களுடன் நெல்லை முத்துராம் திரையரங்கிற்கு சென்றேன். கீழே ராம் திரையரங்கில் துப்பாக்கி எனும் மெகா ஹிட் திரைபடம் ஓடிக்கொண்டிருந்தது.. திரையரங்கில் அதிக கூட்டம் அலை மோதியது. துப்பாக்கி படத்திற்கு வந்தவர்களாய் இருக்கும் என உள்ளே நுழைந்தால், இல்லவே இல்லை அனைவரும் துப்பாக்கிக்கு வரவில்லை ஒரு ரீரிலீஸ் திரைப்படம், அதுவும் பலமுறை டி.வியில் போடப்பட்ட திரைப்படம், வந்து கிட்டத்தட்ட 3 வாரம் நிறைவடையப்போகும் திரைப்படமான சிவாஜி திரைப்படத்திற்கு! அதுவும் அந்த நாள் விடுமுறை தினம் கூட இல்லை! வெள்ளிக்கிழமை!  ஹவுஸ் புல் என்று பொய் கூற மாட்டேன்! ஆனால் ஏ.சி இருக்கைகளுக்கான டிக்கெட் எங்களுக்கு கிடைக்கவில்லை. சாதாரண இருக்கை
களிலும் கிட்டத்தட்ட 70% சீட்டுகள் நிரம்பி விட்டன! திரையரங்கினுள் நடந்ததை நான் சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும்.

 என்னுடைய சில விஜய் ரசிக நண்பர்கள் கீழே ஓடிக்கொண்டிருந்த மெஹாகிட் திரைப்படமான துப்பாக்கிக்குச் சென்றிருந்தனர். அவர்கள் வெளியில் வந்த பிறகு கேட்டேன். படதிற்கு கூட்டம் எப்படி என? 15% இருக்கைக‌ளே நிரம்பியிருந்ததாகவும்,அதற்கு  அன்று வேளை நாள் எனவும் காரணம் கூறினர்.

இதேபோல பின்னர் நானே சிங்கம் 2 படம் ரிலீஸான முதல் வார இறுதி நாள் இரவுக்காட்சிக்கு நெல்லை பேரின்ப விலாஸ் போனேன். அப்போதும் 20 % இருக்கைகள் கூட நிரம்பியிருக்கவில்லை! சிங்கம்2 வும் மெஹா ஹிட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது!








நிகழ்ச்சி3;   

இன்னொரு முறை கல்லூரியிலிருந்து ஊருக்கு போவதற்காக, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையதிற்கு இரவு 12 மணிக்கு வந்திருந்தேன். அந்த பேருந்து நிலையத்தில் தினமும் இரவு நேரத்தில் திரைப்படங்கள் போட்டு பயணியர் காத்திருக்கும் வளாகத்தின் பின்புறம் உள்ள கன்ட்ரோல் ரூமில் அதிகாரிகள் பார்ப்பது வழக்கம். போடப்படும் திரைப்படங்களின் ஒலி பேருந்து நிலைய வளாகத்தில் ஆங்காஙே இருக்கும் ஒலிப்பெருக்கியில் கேட்கும். நான் பல முறை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செண்றிருக்கிறேன். அன்றுமட்டும் அந்த அறைக்கு வெளியே ஏறத்தாழ 50 70 பேர் கூட்டமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். நான் அதை கவனிக்க நேரம் இல்லாதவனாய் என்னுடைய பேருந்தில் ஏறிவிட்டேன். ஏறிய‌ பிறகு ஒலிப்பெருக்கியில் கேட்ட சத்ததை வைத்து அது அண்ணாமலை திரைப்படம் என அறிந்து கொண்டேன்! எனக்கு ஒரே ஆச்சரியம்,இதுவரை பல திரைப்படங்கள் அங்கு ஓடி நான்  ஊரிலிருந்து வரும்போதும்  போகும்போதும் பார்த்திருக்கிறேன். ஒருநாள் கூட அன்று கண்ட காட்சிகளை பார்க்கவில்லை.இனிமேல் பார்த்தாலும் அதுவும் ரஜினி படமாகத்தான் இருக்கும் என நான் நினைக்கிறேன்!



மேற்கண்ட மூன்று நிகழ்ச்சிகளும் ஊடகங்கள் கூறுவது உண்மைதான் என எனக்கு உணர்த்தியது..  இவற்றை எதற்காக நான் கூறுகிறேன் என்றால் நேற்று ரஜினியின் பெங்களூர் வீட்டில் ரசிகர் கூட்டம் கூடியதை ஊடகங்கள் வெளியிட்டதை பார்த்த என் நண்பன் என்னிடம் 10 பேர் வந்திருப்பாங்க, 100 பேர்னு பொய் சொல்லீட்டாங்கடா. இப்பல்லாம் ரஜினிக்கு செல்வாக்கு இல்லை என நான் முன்னர் நினைத்த கேள்வியை என்னிடம் கேட்டான். அப்பொது தோன்றியது தான், அவனிடம் என் அனுபவங்களை கூறியபோது இதை ஒரு பதிவாக போடுமாறு கூறினான்! 




ரஜினி இன்று மட்டும் அல்ல என்றுமே மக்கள் செல்வாக்கு குறையாதவர்! எத்தனை விமர்சனங்கள் அவர்மீது வந்தாலும் அவருடைய மக்கள் செல்வாக்கு குறையாது..

3 வருடங்களுக்கு ஒரு முறை படம் நடிக்கும் போதே இப்படி என்றால்,முன்னர் போல‌ வருடத்திற்கு 3 படம் நடித்தால்?











உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்!